சென்னை, ஜன.19- தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்றும், செம்மொழி இலக்கிய விருதுடன் ரூ.5 லட்சமும் வழங்கப்படும், ஒவ்வொரு மொழிக்கும் தனி விருது தேர்வுக் குழு அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சாகித்ய அகாடமி போன்ற புகழ்மிக்க கலாச்சார நிறுவனத்தை மோடி அரசு தனது காலடியில் மண்டியிடச்செய்யும் வேலையை அப்பட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்குத் தக்க எதிர்வினையாக, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தேசிய அளவில் தன்னாட்சி அமைப்புகள் சிதைக்கப்பட்டால் மாநிலங்களின் உரிய படைப்புகள் தேசம் முழுவதும் கவனம் பெறுவதைப் போன்று உயர்த்திப் பிடிக்கும். இது பன்மைத்தன்மையை காக்கும் பண்பாட்டு நடவடிக்கைக்கான மிகச்சிறந்த முன்னகர்வு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூவத்தில் 50-க்கும் மேற்பட்ட ‘சாமி’ சிலைகள்
திருவள்ளூர், ஜன. 19- திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிஞ்சிவாக்கம் கிராமத்தில் கூவம் ஆற்றுப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட சாமி கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (18.1.2026) காலை பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி (30) என்பவர், அவ்வழியாகச் செல்லும் கூவம் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் இறங்கிய அவர், நீருக்கடியில் ஏராளமான கற்சிலைகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து தனது நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, ஆற்றிலிருந்து வரிசையாகச் சிலைகள் மீட்டெடுக்கப்பட்டன.
அவற்றில், விநாயகர், முருகன், அய்யப்பன் பைரவர், நாரதர் நாகம்மன், வாசுகி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. மீட்கப்பட்ட சிலைகளை இளைஞர்கள் ஆற்றங்கரையில் வரிசையாக அடுக்கி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலைகளைப் பார்வையிட்டனர். இளைஞர்களால் மீட்கப்பட்ட அனைத்துச் சிலைகளும் தற்போது வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் எங்கிருந்து வந்தன? யாராவது கொண்டு வந்து ஆற்றில் வீசினார்களா? அல்லது பழமையான கோயிலைச் சேர்ந்தவையா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், பேசுபொருளையும் உருவாக்கியுள்ளது.
மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில்
குப்பை கொட்டிய 241 பேருக்கு
ரூ.1.90 லட்சம் அபராதம்
சென்னை, ஜன. 19- சென்னை மாநகராட்சிக் குட்பட்ட மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய கடற்கரைப் பகுதிகளில் விதிகளை மீறி குப்பை கொட்டிய 241 நபர்களுக்கு மொத்தம் ரூ.1,90,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள கடற்கரைப் பகுதிகள் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் இருப்பதை உறுதி செய்ய, மாநகராட்சி சார்பில் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பின்வரும் கடற்கரைப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன:
மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரைகளில் சுகாதாரத்தைப் பேணும் வகையில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நவீன இயந்திரங்களைக் கொண்டு நாள்தோறும் சுழற்சி முறையில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களைக் கண்காணிக்கவும், அபராதம் விதிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைகளைத் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
