அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்?-மஞ்சை வசந்தன்

10 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆன்மிகம் மக்களை அறவழியில், கட்டுப்பாட்டோடு, நீதி, நேர்மை, வாய்மை வழியில் வழி நடத்துகிறது. கடவுள் சார்ந்து அறக்கருத்துகளை ஆன்மிகம் வைப்பதால், அது அச்சம் சார்ந்த ஒரு கட்டுப்பாட்டை மக்களிடம் உருவாக்குகிறது. எனவே, ஆன்மிகம் மக்களுக்கு கட்டாயத் தேவை. ஆன்மிகக் கருத்துகள் மக்களிடம் பரப்பப்பட வேண்டும் என்று நீண்ட  காலமாகச் சொல்லி வருகின்றனர்.

கட்டுரை

ஆனால், இக்கருத்துகள் சரியா? உண்மையா? என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமாகிறது.

தந்தை பெரியார் இப்படிக் கூறுகின்றவர்களைப் பார்த்து ஓர் ஆழமான கேள்வியை எடுத்துக்காட்டோடு வைத்தார்.

“உலகில் குற்றச் செயல் செய்கிறவர்கள், திருடர்கள், பொய் கூறுகிறவர்கள், அடுத்தவர் சொத்தை அபகரிக்கின்றவர்கள், கொலையாளிகள், வன்புணர்வு செய்கின்றவர்கள், ஏமாற்றுகின்றவர்கள், மோசடி செய்கின்றவர்கள், கொடுமை செய்கின்றவர்கள், நேர்மையற்றவர்கள், தப்பு செய்கின்றவர்கள் இவர்கள் எல்லாம் யார்? கடவுளை நம்புகிறவர்கள், ஆன்மிகவாதிகள். சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்களைக் கணக்கெடுத்து ஆய்வு செய்தால் 99.1% பேர் கடவுளை நம்பக்கூடியவர்கள், ஆன்மிகவாதிகள்! அப்படியென்றால் ஆன்மிகத்தால் என்ன பயன்?” என்று கேட்டார். அதற்குமேல் ஒரு படி மேலே சென்று ஆன்மிகம் கூறுகின்ற கடவுள்களில் எந்தக் கடவுள் யோக்கியமான, நேர்மையான, ஒழுக்கமான கடவுள் என்று கேட்டார்.

பெரியார் இப்படிக் கேட்டது ‘சுர்ர்’ என்று சுட்டாலும், உண்மை அதுதானே? யாராவது மறுக்க முடியுமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும், ஆன்மிகம் கூறுகின்ற கதைகளை, தத்துவங்களை, கடவுளின் கொள்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவை அறம் வளர்க்கக் கூடியவையா?

சிறுத்தொண்டர்

63 நாயன்மார்களில் ஒருவர் சிறுத்தொண்டர். இவரது கதையை அனைவரும் அறிவர். எல்லா ஊர்களிலும் சிறுத்தொண்டர் நாடகம் நடத்தப்படுகிறது. இவர் பக்தியின் இலக்கணமான, சிவத்தொண்டின் உச்சமாகக் காட்டப்படுகின்றார். அப்படி அவர் என்ன செய்தார்?

தன் பிள்ளையை உயிரோடு அறுத்து, கறி சமைத்து, சிவனடியாருக்கு உணவு படைத்தார். இப்படிப்பட்ட கொலைக் குற்றம் செய்தவர் பக்தரா? அவர் செயல் பக்தியின் அடையாளமா?

சில நூறாண்டுகளுக்கு முன் வடமாநிலங்களில் மனிதக் கறி சாப்பிடும் வழக்கம் இருந்தது. அப்படிச் சாப்பிடும் சாமியார் ஒருவர் சிறுத்தொண்டர் வீட்டுக்கு வருகிறார். அவருக்கு விருந்து படைக்கச் சிறுத்தொண்டர் முற்படுகிறார். அதை அறிந்த சாமியார் எனக்கு உங்கள் பிள்ளையைக் கறி சமைத்து விருந்தளிக்க வேண்டும் என்கிறார்.

சிறுத்தொண்டரும், அவரது மனைவியும் பிள்ளை பள்ளிக்கூடம் சென்றிருக்கிறான் என்கின்றனர். அவனை அழைத்து வந்து அறுத்து கறி சமைக்க வேண்டும் என்கிறார். பக்தி வந்தால் புத்தி போய்விடும் அல்லவா? சிறுத்தொண்டர் பக்தி மயக்கத்தில் பள்ளிக்குச் சென்று தன் மகனை அழைத்து வந்து, உயிரோடு அவன் கழுத்தை அறுத்துக் கறி சமைத்து சாமியாருக்குப் போடுகிறான். அவனது இந்தப் பக்தி போற்றப்படுகிறது. அவனுக்கு சிவன் மோட்சம் அளிக்கிறார்.

பிள்ளைக் கறி வேண்டும் என்று கேட்ட சாமியார் முதல் குற்றவாளி. பிள்ளையை அறுத்துக் கறி சமைத்த சிறுத்தொண்டரும் அவனது மனைவியும் அடுத்த நிலையில் உள்ள குற்றவாளிகள்.

கட்டுரை

ஒரு பச்சிளங்குழந்தையை ஒருவேளைச் சாப்பாட்டிற்காக அறுத்துக் கறி சமைக்கிறார்கள் என்றால், அதைவிட ஒரு வன்கொடுமை, கொலைக்குற்றம் வேறு உண்டா?

கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். மாறாக இங்கு மோட்சம் தரப்படுகிறது. அவன் பக்தியில் சிறந்த மாமணி என்று போற்றப்படுகிறான், கோயில்களில் வைத்து வணங்கப்படுகிறான்!

இதுதான் ஆன்மிகம் வளர்க்கின்ற அறமா? இதில் அறச்செயல் ஏதாவது இருக்கிறதா? பக்தியின் பெயரால் ஆன்மிகப் போர்வையில் கொலைச் செயலைப் புனிதமாக்க முடியுமா?

தன் பிள்ளையை அறுத்து, கறி சமைத்து சாமியாருக்குப் போடுவதன் மூலம் தான் ஒருவன் தன் பக்தியின் சிறப்பைக் காட்ட முடியும் என்பதுதான ஆன்மிகமா? அது அறமா? அறிவற்ற செயலா? சிந்தித்துப் பாருங்கள்!

இயற்பகை நாயனார்

இயற்பகை என்பவர் காவிரிப்பூம்பட்டினத்திலே இருந்த ஒரு வேளாண் செட்டியாவார். அவர் இல்லறத்தில் நின்று, தம்மிடம் வரும் அடியார்கள் விரும்பிக் கேட்ட பொருள்கள் எவையாயினும் அவற்றை இல்லையென்று சொல்லாமற் கொடுத்து வந்தார். இதனை அறிந்த சிவன், ஒரு பார்ப்பன வடிவந்தாங்கி அவர் வீட்டுக்குச் சென்று அவருடைய மனைவியைத் தமக்குத் தரும்படி கேட்டார். அதுகேட்ட இயற்பகை மிக மகிழ்ந்து அந்த நற்செய்தியைத் தமது மனைவியிடம் சொன்னார். அவள் சிறிது கலக்கமுற்று, பின் தனது கற்பைக் காத்தற் பொருட்டு அதற்கிசைந்தாள் உடனே இயற்பகையின் மனைவி அங்கு வந்த சிவனுக்கு மனைவியாய் அவனுடன் சென்றாள், இதனை அறிந்த இயற்பகையின் உறவினரும் அவர் மனைவியாரின் உறவினரும் வேல், வாள், வில் முதலான போர்க் கருவிகளை எடுத்துக்கொண்டு போய் அவ்விருவரையும் வழிமறித்து. ‘ஏ. பார்ப்பனனே! எங்கள் குலத்திற்கு இழிவு வராதபடி எங்கள் பெண்ணை விட்டுப் போ’ என்றார்கள். அது கண்ட இயற்பகை அங்கு வந்து அனைவரையும் தமது வாளினால் வெட்டிக் கொன்று, அவ்விருவருக்கும் போக வழிவிட்டார். பின்னர் சிவன் மறைந்து, வான்வெளியிலே (ஆகாயத்திலே) தோன்றி, இயற்பகையையும் அவர் மனைவியையும் இயற்பகையால் கொல்லப்பட்ட அவர் உறவினரையும் தம்முடைய சிவ உலகத்திற்கு அழைத்துக்கொண்டார் என்கிறது பெரியபுராணம்.

இதில் ஏதாவது பக்தியோ, ஒழுக்கமோ, நேர்மையோ, மனித மாண்போ இருக்கிறதா?

ஒருவன் தன் பக்தியின் ஆழத்தை உணர்த்த தன் மனைவியை அடுத்தவனுக்குக் கூட்டிக் கொடுப்பது அறமா? மனைவிக்கென்று உரிமைகள், உணர்வுகள், கொள்கைகள் இல்லையா? மனைவி என்பவள் ஆணின் அடிமை, அவளைத் தன் விருப்பப்படி எப்படி வேண்டுமனாலும் நடத்தலாம் என்பதுதான் அறமா?

அவளுக்கென்று விருப்பங்கள், கொள்கைகள், உணர்வுகள் இருக்கும்போது, அவற்றை எதையும் கருத்தில் கொள்ளாது, தன் பக்தியை வெளிப்படுத்த இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான, கேவலமான, மனித மாண்பற்ற ஒரு செயலைச் செய்வதுதான் அறமா?

கட்டுரை

ஒருவன் மனைவியை இன்னொருவன் அடைய நினைப்பதே குற்றச் செயல், அயோக்கியத்தனம் அல்லவா? அப்படிப்பட்ட அயோக்கியனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய தன் மனைவியை அவனுக்குக் கூட்டிக் கொடுப்பது எந்த வகையில் அறச் செயல்? அவளின் விருப்பம் இல்லாமல் அவர் எப்படி இன்னொருவனுடன் சென்று வாழ முடியும்?

அப்படியே ஒரு பக்தனின் பக்தியைச் சோதிக்க கடவுள் சிவனடியாராக வந்தார் என்பதை வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், அவர் தன் மனைவியைத் தரச் சம்மதித்தவுடன், சிவன் நேரில் வந்து, “பக்தா உன் பக்தியை மெச்சினேன்! உன் மனைவி உன்னோடே இருக்கட்டும்” என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? ஆனால், அப்படிச் செய்யாமல், அவரது மனைவியை தன்னுடன் கூட்டிச் செல்லும்போது, தடுத்தவர்களையும் தாக்கிக் கொல்லவைத்து, இன்னொருவன் மனைவியை இழுத்துச் செல்கிறான் என்றால், இது பக்திக்கான சோதனையா? இப்படிப்பட்ட குற்றச் செயல்களை, மனித விரோதச் செயல்களை, மாண்பற்ற செயல்களைச் செய்வதுதான் அறமா? ஆன்மிகம் அறிவுறுத்தும் அறநெறியா?

நந்தனார்

சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த நந்தனார், சிவன் மீது அளவற்ற பக்தி கொண்டவர். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் சென்று கடவுளை வணங்க வேண்டும் என்று மிகுந்த ஆவல் கொண்டு ஒவ்வொரு நாளும் முயன்றார். ஆனால், அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைக் கோயிலுக்குள் தீட்சதர்கள் அனுமதிக்கவில்லை. என்றாலும், நந்தனார் விடாப்பிடியாகத் தொடர்ந்து கோயிலுக்குள் செல்ல முயன்றார். அவரது தொல்லையைப் பொறுக்க முடியாத தீட்சதர்கள், அவரை கொன்றுவிட சதித்திட்டம் தீட்டினர். நந்தனாரை அழைத்து, “நீ புலையன், தீட்டு உள்ளவன், நீ இப்படியே கோயிலுக்குள் செல்லக்கூடாது. அதனால் நாங்கள் மூட்டும் தீயில் இறங்கி உன்னைப் புனிதமாக்கிக் கொண்டு அதன்பின் நடராசரைத் தரிசிக்கலாம் என்றனர். பக்தி அறிவை மறைக்க, தீட்சதர்கள் கூறியதை நம்பி நந்தன் சரியென்றான். தீட்சதர்கள் தீ மூட்டினர். நந்தன் கண்ணை மூடிக் கொண்டு “சிவ சிவ” என்று சொல்லியவாறு தீயில் இறங்கினார். பாதித் தீயில் நடந்தபோதே வெந்து சாம்பலானான்.

உடனே தீட்சதர்கள் அந்த உண்மையை மறைக்க, “நந்தன் தீயிலிருந்து வெளியில் வரும்போது அந்தணர் கோலத்தில் இருந்தார். அப்படியே சிவனுக்கு அருகில் சென்று மறைந்து விட்டார் என்று அப்பட்டமாகப் பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றி விட்டனர்.

மனிதர்கள் எல்லோரும் கடவுள் படைப்பு என்றால், அதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எப்படி இருக்க முடியும்? கடவுள் படைக்கும் போதே ஒருவனை உயர்ந்தவனாகவும், இன்னொருவனைத் தாழ்ந்தவனாகவும் படைத்தது என்பது எப்படி உண்மையாகும்? அப்படி ஏற்றத் தாழ்வாக படைத்தது என்றால் அது எப்படி அறமாகும்?

கோயிலைக் கட்டுபவன் தாழ்த்தப்பட்டவன். அதில் வைக்கப்படும் கடவுள் சிலையைச் செய்பவன் கீழ் ஜாதிக்காரன். அதைக் கோயிலில் வைக்கின்றவன், கோயில் மணி செய்கின்றவன், கற்பூரம் செய்கிறவன் கடவுள் உடுத்த ஆடை செய்பவன் கீழ் ஜாதிக்காரன். அப்படியிருக்க, ஒரு சொம்பு தண்ணீரைக் கலசத்தில் ஊற்றிவிட்டு, அவர்களையெல்லாம் கோயிலுக்குள் வராதே என்பது அறமா?

நெருப்பில் மூழ்கி வந்தால் தீட்டு போய்விடும் என்று அயோக்கியத்தனமான பொய்யைச் சொல்லி ஓர் உண்மையான பக்தனை நெருப்பில் சாம்பலாக்கியது அறச்செயலா? இக்குற்றச் செயலைச் செய்தவர்களைத் தண்டிக்காத கடவுள் நிலைப்பாடு. அறத்தின் பாற்பட்டதா?

இன்றைக்கு எல்லா தாழ்த்தப்பட்டவர்களும் செல்லும்போது, அன்று செல்லக்கூடாது என்றது அநீதியல்லவா? இன்றைக்குக் கடவுள் தீட்டாகாதா? அப்படியென்றால் அன்றைக்குக் கடவுள் தீட்டாகிவிடும் என்று கூறியது மோசடிதானே! ஓர் உண்மையான பக்தன் நெருப்பில் வேகடிக்கப்பட்டு, சாகடிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளின் செயல் அறமா? சிந்தித்துப் பாருங்கள்!

இது மட்டுமல்ல, நந்தனார் திருப்புன்கூரிலே கடவுளைத் தரிசிக்கச் சென்றபோது நந்தி சிலை மறைத்தது. நந்தியைத் தாண்டி உள்ளே சென்று தரிசிக்க நந்தனுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

உள்ளே செல்ல முடியாத நிலையில் வெளியில் நின்று தரிசிக்க நந்தி மறைப்பதால் நந்தன் சிவனை நோக்கி வருந்தி கண்ணீர் விடுகிறான். அப்போது சிவன் நந்தியைச் சற்றே விலக்கி, நந்தன் தன்னைக் காணும்படி செய்தார் சிவன் என்கிறது புராணம்.

அப்படியென்றால் கடவுள் நந்தன் உள்ளே வரக்கூடாது என்பதை ஏற்கிறது என்றுதானே பொருள்? இது சரியா? தன் உண்மையான பக்தனை உள்ளே விடாது தடுத்தவர்களைக் கடவுள் கண்டிக்காதது சரியா? ஒன்று நந்தனை உள்ளே விடுங்கள் என்று கடவுள் கூறியிருக்க வேண்டும் அல்லது கடவுள் கோயிலை விட்டு வெளியில் வந்து நந்தன் அருகில் நின்று காட்சி தந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாது, நந்தியை விலக்கி நந்தனை வெளியில் நிறுத்தித் தன்னைப் பார்க்கும்படி செய்தது அறமா? கடவுளும் தாழ்த்தப்பட்டவன் உள்ளே வரக்கூடாது என்று எண்ணுகிறது என்பதுதானே அர்த்தம். சிந்தித்துப் பாருங்கள்!

மாபாதகம் தீர்த்த திருவிளையாடல்

அவந்தி நாட்டில் ஓர் ஆரிய வேதியரின் மனைவியை அவரது மகனே உடலுறவு கொண்டான். அதாவது அவன் தன் தாயையே புணர்ந்தான். இதை அவன் தந்தை கண்டிக்க, அந்த மகன் ஆத்திரங்கொண்டு தந்தையைக் கொன்றான். பிறது தன் தாயை அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்த செல்வங்களை எடுத்துக்கொண்டு வெளியூர் சென்றான். கடைசியாக மதுரை நகரை அடைந்தான்.

அவனுக்கு உதவிட நினைத்த சிவன் அவனைப் பார்த்து, ‘நீ கையில் பிச்சை எடுத்து ஒரு பொழுதுமட்டும் உண்ணவேண்டும்; சிவனடியார்களுக்குச் சேவை செய்ய வேண்டும்; சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து பசுமையான அருகம்புல்லைப் பறித்து பசுக்களுக்குக் கொடுக்க வேண்டும். தினந்தோறும் முக்காலத்திலும் திருக்கோயில் புறத்தொட்டித் தீர்த்தத்தில் நீராட வேண்டும்; பின்னர் சிவபெருமானை நூற்றெட்டு முறை அங்கப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இவ்வழியால்தான் உன் மாபாதகம் நீங்கும்’ என்று கூறினார்.

பெற்ற தாயுடன் உடலுறவு கொண்டது மாபெருங்குற்றம். அதைக் கண்டித்த தன் தந்தையைக் கொன்றது பெருங்குற்றம். இப்படிப்பட்டவனுக்கு மன்னிப்பு அளித்து உதவுகிறான், சிவன் என்றால் அது அறச்செயலா?

இவ்வளவு பெரிய குற்றங்களுக்குத் தண்டனை, தினம் நீராடிவிட்டு தரையில் உருளுவதும்; பிச்சையெடுத்து உண்பதும்; சிவனடியார்க்குத் தொண்டு செய்வதும் பசுவுக்குப் புல் கொடுப்பதுமா? இது நியாயமா? இதுதான் நீதியா? இப்படிச் செய்தால் அவன் பாவம் நீங்கும் என்றும் சிவனே வழிகூறுவது நேர்மையா? கடவுளுக்கு அழகா? ஆன்மிக அறம் இதுதானா?

அங்கம் வெட்டிய திருவிளையாடல்

“குலோத்துங்கள் ஆட்சியில் மதுரையில் மேலை நாட்டைச் சேர்ந்த ஒருவன் மக்களுக்கு வாள்பயிற்சி தந்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவன் மாணவர்களுள் சித்தன் என்பவன் அவ்வித்தையை நன்கு பயின்று, தன் ஆசிரியரை  விட மிகுந்த செல்வம் பெற்று வந்தான். அவரிடத்தில் கற்கும் மாணவர்களை அவன் தன்பால் வரும்படி மனத்தை மயக்கித் தூண்டினான்; அன்றியும் குருவின் மனைவிமீதும் ஆசை கொண்டு அவளை அடைய முயன்றான்.

கற்பின் தியாகமாகிய அவ்வம்மையார் சித்தன் செய்த செயலைத் தன் கணவனுக்கு தெரியாமல் தம் உள்ளத்தே அடக்கி, தம் உயிருக்குயிராகிய சோமசுந்தரக் கடவுளை எண்ணி மனம் உருகினார். சோமசுந்தரக் கடவுள் அந்த மூப்படைந்த ஒரு ஆசிரியனாக வேடங்கொண்டு சித்தன் இருந்த இடம் சென்றார். அவர் அவனைப் பார்த்து ‘காளையாகிய நீயும் கிழவனாகிய நானும் வாட்போர் புரிந்து நம் வலிமையை அறியலாம். நகரின் வெளியிலே நாளை நீ வருவாயாக, நானும் அவ்விடம் வருகிறேன்’ என்று கூறினார்.

சித்தன் அதற்கு மனமுவந்து உடன்பட்டான். இச்செய்தி நகர மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. மறுநாள் இருவரும் குறித்த இடத்தில் சந்தித்தனர். வாட்போரைக் காண வெள்ளம்போல் மக்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது. இருவருக்கும் இருபது நாழிகை நேரம் வாட்போர் நடந்தது. பின்னர் சிவபெருமான் எல்லோருக்கும் கேட்குமாறு, “உன் குரு மனைவியை நினைத்த நெஞ்சையும், அவள் குறித்துப் பேசிய நாவையும், அவளைத் தொட்ட கையையும், பார்த்த கண்களையும் காப்பாற்றிக் கொள்” என்று சொல்லிச் சொல்லி அந்த உறுப்புகளை எல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு மறைந்து அருளினார்” என்கிறது திருவிளையாடல் புராணம்.

தாயிடமே உடலுறவு கொண்டவனுக்கு உதவிக் காப்பாற்றிய சிவபெருமான், குருவின் மனைவியை விரும்பியவனுக்கு உறுப்புகளை ஒவ்வொன்றாய் வெட்டி வெட்டி மரண தண்டனையா? தாயைப் புணர்ந்த குற்றத்தைவிட, குருவின் மனைவியை விரும்பியது பெரிய குற்றமா? உண்மையில் மரண தண்டனை தாயைப் புணர்ந்தவனுக்குத்தானே தந்திருக்க வேண்டும்? குருவின் மனைவியை விரும்பியவனைத் திருத்தியிருக்க வேண்டும். ஆனால், நேர் எதிராக சிவன் செய்தது நேர்மையா? நீதியா? இதுதான் சிவனின் நீதியா? இது கடவுள் தன்மைக்கு உகந்ததா?

இதுதான் ஆன்மிகம் கூறும் அறமா? ஒரு சராசரி மனிதன்கூட இது அநியாயம் என்று கூறுவானே!

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *