சட்டப் பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் கொட்டிக் கிடக்கும் தகவல்கள்

8 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

*பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு * தனியார் முகாம்களில் 3 இலட்சம் பேருக்கு வேலை
* 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி * உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்
ஒரு கோடியே 30 இலட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை

சென்னை, ஜன.20 தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று வாசிக்கப்பட்டஆளுநர் உரையில்  பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே  முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தனியார் முகாம்களில் 3 இலட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. 10 லட்சம் நபர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கோடியே 30 இலட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

சட்டமன்ற கூட்டத் தொடர்

தமிழ்நாடு அரசின் 2026ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று காலை (20.1.2026) தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆனால் தொடக்கத்திலேயே ‘தேசிய  கீதம் பாடப்பட வேண்டும்’ எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். இதனை கண்டித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல் அவையின் மரபை அவமதித்து விட்டது என்று கூறி, ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாக கருதப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்.

தொடர்ந்து ஆளுநர் உரையை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.

ஆளுநர் உரையில் கூறப்பட்டிருந்த  முக்கிய  அம்சங்கள் வருமாறு:

பொருளாதார வளர்ச்சி

நமது மாண்புமிகு முதலமைச்சரின் அயராத உழைப்பினால், கடந்த நிதியாண்டில் 11.19 சதவீதம் என்ற உயரிய பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எய்தியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் இத்தகைய உயர் வளர்ச்சியைநமது மாநிலம் அடைவது இதுவே முதன்முறை. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக 6,936 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 2.23 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில், ஒவ்வோர் அரிசி அட்டைதாரருக்கும் 3,000 ரூபாயும், ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், ஒரு முழு செங்கரும்பும், பொங்கல் பரிசாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டபடி வழங்கப்பட்டுள்ளது.

பதவியேற்ற நாளன்றே நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கையெழுத்திட்ட மகத்தான  திட்டம்தான் மகளிர் விடியல் பயணம். மகளிரின் பொருளாதாரச் சுமையைக் குறைத்திடும் வகையில், கட்டணமில்லாப் பேருந்துப் போக்குவரத்துக்கு வழிவகுத்த அந்த ஒரு கையெழுத்தால், ஒரு பெண் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிப்பதாக மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மகளிர் உரிமைத் தொகை

சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்திடவும் அவர்களின் உரிமையை நிலைநாட்டும் உயரிய நோக்கத்துடனும் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ மூலம் ஒரு கோடியே முப்பது இலட்சம் பெண்கள் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாகப் பெறுகின்றனர். மகளிரின் சமூகப் பங்களிப்பினை அங்கீகரித்து அவர்களின் அவசியத் தேவைகளை நிறைவு செய்திட உதவும் இத்திட்டம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்காக, இதுவரை 33,464 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்டம்

பள்ளிக் குழந்தைகளின் நலன் காத்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் தற்போது 19.34 இலட்சம் குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். குழந்தைகளின் நலனில் பெரிதும் அக்கறையும், கருணை உள்ளமும் கொண்டுள்ள நமது முதலமைச்சர்  இத்திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த ஆண்டு விரிவுபடுத்தியுள்ளார்.

பெண் கல்வியை ஊக்குவித்து, அவர்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் விதமாக, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி என உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் விகிதம் அதிகரித்து இடைநிற்றல் பெருமளவிற்கு குறைந்துள்ளது. நாட்டிலேயே அதிக அளவாக உயர்கல்விச் சேர்க்கையை தமிழ்நாடு பெற்றுள்ளதற்கு இத்திட்டத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

குடும்பத்தின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிக்க வேண்டும் எனும் பெருங்கனவோடு, தங்கள் இருப்பிடங்களை விட்டு நகரங்களுக்கு வரும் பெண்களுக்கு நவீன வசதிகளுடன் நியாயமான கட்டணத்தில் பாதுகாப்பான தங்கும் வசதியைப் பெற்றிட 19 தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாண்புமிகு முதலமைச்சரின் ‘தாயுமானவர்’ திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 18.37 இலட்சம் குடும்ப அட்டைகளில் உள்ள 27.55 இலட்சம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகிறார்கள்.

10 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் நம் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு உட்பட தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திடவும், அத்துறையில் அரிய சாதனைகள் படைத்திடவும், தமிழ்நாட்டில் உள்ள கலை. அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உட்பட பல்வேறு கல்லூரிகளில் பயின்று வரும் 10 இலட்சம் மாணவர்களுக்கு இந்த ஆண்டில் 2,172 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் இத்தகைய முன்முயற்சிகள் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவதுடன், உலகளாவிய போட்டித் திறன் கொண்ட மனித வளமாக அவர்களை உருவாக்கும் ஒரு வலுவான அடித்தளமாகவும் திகழ்கிறது.

மாணவர்தம் உயர்கல்விக்கு உதவும் வகையில் புதுமைப் பெண். தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி, அவர்களது கல்விச் செலவில் ஏற்படும் பற்றாக்குறை தணிக்கப்படுகிறது.

இல்லம் தேடி கல்வி திட்டம்

2021-2022 ஆம் ஆண்டில் ஆட்சி அமைந்த தொடக்கத்தில், கரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிப் படிப்பில் ஏற்பட்ட தொய்வைச் சரிசெய்து, இடைநிற்றலைக் குறைக்க, தன்னார்வலர்கள் உதவியுடன் மாணவர்களின் இல்லத்துக்கே சென்று கல்வி வழங்க, இல்லம் தேடிக் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் எண்ணையும் எழுத்தையும் பழுதறக் கற்க உதவும் எண்ணும் எழுத்தும் திட்டமும், வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக வாசிப்பு இயக்கமும் தொடங்கப்பட்டன.

இளைஞர்களின் ஆற்றலை முழு அளவில் பயன்படுத்தி, விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், மாநிலத்தின் பெருமையையும் உலகறியச் செய்யும் பரந்துபட்ட உட்கட்டமைப்பு வசதிகள் நமது அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செயற்கை இழை ஓடுபாதைகள், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், தரமான புதிய மாவட்ட விளையாட்டு வளாகங்கள் மற்றும் ஒலிம்பிக் அகாடமிகள் போன்றவைஉருவாக்கப்பட்டு வருகின்றன.

முத்தாய்ப்பாக சென்னை, செம்மஞ்சேரியில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரத்தினை 261 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

3 இலட்சம் பேருக்கு வேலை

கடந்த அய்ந்து ஆண்டுகளில் தொழிலாளர் நலத் துறையின் மூலம் நடத்தப்பட்ட 2,437 வேலைவாய்ப்பு முகாம்களில், 3 இலட்சத்திற்கும் மேலான இளைஞர்கள் தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனங்களை பெற்றுள்ளனர். 2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மட்டுமே இயங்கி வந்த நிலையில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் மட்டும் 41 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கலைஞர் கனவு இல்லம்

தமிழ்நாட்டினை குடிசைகளே இல்லாத மாநிலமாக உருவாக்கும் உயரிய நோக்கத்துடன் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2030 ஆம் ஆண்டிற்குள் குடிசையில்லாத் தமிழ்நாடு என்னும் இலக்குடன் அறிவிக்கப்பட்ட கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் எதிர்வரும் ஆறு ஆண்டுகளில் எட்டு இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை ஒரு இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு இலட்சம் வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II-ன் கீழ், ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட குறைந்தபட்ச அடிப்படை நிதியாக தலா 30 இலட்சம் ரூபாயும், செயல்திறன் ஊக்க நிதியாக 5 இலட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

அடுத்தபடியாக இந்த அரசின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக வருவாய்த் துறை மூலம், தாங்கள் குடியிருக்கும் மனைக்கு உரிமையின்றி இருந்த இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியதன் மூலம் இந்த அரசு அவர்களது வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளது. சென்னை மற்றும் மாநிலத்தின் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 26 குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை ஒரு முறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இதுவரை80,816 தகுதியான பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

புதிய பேருந்துகள்

பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடும் வகையில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் மட்டும் 6,871 புதிய பேருந்துகள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சென்னை கிண்டியில் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஆயிரம் படுக்கைகள், 15 அறுவை அரங்குகளுடன், சிகிச்சை அடையாளங்களில் சென்னையின் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையானது  750 படுக்கை வசதிகளுடன் 6.66 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் ஒரு ஒப்புயர்வு மய்யமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

மக்கள் நலம் காக்கும். உயிர் காக்கும் இவ்வரசின் பல திட்டங்கள் பாராட்டுக்குரியவை. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், பயனாளிகளுக்கான ஆண்டு வருமானம் 1.2 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, 5 இலட்சம் ரூபாய் வரையில் மருத்துவக் காப்பீடு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2,053 சிகிச்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டு, கடந்த அய்ந்து ஆண்டுகளில் 6,769 கோடி ரூபாய் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 145 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. ‘இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் மூலம், விபத்தால் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நலம் பெற்றுள்ளனர்.

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் எனும் வள்ளுவத்தின் வழிகாட்டலின்படி செவ்வனே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2.51 கோடி பயனாளிகள் முதன்முறை  சேவைகளைப்   பெற்றுள்ளனர்.

12.16 இலட்சம் முதலீடுகள்

தொழிற்துறையில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் சுமார் 12.16 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, மாநிலமெங்கும் தொழிற் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இதுவரை 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை சுமார் 36 இலட்சம். 2025 ஆம் ஆண்டில் மட்டும் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மின்னணுவியல் பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவிலான மி்னனணுவியல் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 4.12 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *