துணிச்சலோடு தன்னுடைய கருத்துகளை முன் வைக்கக் கூடியவர்
திரைப்படத்தை இயக்கும் போதும், மற்ற பணிகளைச் செய்யும்போதும்,
ஒரு பெரிய இலக்கோடு செய்தார் ‘‘இலக்கு இயக்குநர்’’ மாரி செல்வராஜ்!
சென்னை, ஜன.20 வயதால் இளையவர் – அறிவால் முதிர்ந்தவர்; முதுமை வேறு; முதிர்ச்சி வேறு! அந்த முதிர்ச்சியில், துணிச்சலோடு தன்னுடைய கருத்துகளை முன் வைக்கக் கூடியவர். இவரும் எழுத்தாளராகத்தான் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அதிலே இருந்து திரைப்படத் துறைக்கு வந்தார். ஆனால், திரைப்படத்தை அவர்கள் இயக்கும் போதும், மற்ற பணிகளைச் செய்யும்போதும், ஒரு பெரிய இலக்கோடு செய்தார் ‘‘இலக்கு இயக்குநர்’’ மாரி செல்வராஜ் அவர்கள். இயக்குநர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள்; ஆனால், ஓர் இலக்கை வைத்துக்கொண்டு, ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு, அந்தக் கொள்கையை முன்னி லைப்படுத்தி, ஜாதி கொடுமைகளைக் கண்டிப்பதில் இரண்டு பேருக்கும் ஒரு பொருத்தம் உண்டு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
‘பெரியார் விருது’ வழங்கும் விழா!
கடந்த 17.1.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழாவும், பெரியார் விருது வழங்கும் விழாவும் நடைபெற்றன. இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
சிறப்புக்குச்
சிறப்பு சேர்க்கும் வகையில்…
மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டி ருக்கக்கூடிய தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா என்ற இந்த சிறப்பான நிகழ்ச்சியில், சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் வகையிலே இரண்டு தகுதி மிக்கவர்களும், துணிவு மிக்கவர்களும் ஆன அருமை நண்பர்களுக்கு ‘பெரியார் விருது’ அளிக்கக்கூடிய ஒரு விழாவாகவும் இவ்விழாவை அமைத்திருக்கிறீர்கள். இந்த சிறப்பான விழாவிற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய நம்முடைய துணைத்தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, வரவேற்புரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களே,
அதுபோலவே இங்கு சிறப்பான வகையிலே அறிமுக உரையைச் செய்த தமிழ்நாடு அரசின் ‘பெரியார் விருது’ பெற்ற வழக்குரைஞரும், கழகத்தினுடைய பிரச்சாரச் செயலருமான அருள்மொழி அவர்களே,
மிக நீண்ட காலமாகவே அய்யா பேராசிரியர் பெருமாள் முருகன் தலைசிறந்த எழுத்தாளர்; உலகம் அறிந்த ஓர் எழுத்தாளர். அவர் உலகம் அறிந்த எழுத்தாளராக ஆவதற்கு எதிரிகள் துணை செய்தார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லவேண்டும்.
பெரியாரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது
முதலில் துணிவு!
ஏனென்றால், எதிர்ப்பு எங்கே இருக்கிறதோ, அங்கேதான் பெருமை வருகிறது; அதுதான் பெரியார். பெரியாரிடமிருந்து முதலில் கற்றுக்கொள்ளவேண்டியது என்னவென்றால் அது துணிவுதான். ‘‘உன்னுடைய கருத்து தெளிவானது என்றால், உறுதியானது என்று சொன்னால், பின்வாங்காதே! எதிர்த்து நில்! எதிர்நீச்சல் போடு! வெற்றி பெறு’’ என்பதுதான்.
அப்படி எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்ற ஒரு தலைசிறந்த எழுத்தாளராக, இந்த நூற்றாண்டின் எழுத்தாளராக, உலகப் புகழ் பெற்ற ஓர் எழுத்தாளராக இருக்கக்கூடிய அருமைப் பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்களே,
‘‘இலக்கு இயக்குநர்’’ மாரி செல்வராஜ்!
அதேபோல, வயதால் இளையவர் – அறிவால் முதிர்ந்தவர்; முதுமை வேறு; முதிர்ச்சி வேறு! அந்த முதிர்ச்சியில், துணிச்சலோடு தன்னுடைய கருத்துகளை முன் வைக்கக் கூடியவர். இவரும் எழுத்தாளராகத்தான் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அதிலே இருந்து திரைப்படத் துறைக்கு வந்தார். ஆனால், திரைப்படத்தை அவர்கள் இயக்கும் போதும், மற்ற பணிகளைச் செய்யும்போதும், ஒரு பெரிய இலக்கோடு செய்தார் ‘‘இலக்கு இயக்குநர்’’ மாரி செல்வராஜ் அவர்கள். இயக்குநர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள்; ஆனால், ஓர் இலக்கை வைத்துக்கொண்டு, ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு, அந்தக் கொள்கையை முன்னி லைப்படுத்தி, ஜாதிக் கொடுமைகளைக் கண்டிப்பதில் இரண்டு பேருக்கும் ஒரு பொருத்தம் உண்டு.
