பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி, அரசியலில் ‘தலைமுறை மாற்றம்’ குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மகாராட்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற ‘அட்வான்டேஜ் விதர்பா’ தொழில்துறை கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய நிதின் கட்கரி, நிர்வாகத்தில் புதிய ரத்தத்தைப் பாய்ச்ச வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
“எந்த ஒரு துறையிலும் விஷயங்கள் சீராக நடக்கத் தொடங்கும் போது, பழைய தலைமுறையினர் படிப்படியாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும். பொறுப்பு களைப் புதிய தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். நாங்கள் (பழைய தலைமுறையினர்) விலகிச் சென்று வேறு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு கட்டத்தில் ஓய்வு பெறுவது என்பது இயற்கையானது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று நிதின்கட்கரி என்ற உரையாடல் அரசியல் வட்டத்தில் உலவிக் கொண்டிருக்கும் நிலையில், நிதின்கட்கரியின் இந்தப் பேச்சு சர்ச்சை அலைகளை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியம் இருக்கப் போவதில்லை.
பா.ஜ.க.வில் 75 வயதைக் கடந்தவர்கள் தீவிர அரசியலில் இருந்து விலகி, ‘மார்க தர்ஷக் மண்டல்’ (வழிகாட்டும் குழு) உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையை பிரதமர் நரேந்திர மோடியே கொண்டு வந்தார். இதன் காரணமாகவே எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.
இருப்பினும், தற்போது பிரதமர் மோடி 75 வயதைக் கடந்த நிலையிலும் பதவியில் நீடித்து வருகிறார். இந்தச் சூழலில், “பழையவர்கள் ஒதுங்க வேண்டும்” என கட்கரி பேசியிருப்பது, நேரடியாகப் பிரதமர் மோடியை நோக்கியே தொடுக்கப்பட்ட விமர்சனமாகப் பார்க்கப்படுகிறது.
நிதின் கட்கரி ஏற்ெகனவே பலமுறை கட்சியின் தலைமைமீது அதிருப்தி அளிக்கும் வகையில் வெளிப்படையாகப் பேசி வந்துள்ளார். இப்போது மீண்டும் “பதவி விலகல் மற்றும் தலைமுறை மாற்றம்” பற்றி அவர் பேசியிருப்பது, பாஜகவிற்குள்ளேயே ஒரு கலகக்குரலாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மகாராட்டிரா அரசியல் சூழல் மற்றும் தேசிய அரசியலில் நிலவும் மாற்றங்களுக்கு மத்தியில் கட்கரியின் இந்தக் கூற்று மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சில நாள்களுக்குமுன் ‘‘நான் 75ஆம் வயதை எட்டுகிறேன் – ஓய்வு பெறுவேன்’’ என்று சொன்னார்.
இதை இவர் சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன? பிரதமர் மோடியை மனதில் வைத்துக் கொண்டுதான் அப்படி சொல்லுகிறார் என்பதை கால்தூசு அளவுக்கு அரசியல் தெரிந்தவர்களுக்குப் புரியக் கூடிய ஒன்றுதான்!
நரேந்திர மோடி – அமித்ஷா கூட்டணி அவ்வளவு எளிதில் பதவியையும், அதிகாரத்தையும் விட்டுக் கொடுத்து விடாது!
அதற்கொரு புதிய வழியையோ, விதிமுறையையோ உண்டாக்கி விடுவார்கள்.
குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது ஜி.எஸ்.டி.யையும், ‘நீட்’டையும் ‘ஆதாரை’யும் எதிர்த்தவர்தானே – பின்பு பிரதமரான நிலையில் அவற்றிற்கெல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்து, மகுடம் சூட்டிக் கொண்டுதானே இருக்கிறார்.
ஒரே தேர்தல், ஒரே நாடு என்பதற்கான அறிக் கையைத் தயாரிக்க – மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து, அந்த அறிக்கையையும் கையில் வைத்துள்ளார்.
மாநிலங்களில் ஆட்சி என்று ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்பது தெரிந்த ஒன்றே!
அதிபர் ஆட்சி முறையை நோக்கி நாடு இழுத்துச் செல்லப்படுகிறதோ என்ற அய்யம் கலந்த அச்சமும் இருக்கத்தான் செய்கிறது.
மக்கள் மன்றம் மிக விழிப்பாக இருக்க வேண்டிய கால கட்டம் இது!
எச்சரிக்கை!
