தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

16 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

எங்கள் தோள் மீது ஏற்றிக்கொண்டு, உங்களைப் பாதுகாப்போம்;
எங்கள் தோள் என்ன அவ்வளவு பலமா? என்று கேட்காதீர்கள்!
நாங்கள் அமர்ந்திருக்கின்ற தோள்
பெரியாரின் தோள்; அம்பேத்கருடைய தோள்!
எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் செயல்படுங்கள்!

சென்னை, ஜன.21  எங்கள் தோள் மீது ஏற்றிக்கொண்டு, உங்களைப் பாது காப்போம். எங்கள் தோள் என்ன அவ்வளவு பலமா? என்று கேட்காதீர்கள். நாங்கள் அமர்ந்திருக்கின்ற தோள் பெரியாரின் தோள்; அம்பேத்கருடைய தோள். எனவேதான் சமூகத்திலே எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல், மனசாட்சியைக் கொல்லாமல், எதை நினைக்கிறோமோ அதைப் பேசக் கற்றுக் கொள்ளக்கூடிய அந்த உணர்வை உண்டாக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

‘பெரியார் விருது’ வழங்கும் விழா!

கடந்த 17.1.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழாவும், பெரியார் விருது வழங்கும் விழாவும் நடைபெற்றன. இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

 

அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பெரியாருக்குக் காந்தியாரிடம்
கருத்து வேறுபாடு வரக் காரணம்?

‘குடிஅரசு’ பத்திரிகைதான் அவருடைய கருத்து களுக்குத் தெளிவான ஆதாரம். பெருமாள் முருகன் அவர்கள் சொல்லும்போது, ஒன்றைச் சொன்னார், பெரியார், காந்தியாரை தன்னுடைய தலைவராகக் கொண்டுதான் காங்கிரசில் இருந்தவர்; அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், காந்தியாரிடம் முதல் கருத்து வேறுபாடு கொண்ட விஷயம் இந்தக் கிணறுதான்.

 உங்களுக்கு அறிவு வந்தது என்று அர்த்தம்; புத்தி வந்தது என்று அர்த்தம்!

காரைக்குடிக்குப் பக்கத்தில் கிணற்றைத் திறந்து வைக்கப் போகிறார். அப்படிக் கிணற்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போது, ‘‘என்னை அழைத்தீர்கள் என்று நான் வந்து, கிணற்றைத் திறந்து வைத்தேன். இப்போது இது சரி; ஆனால், இதை எவ்வளவு நாளைக்குள் சீக்கிரம் மூடுகிறோமோ, அவ்வளவுக்கு உங்களுக்கு அறிவு வந்தது என்று அர்த்தம்; புத்தி வந்தது என்று அர்த்தம்’’ என்று ஆரம்பிக்கிறார். இந்தத் துணிச்சல் வேறு யாருக்குமே இருக்காது. தனியே ஒதுக்கி, எவ்வளவு பெரிய வீடு கட்டி கொடுத்தாலும், அவன் கீழ் ஜாதி, கீழ் ஜாதிக்காரனாகவே ஆக்கவேண்டியதான் இருக்கிறது. எல்லாரோடும் கலந்து போக வேண்டுமா, இல்லையா? என்று தெளிவாகச் சொன்னார். ஆகவே, தந்தை பெரியார் அவருடைய கருத்து இருக்கிறதே, அது ஆழமான கருத்து மட்டுமல்ல; துணிவான கருத்து மட்டுமல்ல; அவரைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் ஏராளம். அதைத்தான் இங்கே சொன்னார்கள்.

‘‘நான் சொல்வதையும் நம்பாதே, உன் அறிவு என்ன சொல்கிறதோ, அதன்படி நட!’’

ஒருமுறை குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றுகிறார்; ‘‘யார் சொன்னாலும் நம்பாதீர்கள்’’ என்று உரை யைத் தொடங்குகிறார்.  நாங்கள் எல்லாம் அவருக்குப் பின்னால், உரைக் குறிப்பை எழுதிக்கொண்டி ருக்கிறோம். உடனே ஒரு மாணவர் எழுந்து, ‘‘நீங்கள் சொல்வதை நம்புவதா, வேண்டாமா?’’ என்று கேட்டார்.  உடனே அய்யா அவர்கள், ‘‘நான் சொல்வதையும் நம்பாதே, உன் அறிவு என்ன சொல்கிறதோ அதன்படி நட!’’ என்று பட்டென்று பதில் சொன்னார்.

