சென்னை, ஜன. 20– தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2026ஆம் ஆண்டிற்கான கூட்டத்தொடர் இன்று (20.1.2026) காலை 9.30 கூடியது. ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.
முன்னதாக சட்டப்பேரவைக்கு உரை நிகழ்த்த வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வரவேற்று அழைத்து வந்தார். பேரவைக்கு வருகை தந்த ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள் எதிர்க்கட்சி தலைவர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். ஆளுநரும் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து பொங்கல் – புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையை, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றார். அதற்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் எழுந்து அவை தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் இசைக்கப்படும் ஆளுநர் உரை நிகழ்த்திய பின்புதான் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் காலங்காலமாக பின்பற்றப்படும் மரபு. எனவே மரபை மாற்ற முடியாது என்றார். உடனே ஆளுநர் ஆர்.என்,ரவி அவர்கள் தனது உரையை நிகழ்த்தாமல் பேரவையை விட்டு வெளியேறினார்.
முதலமைச்சரின் தீர்மானம்
இதைத்தொடர்ந்து ஆளுநர் அவர்கள் உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானத்தைக் கொண்டு வந்து ஆளுநரின் செயல் என்பது நூற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை, அதன் மாட்சிமையை அவமதிக்கும் செயலாகும் என்றே நான் கருதுகிறேன் என உரையாற்றினார். பின்னர் பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார்.
அ.தி.மு.க. வெளிநடப்பு
முன்னதாக ஆளுநர் வெளியேறியதும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறினர். பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசிக்க தொடங்கியவுடன் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று அரசுக்கு எதிராக ஒலி முழக்கங்களை எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி பிரிவு சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