எந்த அளவிற்குச் சங்கடப்பட்டிருந்தால், பெருமாள் முருகன் ‘நான் இறந்துவிட்டேன்’ என்று சொல்லியிருப்பார்!
ஏற்கெனவே நம்முடைய எழுத்தாளர் அவர்களுக்கு மிகப்பெரிய அளவிற்கு தொல்லைகள். அதனால், அவரே சங்கடப்படக்கூடிய அளவிற்கு வந்துவிட்டார். நம்முடைய பெருமாள் முருகன் அவர்கள் எந்த அள விற்குச் சங்கடப்பட்டிருந்தால், அவர் ‘நான் இறந்து விட்டேன்’ என்று சொல்லியிருப்பார்; மனிதர்கள் இறப்பது எப்போது? என்று சொன்னால், அவர்கள் உடலால் இறப்பது அல்ல, பொதுவாகவே! சாக்ரட்டீஸ் இறந்துவிட்டாரா? பெரியார் இறந்துவிட்டாரா? திரு வள்ளுவர் இறந்துவிட்டாரா? அவர்கள் எல்லாம் என்றைக்கும் வாழுகிறார்கள்.
‘‘பெரியாரை இன்னமும் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்!’’
ஆனால், நம்முடைய பெருமாள் முருகன், அப்போது என்ன நினைத்தார்? ஒரு தனித்த பெருமாள் முருகன் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ‘தனி ஒரு மனிதன்’ என்று நினைத்தார். அதனால், அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு ஒரு சோதனையாக, இந்த எதிர்ப்புகள் வந்த நேரத்தில், அந்த எதிர்ப்புகளைப் பார்த்துதான், அவர் சலிப்பு ஏற்பட்டு அப்படி எழுதினார். ஆனால், அதற்குப் பிறகு, இன்றைக்கு உலகளாவிய நிலையிலே புகழ் பெற்றார் என்றால், வாழ்க்கையிலே எப்போதுமே தோற்று விடக்கூடாது என்ற உறுதியோடு எதிர்நீச்சல் மிக முக்கியம். நீச்சல் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பெரியாரிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி – எதிர்நீச்சல். அப்படி எதிர்நீச்சல் அடிக்கக் கூடியவர்களைப் பாராட்டி, மகிழ்ச்சிகரமாய் இருக்கக்கூடிய நிகழ்ச்சி இது. இதுதான் உண்மையிலேயே கொண்டாட்டம். ‘‘பெரியாரை இன்னமும் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்’’ என்ற உண்மையைச் சொன்னார். அவருடைய நிலையைச் சொன்னார்.
இயக்குநர் மாரி செல்வராஜின்
வாழ்விணையருக்கு நன்றி!
அதேபோல பெரியாரைப் புரிந்து கொண்டால், எவ்வளவு சிறப்பு என்பதற்கு அவருடைய வாழ்வி ணையருக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். சிறப்பான வகையிலே அவரை வழிநடத்திக் கொண்டி ருக்கிறார். அப்படிப்பட்ட நல்ல இணைப்புகள் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றன. எனக்கு இது முதலில் தெரியாது, அவர்களை அழைத்துபோது கூட எனக்குத் தெரியாது. (விருது வழங்கும்போது மாரி செல்வராஜ் அவர்களின் இணையர் திவ்யா அவர்களையும் மேடைக்கு அழைத்து சிறப்புச் செய்ததைக் குறிப்பிடு கிறார்). பொதுவாக நம்முடைய நாட்டிலே ஒரு பழக்கம் உண்டு. ஆண்களையேதான் பாராட்டுவார்களே தவிர, ஆண்களுடைய அந்தச் சிறப்புக்கு மகளிர்தான் அடிப்படையாக இருப்பவர்களைப் பாராட்ட மாட்டார்கள். அஸ்திவாரம் புதைந்துதான் இருக்கும் எப்போதும்; கோபுரங்கள் தான் எப்போதுமே மேலே இருக்கும். ஆனால், அஸ்திவாரம் இல்லை என்றால், கோபுரம் உயர்ந்து நிற்காது. அந்தச் சூழ்நிலையில் தான், எல்லா இடங்களிலும் மகளிரைக் கூப்பிட வேண்டும் என்று சொல்கிறோம்.
இரண்டு பேருடைய கருத்துகளும் உண்மையானவை, முக்கியமானவை!
இன்றைக்கு ஒரு பெரிய செய்தி, மனம் திறந்து பேசினார்; அதில் ஒப்பனைகளே கிடையாது. இவருடைய துறையில் ஒப்பனைகள் இருக்கும்; அரசியலில் கூட ஒப்பனை அரசியல் நடந்து கொண்டிருக்கிற காலகட்டம் இது. ஆனால், இங்கே சிறப்பாகப் பேசிய இந்த நிகழ்வு முழுக்க முழுக்க அப்பட்டமான உண்மை. நீதிமன்றக் கூண்டில் ஏறி சொல்லும்போது, ‘‘I Speak all truth; absolute truth; whole truth’’ என்று சொல்லுவார்கள். அது மாதிரி முழுக்க முழுக்க இரண்டு பேருடைய கருத்துகளும் உண்மையானவை, முக்கியமானவை.
ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லுகிறேன், அய்யாவைப் பற்றி. ஒரு சம்பவம் – அது இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டும். ‘‘தமிழர் தலைவர்’’ புத்தகம் என்று சாமி.சிதம்பரனார் அவர்கள் எழுதிய பெரியாரின் வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்தால், பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளலாம். அவ் வரலாற்றில், இந்தச் சம்பவம் வரும்.
‘‘போட் மெயில் பொன்னம்பலம்!’’
அய்யா அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த காலகட்டம். அப்போது அவர் தாடி வளர்க்கவில்லை. மலேசியாவுக்கு போய்த் திரும்பும் போதுதான் அவர் தாடி வளர்க்க ஆரம்பித்தார் 1929 இல். அதற்கு முன்னால் மீசையோடுதான் இருப்பார். கையில் ஒரு பெட்டி இருக்கும். ரயிலில் மூன்றாவது வகுப்பில்தான் பயணம் செய்வார் அய்யா அவர்கள். அப்படி பயணம் செய்யும்போது, பொன்னம்பலனார் கூட வருகிறார். எப்போதும் யாராவது இரண்டு நண்பர்கள் வருவார்கள்; அப்படி பொன்னம்பலனார் வருகிறார், அப்படி வருகிற போது கும்பகோணத்தில் ஓர் அய்யர் ஏறினார். இவருடைய பக்கத்தில் அமர்ந்தார். ஏதோ பேச்சு வந்த உடனே, அவரிடம் பொன்னம்பலார் கடுமையாக விவாதம் செய்துகொண்டிருக்கிறார். அய்யா பக்கத்தில் அமர்ந்திருந்தார். அவர் பேச, இவர் பேச, கடுமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பொன்னம்பலனாருக்கு ‘‘போட் மெயில் பொன்னம்பலம்’’ என்று பெயர். மேடையில் பேசும்போது கூட, ரொம்ப வேகமாகப் பேசுவார். பூவாளூர் பொன்னம்பலனார், அழகிரி போன்றவர்கள் வேகமாகப் பேசுவார்கள். பொன்னம்பலனார் வேகமாகப் பேசினார்; அந்த அய்யர் பதில் சொல்லிட்டு இருக்கிறார் அவரிடம் வேகமாக இவர் கேட்டார்; இவர் கேட்டதும், அவர் கோபம் அடைந்து இன்னும் கொஞ்சம் வேகமாக பேசினார். அய்யா பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவர் யார் என்று அந்த அய்யருக்குத் தெரியாது. இவரை விட வயதானவர் அவர்.
உடனே, அய்யா அவர்கள், ‘‘ஏங்க பொன்னம்பலம், இங்கே பாருங்கள்; அவர் கேட்பதற்கு, நீங்கள் பொறு மையாக பதில் சொல்ல வேண்டியதுதானே! அதை விட்டுட்டு, ஏன் கொஞ்சம் வேகமாகப் பேசுகிறீர்கள்? பொறுமையாக பதில் சொல்ல வேண்டியதுதானே’’ அப்படின்னு இரண்டு தடவை சொல்கிறார். ‘‘நல்லா சொல்றீங்க; அப்படி சொல்கிற கருத்தை, நிதானமாகக் கொஞ்சம் பொறுமையாகச் சொல்லலாமே, ஏன் இவ்வளவு வேகமா பேசுறீங்க’’ என்று அய்யா சொல்கிறார்.
இவர்கள் எல்லாம் இராமசாமி நாயக்கன் கட்சியைச் சேர்ந்தவர்கள்!
அப்போது குறுக்கிட்டு, அந்த அய்யர் சொல்கி றார், ‘‘அய்யா பெரியவரே இவங்கெல்லாம் நீங்கள் சொன்னீங்கன்னா கேட்க மாட்டார்கள்; இவர்கள் எல்லாம் இராமசாமி நாயக்கன் கட்சியைச் சேர்ந்த வர்கள். இப்படித்தான் அடாவடியாகத்தான் பேசு வார்கள்.’’ சொல்வது யாரிடம்? பெரியாரிடம். ‘‘இவர்க ளெல்லாம் அடாவடியாகத்தான் பேசுவார்கள். நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்க மாட்டார்கள்’’ என்றார். உடனே தந்தை பெரியார் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவருக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் சிரித்தனர். பக்கத்தில் இருந்த இரண்டு பயணிகளும் சிரித்துவிட்டனர். பெரியாரிடமே இப்படிச் சொல்கிறாரே என்று.
கொஞ்ச நேரம் ஆனவுடன், அய்யா அவர்கள், கழிப்பறைக்குப் போவதற்காக எழுந்து போனார்.
உடனே பக்கத்தில் இருந்தவர், அந்த அய்யரிடம் போய், ‘‘யோவ், உனக்கு ஏதாவது இருக்காய்யா? உன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் யார் தெரியுமா? அவர்தான்யா ராமசாமி நாயக்கர்’’ என்றார்.
அய்யாவிடம்
மன்னிப்புக் கேட்ட அய்யர்!
‘‘அப்படியா?’’ என்று கேட்டு, அலறிப் போனார். அய்யா அவர்கள் திரும்பி வந்த உடனே, அய்யாவின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘அய்யா மன்னிக்கவேண்டும்; மன்னிக்கவேண்டும். நான் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்தேன். இவ்வளவு பெரியவங்களா இருப்பீங்க என்பது இப்போதுதான் தெரிகிறது’’ என்றார்.
ஒவ்வொருத்தருக்கும் ஒரு புரிதல், தவறான புரிதல் என்பது வாழ்க்கையிலே எல்லோருக்கும் உண்டு. அய்யா அவர்கள், கடவுளைப் பற்றி சொன்னார். மதத்தைப் பற்றி சொன்னார் பெருமாள் முருகன் பேராசிரியர் அவர்கள், மலேசியாவில் அவர் செய்த அற்புதமான தொண்டைப்பற்றிச் சொன்னார். உரிமைகளை எடுத்துச் சொன்னார்; இதெல்லாம் சரி, ஆனால், அதில் கடவுளைப் பற்றிச் சொல்லுகிற நேரத்தில் கூட சொன்னார், தந்தை பெரியார் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். ‘‘நாங்கள் கடவுளைப் பற்றியோ, மதத்தை பற்றியோ, சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றி எல்லாம் பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது? எனக்கு எல்லோரும் சமம் என்று வர வேண்டும்; சகோதரத்துவம் வர வேண்டும்; மனிதர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய இயக்கத்தின் நோக்கம். ஆனால், அதற்குக் குறுக்கே ஏன்யா ஜாதி? என்று கேட்டால், ‘இல்லை, இல்லை, நீ ஜாதியை ஒழிக்க முடியாது; ஜாதி மனிதனால் செய்த ஏற்பாடு இல்லை. கடவுளே சொன்னார்’ என்று சொன்னால், எது காரணமாக இருந்தாலும், அதைத் தூக்கிப் போடு என்று சொல்கிறேன். அப்பொழுது கடவுளைக் குறுக்கே போட்டான்; மதத்தைக் கொண்டு வந்து குறுக்கே போட்டான்.
ஆகவே, அதை எதிர்க்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. ‘எனக்கு என்ன கடவுள்கிட்ட தகராறா?’ அய்யா கேட்டார், ‘‘நான் பார்க்காத ஒருத்தன்கிட்ட எப்படி தகராறு செய்ய முடியும்? இல்லாத ஒருத்தன்கிட்ட எப்படி தகராறு செய்ய முடியும்? ஆகவே எனக்கும், கடவுளுக்கும் எந்தச் சண்டையும் இல்லை. ஆனால், நீதான் கடவுள் சொன்னார் என்று சொன்னாய்.
‘‘சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்’’ – நான்கு ஜாதி களையும் நானே உண்டாக்கினேன் என்று கிருஷ்ணன் சொன்னான். கடமையை செய்யுங்கள்; அதிலிருந்து நீங்கள் தவறாதீர்கள். ஜாதி கடமை, ஜாதி வர்ணக் கடமையைச் செய்ய வேண்டும். அதை மாற்றவே முடியாது என்று சொன்னால், ஜாதி ஒழிக்கிறவன் நாணயமாக செய்ய வேண்டிய அவசியம் என்ன?’’ என்று கேட்டார்.
ஆகவேதான் அவருடைய தத்துவங்கள் என்பது இருக்கிறதே முழுக்க முழுக்க மனித நேயம். வேறு ஒன்றும் இல்லை.
(தொடரும்)