அவரைப் புரிந்து கொள்வது என்பது, நம்முடைய பக்குவத்தைப் பொறுத்தது; நம்முடைய அனுபவத்தைப் பொறுத்தது; நம்முடைய ஆசாபாசங்களைப் பொறுத்தது.

பெண்ணுரிமையைப் பற்றி இன்றைக்கு மக்கள் மத்தியில் தந்தை பெரியார் செய்திருக்கிற அள விற்கு உச்சத்தை எவரும் எட்டவில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.  அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் ஒவ்வொரு முறையும் சொல்லும்போது, தெளிவாகச் சொல்லுவார், படிப்படி யாக சொல்லுவார்.

யார்மீதும் வெறுப்பு இல்லை என்பதற்கு உதாரணம், ‘குடிஅரசு’ பத்திரிகை ஆரம்பிக்கும் போதே,

‘‘அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி

அரும்பசி எவர்க்கும் ஆற்றி

மனத்துளே பேதாபேதம்

வஞ்சனை, பொய், களவு சூது

சினத்தையும் தவிர்ப்பாயாகில்

செய்தவம் வேறுண்டோ?’’

அதில் ஒன்றும் தனித்தனியாகக் கோடு போட வில்லை. இந்த மனிதன், அந்த மனிதன், கருப்பு, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் என்று  அதில் ஒன்றும் காட்டவில்லை.

எருமை மாட்டுக்கு மாலை
போட்டுவிட்டுத்தான் வந்தோம்!

இன்றைக்கு எல்லாம் பேதம் தானே! நம்முடைய இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் இங்கே வரும்போது, நாங்கள் மாட்டுப் பொங்கலைக் கொண்டாடிவிட்டுத்தான் வந்தோம். உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்; எருமை மாடு அங்கே இருக்கிறது. எருமை மாட்டுக்கு மாலை போட்டுவிட்டுத்தான் வந்தோம்.

காளை மாடு, பசு மாடு என்று வெள்ளையாக இருக்கின்ற மாடுகளைப்பற்றியே சொல்வார்களே தவிர, கருப்பாக இருக்கிற எருமை மாடு, இதுதான் அதிகமாகப் பால் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். எருமை மாடு ஏன் கொண்டாடப்படுவதில்லை? அந்தக் கேள்வியை யாரும் இங்கே கேட்கவில்லை.  இந்தக் கேள்வியை ரஷ்யாவில் கேட்டிருக்கிறார்கள்.  நாடாளு மன்ற உறுப்பினர்களாக இருந்த ஈ.வெ.கி.சம்பத் அவர்களும், இன்னொரு நண்பரும்  மாஸ்கோவிற்குச் சென்றார்கள். அங்கே அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டி ருக்கிறார்கள்.

மாஸ்கோ பயணம் முடிந்து வந்த  சம்பத் அவர்கள், தந்தை பெரியார் அவர்களைச் சந்திக்க வந்தார். அப்போது அய்யா அவர்கள், ‘‘ரஷ்யா சென்றீர்களே, பயணம் எப்படி இருந்தது?’’ என்று.

அதற்கு அவர் பதில் சொன்னார், ‘‘அங்கே உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்குச் சென்றோம். ‘இந்தியாவில்  இருந்து வருகிறார்கள்’ என்று மாணவர்களிடம் சொன்னவுடன், அந்த மாணவர்கள் நூலகத்திற்குச் சென்று, சில புத்தகங்களைப் படித்துவிட்டு வந்து, உங்களிடம் சில கேள்விகளைக் கேட்கலாமா?’’ என்று  கேட்டிருக்கிறார்கள்.

மாணவர்கள்தானே, என்ன கேள்வி கேட்கப் போகிறார்கள் என்று நினைத்து, கேளுங்கள் என்று சொன்னார்களாம்.

