சென்னை, ஜன.21 “உலகம் உங்கள் கையில்“ எனும் மாபெரும் திட்டத்தின்கீழ், சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு அமைச்சர்கள் மடிக்கணினிகளை வழங்கினார்கள். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று (20.1.2026) சென்னை. இராஜா அண்ணாமலை மன்றத்தில், “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின்கீழ், சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு மடிக்கணினிகளை வழங்கினார்கள்.
முதலமைச்சர் கடந்த 05.01.2026 அன்று சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மய்ய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் மூலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் கலை. அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உட்பட பல்வேறு கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு ரூ.2,172 கோடி மதிப்பீட்டில் 10 இலட்சம் மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். அரசின் இத்தகைய முன்முயற்சிகள் மாணவர்களை உலகளாவிய போட்டித் திறன் கொண்ட மனித வளமாக அவர்களை உருவாக்கும் ஒரு வலுவான அடித்தளமாக திகழ்கிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ் பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பல் மருத் துவக் கல்லூரி ஆகிய 5 மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம். துணை சுகாதார படிப்புகள் மற்றும் செவிலியர் படிப்புகள் பயிலும் 1,520 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோரால் நேற்று (20.1.2026) வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அய்ட்ரீம் மூர்த்தி, மோகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி இராஜகுமாரி, சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தாராமன், அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரவிந்த், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கவிதா, ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஹரிஹரன், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பிரேம்குமார் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
