50 ஆண்டுகளுக்கு முன், பார்ப்பனர்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த வெளிநாடு களில், இன்றைக்குத் குக்கிராமத்துத் தமிழர்களும் பெருமைப்பட வசிக்கிறார்கள். இதற்கு ஒரே காரணம் திராவிடர் இயக்கம். இந்த உண்மையை அறியாமல் சில தமிழர்கள் இருக்கலாம். எனினும் அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து இயங்குவது தான், “திராவிடர் இயக்கத்தின் பெருமை!”
இன்றைக்கு அமெரிக்காவில் இருந்து கொண்டு, “பெரியார் பன்னாட்டு அமைப்பு” எனும் பெயரிலும், இன்னும் பல்வேறு அமைப்பின் மூலமும் கல்வி, பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழர் நலன் எனப் பாடுபடுகிறார்களே, அதுதான் திராவிடர் இயக்கத்தின் பெருமை!
எந்தத் திராவிட இயக்கத்தால் வெளிநாடு சென்றார்களோ, அங்கே தாங்கள் மட்டுமே வசதி, வாய்ப்போடு வாழாமல், தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையும் உலக நாடுகளுக்குச் சென்று, சுயமரியாதை வாழ்வு வாழ வேண்டும் எனத் திட்டம் போட்டு உழைக்கிறார்களே, அதுதான் திராவிடர் இயக்கத்தின் பெருமை!
தமிழர்கள் ஹிந்துக்களா?
பார்ப்பனீயம் நிறைந்திருந்த தமிழ்நாட்டை, பகுத்தறிவுத் தமிழ்நாடாக மாற்றிய இந்தப் பெருமை நீதிக்கட்சி தொடங்கி, பார்ப்பனர் அல்லாதார் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என அத்தனை இயக்கங்களுக்கும் உண்டு!
சரி… இந்த இயக்கங்கள் யாருக்காகத் தோன் றின? யாரை எதிர்த்துத் தோன்றின? இதற்கான பதில் மிக எளிது. தமிழர்களுக்கு ஆதரவாக, பார்ப்பனர்களுக்கு எதிராக இந்த இயக்கங்கள் தோன்றின. பார்ப்பனர்கள் நம் நாட்டில் உருவாக்கிய மதம் ஹிந்து மதம். தங்கள் மதத்திற்கு ஆட்கள் தேவை என்பதற்காக, ஒரே நாள் இரவில் தமிழர்களை “ஹிந்துக்களாக” மாற்றி அடாவடி செய்தவர்கள்.
அந்த வகையில் நம் தமிழர்கள்
பல தலைமுறைகளாக ஹிந்து மதத்தில் தொடர்கிறார்கள். “எங்கள் மூதாதையர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை” என்று சொன்னாலும், ஹிந்து மதம் அவர்களை அப்படித்தான் வைத்திருந்தது. நாங்கள் முட்டாள்கள் இல்லை எனப் பேசி வரும் இன்றைய தலைமுறையைக் கூட, ஹிந்து மதம் அப்படித்தான் நடத்துகிறது என்பதைப் பகுத்தறிவுப் பார்வையோடு பார்த்தால் விடை கிடைக்கும்.
ஹிந்துக்களின் எதிரி யார்?
எங்கள் மதம் எனப் பெருமையோடு பேசு கிறார்களே உங்கள் தாத்தன், பாட்டி, முப்பாட்டன் வகையறாக்களுக்கு அங்கே என்ன மரியாதை கிடைத்தது? என்ன உரிமை இருந்தது? குறைந்தபட்சம் மனிதர்களாக மதித்தார்களா?
பெரியாரைக் ‘கடவுள் மறுப்பாளர்’ எனும் சிப்பிக்குள் அடைக்கப் பார்த்தார்கள். ஆனால் அதுவல்ல அவரின் அடையாளம்! ஆத்திகர் களுக்கும், நாத்திகர்களுக்கும் ஒரே சேர அவரே தலைவர்! திராவிட இயக்கத்தின் பெருமைகளுள் தலையாய மேதை அவர்! அவரால் உருவான கருப்புச் சட்டைப் பெருமிதங்கள் உலகம் முழுவதும் துளிர்விட்டு, படர்ந்து, கிளை பரப்பி, வேரூன்றி நிற்கின்றன.
கல்வி இல்லை, சாலையில் நடக்க உரிமை இல்லை, குளத்தில் தண்ணீர் குடிக்க அனுமதி இல்லை என எந்த உரிமையும் இல்லாத நடைப்பிணமாய் அல்லவா தமிழர்கள் வாழ்ந்தார்கள்? இதில் தமிழர் பெருமையை எங்கே பேசுவது?
சரி… ஹிந்து மதத்தில் இருந்த தமிழர்களுக்குச் சாலையில் நடக்க அனுமதி இல்லாமல் இருந்ததே… அது எந்த சாலை? கிறிஸ்தவர்கள் வசித்த சாலையா? இஸ்லாமியர்கள் குடியிருந்த சாலையா? இல்லையே… ஹிந்துக்கள் வாழ்ந்த சாலையில் தானே அனுமதி இல்லை? குறிப்பாகப் பார்ப்பனர்கள் வாழ்ந்த “அக்ரஹார” சாலைகள் தானே அவை? அதேபோல ஹிந்து மதத்தில் இருந்த தமிழர்கள் தாகத்திற்கு கூட குளத்தில் இறங்கி ஒரு வாய் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று அனுமதி மறுத்தார்களே… அப்படி மறுத்தவர்கள் கிறிஸ்தவர்களா? இஸ்லாமியர்களா? அல்லது வேறு மதத்தவர்களா? அவர்களும் ஹிந்துக்கள் தானே?
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சண்டையிட்டால் அது ஒரு வகை. ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் சண்டை போட்டால் அது ஒரு வகை. ஆனால் ஹிந்து மதமே பல நூற்றாண்டாக ஹிந்துக்களை அழித்து, ஒழித்து வருகிறதே, அதை எப்படி புரிந்துக் கொள்வது? ஆடு, மாடு மேய்க்க வந்த பார்ப்பனர்கள் பொய்யையும், புரட்டையும் வைத்துக் கடவுள், மதம், ஜாதியை உருவாக்கி விட்டார்கள். இந்த நாட்டில் வாழ்ந்த தமிழர்களை, இந்த மூன்றுக்குள்ளும் அடைத்துவிட்டார்கள். முதல் நாள் இரவு தமிழர்களாக உறங்கியவர்கள், காலை எழும்போது ஹிந்துக்களாக எழுந்தார்கள்.
அரக்கர்கள்; சூத்திரர்கள்!
சரி… கூடவோ, குறையவோ சிந்திக்கும் வாய்ப்பு இல்லாமல், போராடும் திறன் இல்லாமல் நீங்கள் சொன்ன கடவுளைக் கும்பிட்டு, நீங்கள் சொன்ன மதத்திலேயே தமிழர்கள் தங்கிவிட்டார்கள். உங்கள் கருத்தை ஏற்று, உங்களிடம் வந்தவர்களை நீங்கள் எப்படி நடத்தியிருக்க வேண்டும்? எப்படி மதித்திருக்க வேண்டும்? அதேநேரம் உங்கள் கடவுளை, உங்கள் மதத்தை ஏற்காத தமிழ் அரசர்களையும், தமிழ் மக்களையும் கொன்று போட்டீர்கள். கொலை செய்துவிட்டு இவர்கள் எல்லாம் அசுரர்கள் என்றீர்கள்; அரக்கர்கள் என்றீர்கள்! சரி… உங்களை எதிர்த்ததால் அப்படிச் சொன்னீர்கள். உங்களை முழுமையாக ஏற்று வந்தவர்களை ஏன் “தேவடியாள் மக்கள்” (சூத்திரன்) என்றீர்கள்?
உலகத்திலேயே தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை யாராவது இழிவு செய்வார்களா? இப்படிக் கொடுமை செய்வார்களா? உங்கள் மதம், உங்கள் கடவுள், உங்களால் வகுத்த ஜாதியில் வாழ்பவர்களை, ‘அழகான பெயர் வைத்துக் கொள்ளக் கூடாது, நல்ல உடை அணியக் கூடாது, தரமான உணவு சாப்பிடக் கூடாது, வீடு கட்டிக் கொள்ளக் கூடாது, கல்வி கற்கக் கூடாது, திருமணம் செய்து கொள்ளக் கூடாது, பணம் சேர்க்கக் கூடாது’ என்று பிறப்பு முதல் இறப்பு வரை இப்படி யாராவது கொடுமை செய்வார்களா?
திருந்த வாய்ப்பே இல்லையா?
ஆண்டாண்டு காலமாய் நீங்கள் செய்து வந்த இந்த அநியாங்களைத் தட்டிக் கேட்கவே திராவிடர் இயக்கங்கள் தோன்றின. அவர்கள் வந்து உங்களைக் கேள்வி கேட்டதும் பதறிவிட்டீர்கள். எங்கே தங்கள் ஆதிக்கக் கோட்டை இடிந்து விழுமோ என அஞ்சி, ‘‘ஹிந்துக்களே… இஸ்லாமியர்களைப் பாருங்கள், கிறிஸ்தவர்களைப் பாருங்கள்’’ என மடை மாற்றினீர்கள். அப்போது கூட, “தமிழர்களுக்கு நாங்கள் நிறைய துரோகம் செய்துவிட்டோம், இனி அப்படி செய்யமாட்டோம்,” என நீங்கள் கூறவில்லை. காரணம் வாழ்நாளில் திருந்தும் எண்ணமே உங்களுக்குக் கிடையாது.
இன்னும் விரிவாகச் சொல்கிறோம், ஹிந்து மதத்தை ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு நீங்கள் இழைக்கும் துன்பம் குறைவுதான். ஆனால் ஹிந்துக்களாக வாழ்பவர்களையே தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகிறீர்கள்; செத்த பிறகும் சுடுகாடு சென்று அவமானப்படுத்துகிறீர்கள்.
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் உங்கள் அநியாயம் பொறுக்காமல் தான் வேறு இடம் சென்றார்கள் என்பது தனிக்கதை.
திராவிடர் தலைவர்களின் நோக்கம்!
இப்படி உங்களின் ஈராயிரம் ஆண்டு தடித்த தோலை, திராவிடர் இயக்கங்கள் உரிக்கத் தொடங்கியதும், ‘‘அய்யகோ இஸ்லாமும், கிறிஸ்தவமும் நமது ஹிந்து மதத்தை அழிக்கத் துடிக்கின்றனவே!’’ என அலறுகிறீர்கள். தெலுங்கர், கன்னடர், மலையாளி எனப் பிரித்து வந்தேறிப் பட்டம் சூட்டுகிறீர்கள். நீங்கள் சொல்வதைப் போல சொன்னால், இந்தப் பட்டம் இந்தியாவிலேயே உங்களுக்குத் தான் பொருத்தமான பட்டம்!
இந்நிலையில் உங்களோடு போராடுவது மட்டுமே எங்களது நோக்கமல்ல; ஆக்கப்பூர்வமான பல பணிகளை எங்களின் திராவிட இயக்கத் தலைவர்கள் செய்தார்கள். தமிழர்களை அழித்து சுகபோக வாழ்க்கை வாழ்பவர்கள் ஆரியர்கள். பார்ப்பனர்களுக்கு எந்தத் தீங்கும் நேராமல், அவர்களின் கருத்தியலுடன் போரிட்டு தமிழர்களை மீட்டெடுப்பவர்கள் திராவிடத் தலைவர்கள்!
அந்த வகையில் ஹிந்து மதப் புதைக்குழியில் அமிழ்ந்து கிடந்த தமிழர்களை, கைதூக்கி விட உருவானதே நீதிக்கட்சி என்னும் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள். இந்தப் பல்லாயிரம் ஆண்டுகளில் பார்ப்பனீயத்திற்கு எதிராக ஊசிமுனை அளவும் பாடுபட்ட ஒவ்வொரு வரும் நமக்குச் சுயமரியாதை வீரர்கள் தான்!
தமிழர்களை மனதார ஏற்றவர் பெரியார்!
சிறு வயது தொடங்கி, பகுத்தறிவோடு சிந்தித்து, சாகும்போது மூத்திரம் கூட போக வழியில்லாமல் கொடுமையை அனுபவித்தவர் தந்தை பெரியார். வேறு எவரையும் விட சித்ரவதைகள், கடும் சொல்லாடல்கள், கல் வீச்சு, செருப்பு வீச்சு, மலம் வீச்சு என அத்தனையையும் மனதார ஏற்றுக் கொண்டவர். யாரிடம் இருந்து இதை ஏற்றுக் கொண்டார்? பார்ப்பனீய ஹிந்து மதத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் இருந்து! புதைகுழியில் சிக்கிக் கொண்ட ஒருவரைக் கைப்பிடித்துத் தூக்கிவிட்டால், உயிர் தப்பிய அவர், கைகொடுத்தவரைப் புதைகுழியில் தள்ளி விடுவதற்கு ஒப்பான செயல் அல்லவா இது?
ஆனால் எது குறித்தும் கவலைப்படாமல், மலத்தை எடுத்து மூஞ்சியில் வீசியவரைப் பார்த்து, “என் மேல் விழுந்ததைத் துடைத்துக் கொள்கிறேன், உங்கள் கைகளைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள், இனி மலத்தைக் கையில் தொடாதீர்கள்”, எனப் பேசினாரே, அவருக்குப் பெயர்தான் பெரியார்!
அப்படி ஒரு தலைவர் இந்த உலகத்தில் இருந்தால் அவர்களுக்கும் நம் வாழ்த்துகள்! ஆனால் எங்கள் இனத்திற்கு நேரடியாகக் கிடைத்த ஒரே தலைவர் இவர்தாம்!
பெரியார் இன்னும் சாகவில்லை!
மதங்களையே ஒழிக்க வந்த பெரியார், தமிழர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் பரவாயில்லை, நன்றாகக் கல்வி கற்க வேண்டும், உயர்ந்த பதவிகளுக்குப் போக வேண்டும், சுயமரியாதை வாழ்வு வாழ வேண்டும் என 96 ஆண்டுகள் வரை போராடி செத்துப் போனார். ஆனால் அவர் இன்னும் சாகவில்லை என்பதைப் பார்ப்பனர்கள் உறுதியோடு நம்புகிறார்கள். காரணம் அடித்த அடி அப்படி! பற்ற வைத்த நெருப்பு அப்படி!
எந்தக் கனரக ஆயுதமும் இல்லாமல், கருத்தாயுதத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, தமிழர்களை உலகத்தின் உச்சி வரை கொண்டு அமர்த்தியவர் பெரியார்! அதற்கு அவர் வகுத்த பாதை, அணுகுமுறைகள், வன்முறையற்ற களங்கள், சட்டத்திற்கு உட்பட்ட சாராம்சங்கள் என அவர் வழிதான் உலகிலேயே தனி வழி! அதனால் தான் அவரை எந்த ஒன்றுக்குள்ளும் சிக்க வைக்க முடியாமல் பார்ப்பனர்கள் கிறுக்குப் பிடித்து அலைந்தார்கள்.
நொறுங்கும் ஆரியக் கோட்டைகள்!
ஒரு வழியாக 24.12.1973 பெரியார் மறைந்து விட்டார். பார்ப்பனர்கள் தங்கள் வாழ்நாளில் அடையாத மகிழ்ச்சியை அன்று பெற்றனர். ஆனால் இறந்த பிறகும் 52 ஆண்டுகளாக அவர் வாழ்வார் என்பதைக் கனவிலும் அவர்கள் நினைக்கவில்லை. செவ்வாய்க்கிரகத்தில் எந்தக் கடவுள் இருக்கிறார் என்பதையெல்லாம் கண்டுபிடித்த பார்ப்பனர்களுக்கு, இறந்தும் பெரியார் தொந்தரவு செய்வார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் ஓர் ஆரியர் இருந்து, ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் வரை, பெரியார் உங்கள் முன்னால் நின்று கொண்டே இருப்பார்.
ஆண்டாண்டு கால ஆரியம் இடிந்து நொறுங்கு கிறதே என்கிற கவலைதான் பார்ப்பனர்களை ஆட்டிப் படைக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சியைப் பயன்படுத்தி, ஓராயிரம் கோடிகள் செல விட்டாவது அழிந்து வரும் ஆரிய மலையை நிலை நிறுத்திவிடலாம் என எண்ணுகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. பெரியாரால் கைப்பிடித்த ஒவ்வொரு பேனாவும், இங்கே உளியாய் இருக்கிறது. அது ஆரிய மலைகளைப் பதம் பார்த்துக் கொண்டே இருக்கும்!
பெரியாரைக் ‘கடவுள் மறுப்பாளர்’ எனும் சிப்பிக்குள் அடைக்கப் பார்த்தார்கள். ஆனால் அதுவல்ல அவரின் அடையாளம்! ஆத்திகர் களுக்கும், நாத்திகர்களுக்கும் ஒரே சேர அவரே தலைவர்! திராவிட இயக்கத்தின் பெருமைகளுள் தலையாய மேதை அவர்! அவரால் உருவான கருப்புச் சட்டைப் பெருமிதங்கள் உலகம் முழுவதும் துளிர்விட்டு, படர்ந்து, கிளை பரப்பி, வேரூன்றி நிற்கின்றன. இதன் இலைகளையோ, கிளைகளையோ முறிக்க நினைத்தால் ஆலமரமாய் ஒன்று சேர்ந்து முறியடிப்போம்! திராவிட இயக்கப் பெருமைகளைக் கட்டிக் காப்போம்!