‘‘இந்தியாவில் நீங்கள் மாட்டைக் கும்பிடுவீர்களாமே?’’ முதல் கேள்வி.

‘‘ஆமாம்!’’ என்றனராம்.

‘‘ஏன் மாட்டைக் கும்பிடுறீங்க?’’ என்று அடுத்த கேள்வி.

‘‘மாடு நிறைய பால் கொடுக்கிறது அல்லவா? அதனால் நாங்கள் மாட்டைக் கும்பிடுகிறோம்’’ என்று சாமர்த்தியமாகப் பதில் சொன்னார், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த, சேலத்தைச் சேர்ந்த காங்கிரஸ்கா ரரான ராமசாமி; அவர் அமைச்சராக இருந்தவர்.

எருமை மாட்டை ஏன் நீங்கள் கும்பிடுவதில்லை?

‘‘சரி, பசு மாடு பால் கொடுக்கிறது என்று சொல்றீங்க,  பசுமாட்டைவிட, எருமை மாடு அதிகமாக பால் கொடுக்கிறதே, அதை ஏன் நீங்கள் கும்பிடுவது இல்லை’’ என்று கேட்டனராம்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்று சொன்னால், மனிதர்கள் கேள்வி கேட்பதும், அந்த கேள்விகளைக் கேட்க வைத்துச் சிந்திக்க வைப்பதும் தான் அறிவு.

அதைத் தந்தை பெரியார் அவர்கள், மிகத் தெளிவாக விளக்கி, சொன்னதனுடைய விளைவாகத்தான் ‘கேள்வி கேள்’ என்று சொல்லக்கூடிய அறிவியல் மனப்பான்மை.

 ‘விடுதலை’யில் தலையங்கம் எழுதுங்கள் என்றார் தந்தை பெரியார்!

பெரியார் அவர்களுடைய இயக்கம் ஒரு சமூக விஞ்ஞானம். நாம் விஞ்ஞானத்தை எவ்வளவு புரிந்து கொள்கிறோமோ, அது மாதிரி! நாம் விஞ்ஞானத்தைக் கூட பல நேரங்களில் புரிந்து கொள்வதில்லை. முதன் முதலில் கம்ப்யூட்டர் (கணினி) வந்த உடனே, கம்யூ னிஸ்ட் நண்பர்கள், ‘‘தொழிலாளர்களுக்கு எல்லாம் வேலை போய் விடும், வேலை போய் விடும்;  கணினி உள்ளே நுழையக் கூடாது’’ என்று சொல்லி ஒரு பெரிய இயக்கமே நடத்தினார்கள்.

அப்போது தந்தை பெரியார் அவர்கள் என்னிடத்திலே சொன்னார்கள், ‘‘வீரமணி இங்கே வாங்க; அந்தக் கம்ப்யூட்டரினால், நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்.  அந்த வளர்ச்சி வர வேண்டும். அதைப் பற்றி ஆதரித்து நீங்கள் ‘விடுதலை’யில் தலையங்கம் எழுதுங்கள்’’ என்று சொன்னார்.

அப்படியே எழுதினோம்.  அதனை விளக்கிச் சொன்னோம். ஜட்கா வண்டிக்காரர், ஜட்கா வண்டியை ஓட்டிட்டே இருக்க வேண்டுமா? டவுன் பஸ் வர வேண்டுமா, இல்லையா? டவுன் பஸ் வந்தால், ஜட்கா வண்டிக்காரருக்கு வேலை போகும் என்றால், ஜட்கா வண்டிக்காரரை பேருந்து ஓட்டுநர் ஆக்குங்கள்.  அப்போது தானாகப் பிரச்சினை போய்விடும் என்று எழுதுங்கள் என்று சொன்னார்.

திராவிடர் கழகம்

 தீண்டாமை என்பது,
ஜாதியின் விளைவு!

ஆகவேதான், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்று சொல்லும்போது ஒரு கருத்தைச் சொன்னார். வெறும் தீண்டாமை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்று சொல்லாதீர்கள். ஜாதியும் – தீண்டாமையும் ஒன்று. அதுதான் பெரியார் அவர்களுடைய கருத்து; அதுதான் அம்பேத்கர் அவர்களுடைய கருத்து. தீண்டாமை என்பது, ஜாதியின் விளைவே தவிர, வேறு ஒன்றும் இல்லை. வெறும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று  சொல்வதில் இரண்டு பகுதியினர் உண்டு. மனித சமத்துவத்துக்குச் சொல்வது ஒரு பகுதி; இன்னொரு பகுதியினர் என்ன சொல்கிறார்கள் என்றால், தீண்டாமை மூலமாக வேறு மதத்துக்குப் போய்விடுவான்.

தந்தை பெரியார் அவர்களுடைய
கருத்துகள் ஒரு பேரங்காடி!

ஆகவே, இந்த மதத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்த மதத்திற்குப் பலத்தை உண்டாக்க வேண்டும்; இதை விட்டு வெளியே போகக் கூடாது என்று சொல்வதற்காகத்தான், ரொம்பப் பக்குவமாக ‘தீண்டாமையை ஒழிக்க வேண்டும்; தீண்டாமையை ஒழிக்க வேண்டும்’ என்று சொல்கிறார்கள். தீண்டாமையை எப்படி ஒழிப்பது? போகப் போகத்தான் அது புரியும்; பெரியார் அவர்களுடைய கருத்துகள் ஒரு பேரங்காடி – ஒரு சூப்பர் மார்க்கெட், அதில், எல்லோரும் எல்லாம் வாங்க வேண்டும் என்கிற அவசியம்  இல்லை. யார் யாருக்கு, எது தேவையோ, அவற்றை அவர்கள் வாங்குவார்கள்.

இதற்கு முன்னால் இருந்த அறிஞர்கள் எல்லாம், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்  வழிகளைப் பின்பற்றினார்கள். இவர்கள் இரண்டு பேரும் செய்த தொண்டு மிக முக்கியமானது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் வேறு எங்கும் போக வேண்டாம். ஓவியரிடம் போய் ஒருவர், என்னுடைய தாத்தா படம் வரையவேண்டும் என்று கேட்கிறார். ஓவியர் என்ன சொல்லுவார்? ‘‘உன் தாத்தாவுடைய படம் ஏதாவது இருக்கிறதா? சின்ன படம் இருந்தால்கூட போதும், பெரிதாக வரைந்து தருகிறேன்’’ என்று சொல்வார்.

‘‘என்னுடைய தாத்தா படம் எதுவும் இல்லீங்க, அந்தக் காலத்தில் படம் எடுக்கின்ற பழக்கம் இல்லை.’’

‘‘அப்படி என்றால், எப்படித்தான் உங்கள் தாத்தா வினுடைய படத்தை வரைவது?’’

‘‘என் தாத்தா, என்னைப் போன்றே இருப்பார்ன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க; அதனால், என்னைப் பார்த்தே வரைந்துவிடுங்கள்’’ என்பார்.

ஓவியரும் அதே மாதிரி வரைந்து தருவார். அதுதான் ஓவியருடைய திறமை.

அது ஓவியக் கலை. அடுத்தது போட்டோ கிராபர் (புகைப்பட நிபுணர்) அவர் படம் எடுத்தால், அப்படியே எடுத்துக்  கொடுப்பார். படம் எடுத்திருக்கிறேன், பாருங்கள் என்று சொன்னபோது, கொஞ்சம் இந்தப் படத்தை ‘டச்’ செய்து கொடுங்கள்; நான் சிரிப்பதுபோன்று இருக்கட்டும் என்று கேட்டால், புகைப்பட நிபுணரும், அதேபோன்று செய்து கொடுப்பார்.

பெரியார் ஒரு ‘ஸ்கேன்’ நிபுணர்!

ஆனால், பெரியார் அந்த புகைப்பட நிபுணரும் அல்ல; ஓவியக்காரரும் அல்ல. மாறாக அவர் ‘ஸ்கேன் நிபுணர்.’

ஸ்கேன் எடுத்துக் காட்டினால், உடலில் எப்படி இருக்கிறதோ, அதை அப்படியே காட்டுவதுதான் ஸ்கேன். ‘‘இல்லீங்க, அந்த ஸ்கேனில் கொஞ்சம் ‘டச்’ செய்து கொடுங்க; எலும்பு முறிந்தது போன்று இருக்கவேண்டாம்; அதைப் பார்த்தால், அவர் மனம் புண்படுங்க’’ என்று சொன்னால், பெரியார் அவர்கள் என்ன சொல்வார், ‘‘அவர் மனம் புண்படுகிறது என்பதற்காக அவரை ஏமாற்றக்கூடாது. என்னுடைய வேலை, மருந்து கொடுத்து சரிபடுத்தும் வேலையல்ல. மருந்து கொடுத்துப் பார்க்கலாம், அது பயன்படவில்லை என்றால், முழுக்க முழுக்க அறுவைச் சிகிச்சை செய்துதான் சரி செய்யவேண்டும்.

எந்தப் பாகத்தை வெட்டினால், அதைத் தூக்கி எறிந்தால், மனிதன் பிழைப்பானோ, அந்தப் பாகத்தை வெட்டி எறிந்துவிட்டாவது அந்த மனிதனைப் பிழைக்க வைக்க வேண்டும் என்பது என்னுடைய கொள்கையே தவிர, ஆகா, இதை செய்யவே கூடாது என்று சொல்லக்கூடாது’’ என்று சொல்வார்.

துணிவோடு இறங்குங்கள்!

எனவே தான், எழுதுவதற்கும் சொல்லுகிறேன்; திரைப்படத் துறைக்கும், பெரியாருடைய கருத்தாக அவருடைய தொண்டனாக இருந்து நான் உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். துணிவோடு நீங்கள் இறங்குங்கள்; இந்த விருது உங்களுடைய நடந்த செயலுக்காக அல்ல;  செய்த சாதனைக்காக அல்ல. அது ஒரு பகுதிதான். இனிமேல் நீங்கள் நடத்தப் போவதற்கு அச்சாரமாகத்தான் இந்த விருதை உங்களுக்கு வழங்குகிறோம் ஒன்று.

திராவிடர் கழகம்

திராவிடர் திருநாள் பொங்கலையொட்டி, சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழக இளைஞரணியினரும், மகளிரணியினரும் பொங்கல் வைத்தனர் (17.1.2026).

இரண்டாவதாக, இந்த விருதினுடைய நோக்கமே  என்னவென்றால், இதை எதிர்க்கிறான் பாருங்கள்; பின்னால் பேசுவது; மிரட்டுவது, அச்சப்படுத்துவது, இவர்களுக்கெல்லாம் இல்லை.

புண் ஏற்பட்டுவிட்டது என்றால், மருந்தால் குணப்படுத்த முடியாது என்ற நிலைக்கு வந்தால், அறுவைச் சிகிச்சை செய்யாமல், கத்தியை எடுக்காமல் அதை எப்படிச் சரி செய்ய முடியும்?

நீங்கள் தனி மனிதர்கள் அல்ல!

எனவே தான், டாக்டராக இருந்து அறுவைச் சிகிச்சைக்காக, கத்தி எடுப்பதற்கும், கொலைக்காக கத்தி எடுப்பதற்கும் வேறுபாடு உண்டு. ஆகவேதான், புண்படுத்தித்தான், அறுத்து, கொஞ்சம் ஆபரேஷன் செய்துதான், அந்தப் புண்ணை சரிப்படுத்தித்தான், இந்தச் சமுதாயத்தினுடைய கோடானு கோடி மக்களு டைய ஒடுக்கப்பட்ட இழிவை மாற்ற முடியும்.
ஆகவே, துணிச்சலோடு செய்யுங்கள்!  பெருமாள் முருகனோ, மாரி செல்வராஜோ தனி மனிதர்கள் அல்ல. என்பதைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்னமும் இந்த நாட்டில் மக்களை மதிக்காமல், ஜனநாயகத்தை மதிக்காமல், நம்முடைய மக்களுடைய நலத்தை எல்லாம் தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.

நீங்கள், தனி மனிதர்கள் அல்ல; இந்த அரங்கத்தின் நிகழ்வை, இங்கே இருக்கக்கூடியவர்கள் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. இதை உலகம் முழுவதும் உள்ளவர்கள் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். .

உங்களுடைய கருத்துகள், புதினங்கள், சமுதாயத்தினுடைய பிரதிபலிப்புகள்!

 

எல்லா நாடுகளுக்கும் இந்த நிகழ்வு தொலைக்காட்சி மூலமாகப் போய்க்கொண்டிருக்கிறது. உலகம் முழு வதும் உங்களுடைய கருத்துகள், நீங்கள் எழுதுகின்ற புதினங்கள், சமுதாயத்தினுடைய பிரதிபலிப்புகள், சமுதாயத்தில் எப்படி இருக்கிறதோ, அந்த எதார்த்தங்கள் உண்மையைச் சொல்லட்டும். எதார்த்தங்களைச் சொல்லக்கூடியவர்கள் ‘வெகுஜன விரோதி’ என்றே பழமொழி உண்டு. ஆகவே தான், நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல், உங்கள் துறை திரைப்படத் துறையாக இருந்தாலும், உங்கள் துறை இலக்கியத் துறையாக இருந்தாலும், துணிந்து உங்கள் கருத்து களைத் தாராளமாக சொல்லுங்கள்; உங்களை ஆதரிக்கின்றவர்கள், உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிற மக்கள் ஏராளம் இருக்கிறார்கள் என்று காட்டு வதற்காகத்தான் இந்த விருது.

நாங்கள் அமர்ந்திருக்கின்ற தோள்
பெரியாரின் தோள்; அம்பேத்கரின் தோள்!

நாங்கள் அங்கே வரமாட்டோம். ஆனால், நீங்கள் செய்யும்போது, உங்களை நாங்கள் பாதுகாப்பாக, எங்கள் தோள் மீது ஏற்றிக்கொண்டு, உங்களைப் பாதுகாப்போம் என்பதுதான் மிக முக்கியமானது. எங்கள் தோள் என்ன அவ்வளவு பலமா? என்று கேட்காதீர்கள். நாங்கள் அமர்ந்திருக்கின்ற தோள் பெரியாரின் தோள்; அதை மறந்து விடாதீர்கள். நாங்கள் அமர்ந்திருக்கின்ற தோள் அம்பேத்கருடைய தோள். அதுதான் மிக முக்கியம். எனவேதான் சமூகத்திலே எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல், மனசாட்சியைக் கொல்லாமல், எதை நினைக்கிறோமோ அதைப் பேசக் கற்றுக் கொள்ளக்கூடிய அந்த உணர்வை உண்டாக்க வேண்டும். அதற்கு ஓர் அருமையான எடுத்துக்காட்டாக, வாழ்க்கையிலே எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெற்றவருடைய படம்தான், இங்கே இருக்கிற ஈரோடு தமிழன்பன்.

பெரியாரிடம் ஈடுபாடு கொண்டவர்
ஈரோடு தமிழன்பன்

ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் அவரைப் பற்றி –  அழகாக அவருடைய கவிதை ஆற்றலைப்பற்றி நிறைய அருள்மொழி அவர்கள் சொன்னார்கள். ஈரோடு தமிழன்பன் எந்த அளவிற்குப் பெரியாரிடம் ஈடுபாடு கொண்டவர்கள் என்று சொன்னால், அவருடைய சொந்த ஊர் சென்னிமலை; ஈரோடு அல்ல. நிறைய பேர் நினைப்பார்கள், ஈரோடு தமிழன்பன் என்று சொன்னால், அவருடைய சொந்த ஊர் ஈரோடு என்று. இல்லை, பெரியார் மீது கொண்ட பற்றினால் ஈரோட்டைத் தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டார்.  அந்த வகையில், நாம் எல்லாரும் ஈரோட்டுக்காரர்கள்தான். இவரா இருந்தாலும், அவரா இருந்தாலும், யாராக இருந்தாலும் எல்லோரும் ஈரோட்டுக்காரர்கள்தான்.

சமூக நீதிக்காக
வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்!

அழகாக இங்கே சொன்னார், கருப்பு, சிவப்பு, நீலம் எல்லாம் சொன்னார். எதுவாக இருந்தாலும், ஒன்றே ஒன்று. அவை   எதுவுமே காவிக்குப் பொருந்தாத ஒன்று.  நாம் பிறந்த போது இருக்கிற சமுதாயம், பேதமுள்ள சமுதாயம்; பேதப்படுத்திய சமுதாயம்; பிறவி பேதம். பிறவி பேத ஒழிப்பு தான் முதல் கொள்கை.   உயர்ந்தவன்   –தாழ்ந்தவன்; தொடக்கூடியவன் – தொடக்கூடாதவன்; படிக்கக்கூடியவன் – படிக்கக் கூடாதவன் என்றெல்லாம் சொன்னீர்கள். அதுபோல, பிறவி பேதம் என்றால், ஆண் உயர்ந்தவன்  – பெண் தாழ்ந்தவர் என்று இருக்கிறதே, அதை  ஒழித்துச் சமத்துவம் வேண்டும் என்று சொன்னார்கள். எனவேதான், பேதம் இல்லை, வெறுப்பு இல்லை, ‘‘அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி’’ என்று அவர் கவிதை எழுதியது மட்டுமல்ல, சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். அதனால்தான் இன்றைய முதலமைச்சர் நம்முடைய அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளைச் சமத்துவ நாள் என்று அறிவித்தார்.

எல்லோரும் மனிதர்களாக
இருக்க வேண்டும்!

அதற்கு முன்னால் தந்தை பெரியாருடைய பிறந்த நாளைச் சமூக நீதி நாள் என்று சொன்னார்கள். அந்த சமூக நீதி நாள் என்று சொன்னபோது, அரசு ஊழியர்களை உறுதி மொழி எடுக்கச் சொன்னார். அதில், பெரியார் எழுதிய உறுதி மொழிகளுடைய வாக்கியங்கள் இருந்தன. அதிலே ஒரு வரி என்னவென்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்.’’ அதுதான் எல்லாம். இப்போது அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லும்போது, பார்ப்பனர்களாக இருந்தாலும், அவர்களுக்கு உரிய பங்கை அவர்கள் பெறலாம். நாம் யாரையும், மனிதர்களாக மதிப்போம். எங்கள் கேள்வி என்னவென்றால், சுதந்திர நாட்டில் பார்ப்பான் இருக்கலாமா? பறையன் இருக்கலாமா? பிராமணன் இருக்கலாமா? சூத்திரன் இருக்கலாமா? உயர்ந்தவன் இருக்கலாமா? தாழ்ந்தவன் இருக்கலாமா? எல்லோரும் மனிதர்களாக இருக்க வேண்டாமா? என்பதுதான் பெரியாருடைய கேள்வி.

அறிவுக்கு விடுதலை கொடு,
அறிவுக்கு சுதந்திரம் கொடு!

எனவே, சமத்துவம், சகோதரத்துவம், அறிவுச் சுதந்திரம். அய்யா அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய நேரத்திலே, தெளிவாக ஒன்றைச் சொன்னார். இந்த இயக்கத்துக்கு வேறு பெயர் வைக்க வேண்டுமானால், அந்தப் பெயர் என்ன தெரியுமா? ‘‘அறிவுச் சுதந்திர இயக்கம்.’’ அறிவுக்கு விடுதலை கொடு, அறிவுக்கு சுதந்திரம் கொடு, உன்னுடைய சுய சிந்தனைக்கு மதிப்புக் கொடு என்று சொன்னார்கள்.

நிறைவாக ஒன்றைச்  சொல்லி முடிக்கிறேன் நண்பர்களே! அழகாக ஒன்றைச் சொன்னார் மாரி செல்வராஜ் அவர்கள். நல்ல துடிப்போடு சொன்னார், துணிச்சலோடு சொன்னார். அதை நான் வரவேற்கிறேன்.

‘‘ராமசாமின்னு ஒரு பிற்போக்குவாதி இருந்தான்’’ என்று சொல்வார்கள்!

பெரியார் ஒரு முறை கேட்டார், இந்த மேடையி லேயே சொன்னார், ‘‘என்னை எல்லோரும் ரொம்பப் பாராட்டுகிறீர்கள். ரொம்ப முற்போக்குவாதி, புரட்சிக்காரன் என்று. ஆனால், சமுதாய வளர்ச்சியில், இன்னும் 200 ஆண்டுகளுக்குப் பிறகு  இளைஞர்களோ, மற்றவர்களோ வருவார்கள்; அவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்லுவார்கள் தெரியுமா? ‘‘ராமசாமின்னு ஒரு பிற்போக்குவாதி இருந்தான்’’ என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அளவுக்கு வளர்ச்சி வரும். வளர்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருப்போம்; அதைத்தான் நான் விரும்புறேன்’’ என்று சொன்னார்.

இவரோடு முடிந்துவிட்டது என்று சொன்னால், அது அவருக்குப் பெருமை இல்லை; ஓர் ஆசானுக்குப் பெருமை இல்லை. ஒரு தலைவனுக்குப் பெருமை இல்லை.

உங்களுடைய எழுத்துகள், ஆக்கங்கள், உங்களுடைய கலைத்திறன் வளரட்டும்!

அவரை விட, ‘‘தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மண்ணுயிர்கெல்லாம் இனிது’’ என்ற வள்ளுவருடைய குரல் மாதிரி, மிகப்பெரிய அளவிற்கு வளர வேண்டும். அப்படித்தான் உங்களுடைய அறிவு,  மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வரட்டும். உங்களுடைய எழுத்துகள், உங்களுடைய ஆக்கங்கள், உங்களுடைய கலைத்திறன் வளரட்டும். அந்த கலைத்திறன் தான் மிக முக்கியம்.

பெரியார் சொன்ன உதாரணம்  மிக முக்கியமானது. ஏன் கலைத்துறையைப் பற்றி நாம் பாராட்டுகிறோம் என்று சொல்லும்போது சொன்னார், அதை வைத்துத்தான் வைதீகம்; அதை வைத்துத்தான் ஜாதி; அதை வைத்துத்தான் பேதம்; அதை வைத்துத்தான் பிளவு என்று சொன்னார்கள்.

பெரியாரும் – அம்பேத்கரும்
ஒரே கருத்தைத்தான் சொல்வார்கள்!

பெரியார் சொல்லுகிறார் – இதே கருத்துதான் அம்பேத்கர் அவருடைய கருத்து. அதனால்தான் இரண்டு பேரும் ஒரே கருத்தைச் சொல்லுவார்கள். ஒரு மேற்கோளைப் போட்டு கீழே அம்பேத்கர் என்று போட்டாலும் சரி, பெரியார் என்று போட்டாலும் சரியாக இருக்கும்.

பெரியார் சொன்னார், ‘‘சிறைச்சாலைக்குள்ளே போனவன், எந்தக் கதவு வழியாகப் போனானோ, அந்தக் கதவு வழியாக வந்தால்தான் விடுதலை என்று அர்த்தம்.’’ ஆகவேதான், அந்தக் கதவு வழியாக வர வேண்டுமே தவிர, குறுக்கு வழியில் வந்தால், அதனால் பயன் கிடையாது.

இவர்கள் எல்லாம் புது வெளிச்சங்களாக–
புதிய ஆக்கங்களாக வந்திருக்கிறார்கள்!

ஆகவேதான், இதன் மூலமாகத்தான் அவர்கள் அழைத்துப் போனார்கள். கலைத்துறையிலே தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். இலக்கியத் துறையிலே ஆதிக்கம் செலுத்தினார்கள். அந்தத் துறையிலே இவர்கள் எல்லாம் புது வெளிச்சங்களாக வந்திருக்கிறார்கள். புதிய ஆக்கங்களாக வந்திருக்கிறார்கள். இவர்களை எல்லாம் தோளிலே தூக்கிக் கொண்டாட வேண்டியதுதான் – உண்மையான – மிக முக்கியமான இந்தத் தமிழர் திருநாள்.

‘‘மனுவின் மொழி அறமானது ஒரு நாள் – அதை மாற்றி அமைக்கும் நாளே தமிழர் திருநாள்’’ என்ற புரட்சி கவிஞர் வாசகத்தோடு முடிக்கிறேன்.

அனைவருக்கும் பாராட்டுகள்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *