இக்காலத்தில் எங்கு பார்த்தாலும் பணமில்லாத காரணத்தால் மக்கள் படும் துன்பம் சொல்ல முடியாததாக இருக்கின்றது. இன்னார் கஷ்டப்படுகின்றார்கள் இன்னார் கஷ்டப் படாமல் இருக்கிறார்கள் என்று சொல்லுவதற் கில்லை. ஏழை முதல் பணக்காரன் வரை ஆண்டி முதல் அரசன் வரை எல்லோரும் பொருளாதார நெருக்கடியால் இன்னது செய்வ தென்று தோன்றாமல் திக்குமுக்காடுகின்றார்கள். நமது நாட்டு மக்களில் நூற்றுக்குத் தொண் ணூற்றொன்பது பேர் பரம ஏழைகள் என்பது தெரிந்த விஷயம். இத்தகைய ஏழை மக்கள் உணவுக்கும், உடைக்கும், உறைவிடத்திற்கும் படுந்துன்பம் இவ்வளவு அவ்வளவு என்று யாராலும் குறித்துரைக்க முடியாது. இந்த நாட்டில் பிழைப்பில்லாமல் பெண்டு பிள் ளைகள், உற்றார் உறவினர், எல்லோரையும் விட்டு விட்டு கடல் கடந்து அந்நிய நாடு சென்று கூலி வேலை செய்யும் மக்களில் இந்தியரே அதிகமானவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படிப்பட்ட கூலிகளுக்குக்கூட அந்நிய நாடுகளிலும் பிழைப்பு இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் பெண்டு பிள்ளைகளுடன் வறுமை யின் கொடுமை யினால் பல பிணிகளுக்கும் ஆளாகி இரத்தக் கண்ணீர் வடிக்கின்றார்கள். நாட்டின் தலைவர்கள் என்பவர்களும் பணக் காரர்களும், படிப்பாளிகளும் இத்தகைய ஏழை மக்களின் துயரைப் போக்க ஒரு வழியும் செய்யக் கவலை யெடுத்துக் கொள்ளக் காணோம்.
வெள்ளைக்காரர்களின் அரசாட்சியையொழித்து இந்தியர்களுடைய சுயராஜ்யத்தை ஸ்தாபிக்கும் பொருட்டு “காங்கிரஸ்” சட்டமறுப்பு இயக் கத்தை வருஷக் கணக்காக நடத்திக் கொண்டு வருகிறது. சுயராஜ்ய ஆவேசங் கொண்ட வாலிபர்களும், நடுத்தர வய துள்ளவர்களும், காங்கிரசின் பேராலும், சட்ட மறுப்பின் பேராலும் ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். சட்ட மறுப்பின் பெயரால் இவர்கள் செய்யும் காரியங்கள் இன்னவையென்பது வாசகர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. இந்தச் சட்ட மறுப்பால் அரசாங்கத்திற்கும் கஷ்டமும், நஷ்டமும் உண்டாவதைப் பற்றி, நமக்குக் கவலையில்லை. ஆனால், நமது பொது ஜனங்களுக்கும் பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் சட்ட மறுப்பு இயக்கம் உண்டாக்கிக் கொண்டு வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தச் சட்ட மறுப்பு இயக்கத்தை அடக்கும் பொருட்டு அரசாங்கத்தார் எடுத்துக் கொண் டிருக்கும் முயற்சியினாலும் பொது ஜனங் களுக்குக் கஷ்டம் உண்டாகாமற் போகவில்லை.
சட்ட மறுப்புக் கைதிகளாக ஆயிரக் கணக்கான மக்களைச் சிறையிலடைத்துக் கொண்டு அவர்களுக்குச் சோறு போட்டு வருகிறார்கள். இன்னும் சட்ட மறுப்பைச் சமாளிக்கும் விசேஷ போலீசாரையும் மற்றும் பல உத்தியோகஸ்தர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே இவை போன்ற காரியங்களுக்குச் செலவாகும் பணமெல்லாம் பொது மக்கள் தலையிலேயே விடிகின்றது. இதன்மூலம் ஏழைகள் படும் துயரை அள விட்டுக் கூற முடியுமா? இது நிற்க,
படித்த கூட்டத்தினர்க்கு ஏழைமக்களிடம் எள்ளளவும் அனுதாபமிருப்பதில்லை. அவர்கள் எப்பொழு தும் பட்டம் பதவி முதலியவைகளைப் பெற்று அச்செல்வாக்கைக் கொண்டு ஏழைமக்களின் இரத்தத்தை உறிஞ்சி, தாங்கள் மாத்திரம் சவுக்கியமாக வாழ்வதிலேயே குறிப்பாய் இருப்பவர்கள். இவர்களைப் போலவேதான் பணக்காரர்களும் ஏழை மக்கள் பால் சிறிதும் இரக்கமில்லாமல் தமது நன் மைக்கான காரியங்களிலேயே கவனத்தைச் செலுத்தி வருகின்றவர்களாயிருக்கிறார்கள். இந்தப் படித்தவர்களுடைய தயவும் பணக் காரர்களுடைய தயவும் இன்றேல் அரசாங்கமும் நாட்டில் தங்கள் விருப்பப்படி ஆண்டு கொண்டிருக்க முடியாது. ஆகையால் இவ்விரு கூட்டத்தாரையும் திருப்தி செய்விக்க வேண்டிய நிர்ப்பந்தம் எப்பொழுதுமே அரசாங்கத்திற்கு உண்டு. ஆகையால் அரசாங்கத்தார், படித்த வர்கள், பணக்காரர்கள் ஆகியவர்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் மேலும் மேலும் வளர்ச்சியடைவதற்குத் தகுந்த முறையில் ‘சுயராஜ்யம்’ என்னும் பெயரினால் அரசியல் சீர்திருத்தம் வழங்கி வருகின்றனர். இந்தச் சீர் திருத்தத்தின் மூலம் கிடைக்கும் லாபங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் விஷயமாக படித்தவர்களுக்குள்ளும், பணக்காரர்களுக் குள்ளும் உண்டாகியிருக்கும் கட்சிகள் பல. இக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தல்களில் வெற்றிபெறும் பொருட்டு செய்யும் ஆர்ப் பாட்டங்கள் பல. பிராமணர் கட்சி, அல்லாதார் கட்சி, முஸ்லிம் கட்சி, சீக்கியர் கட்சி, தாழ்த்தப் பட்டோர் கட்சி, கிறிஸ்தவர் கட்சி என வகுப்பின் பேராலும் மதத்தின் பேராலும் உண்டாகியிருக் கும் கட்சிகள் பல. இக்கட்சிகளில் பிராமணரும் காங்கிரஸ் பிராமணர், மிதவாத பிராமணர், சுதேசி பிராமணர், சனாதன தருமப் பிராமணர் எனப் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. பிராமணரல்லாதார்க்குள்ளும் இதுபோலவே, தேசிய பார்ப்பனரல்லாதார், சுயேச்சை பார்ப்பனரல்லாதார் எனப் பல வகைக் கட்சிகள் இருக்கின்றன. முஸ்லீம்களுக்குள்ளேயும், மவுலானா ஷௌகத் அலி கட்சி, சர். முகமது இக்பால் கட்சி, மவுலானா ஹசரத் மோகினி கட்சி, தேசிய முஸ்லிம் கட்சி எனப் பலபிரிவுகளிருக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களுக்குள் திருவாளர்கள் அம்பேத்கர், சீனிவாசன் கட்சி, திருவாளர்கள் மூஞ்சே-ராஜா ஒப்பந்தக் கட்சி எனப் பிரிவுகளிருக்கின்றன. இவ்வாறே ஒவ்வொரு வகுப்புக் கட்சிக்குள்ளும் உட்பிரிவு கட்சிகள் பல இருந்து வருகின்றன.
இப்பிரிவுகளும் கட்சிகளும் தோன்றியிருப்பதன் நோக்கம், சீர்திருத்தத்தில் பட்டம் பதவிபெறுவதையன்றி வேறில்லையென்பதில் அய்யமில்லை. இந்தக் கட்சிகளில் ஒன்றேனும் அரசியல் திட்டத்தில் மதப் பாதுகாப்பும், பணக்கார நிலச்சுவான்தார் பாதுகாப்பும் இருக்கக் கூடாது என்பதுப் பற்றி போராடாத ஒரு காரணத்தைக் கொண்டே இவையெல்லாம், படித்தவர்களின் நன்மைக்காகவும், பணக்காரர் களின் ஆதிக்கத்திற் காகவும் சிருஷ்டிக்கப்பட்ட கட்சிகளேயொழிய ஏழைமக்களின் நன்மைக் காகச் சிருஷ்டிக்கப்பட்டவைகள் அல்லவென் பதை உணரலாம்.
இன்னும் அரசியல் காரணமாகவும், மதம் காரணமாகவும் தேசத்தில் ஒரு வகுப்போடு ஒரு வகுப்பும், ஒரு மதத்தோடு ஒரு மதமும் சதா கலகம் விளைத்துக் கொண்டிருப்பதைத் தடுப் பதற்கான முயற்சிகளை எந்த கட்சியினரும் செய்ய முன் வரவில்லை. இவ்விஷயத்தில் யாரும் கவலை கொண்டிருக்கிறார்கள் என்று கூடச் சொல்ல முடியவில்லை. உதாரணமாக, இப்பொழுது பம்பாய் நகரத்தில் நடைபெறும் இந்து முஸ்லீம் கலக சம்பந்தமான செய்திகள் நமது மனத்தைக் கலக்குகின்றன. அங்கு இந்துக்களிலும், முஸ்லீம்களிலும் நிரபராதிகள் படும் துன்பத்தைக் கேட்கும் எவரும் இரத்தக் கண்ணீர் வடியாமலிரார். கடைகள் கொள்ளை போகின்றன. தீக்கு இரையாக்கப் படுகின்றன. பலர் கொல்லப் படுகிறார்கள். எண்ணற்றவர்கள் காயமடைகின்றார்கள். அபலைகளான பெண் மக்களும் கூட அவமானமும் அடியும் படகிறார்களென்றால் இதை விட இன்னும் வேறு என்ன வேண்டும்? மசூதிகளும் கோயில்களும் தாக்கப்படுகின்றன. இவைகள் தாக்கப்படுவதில் நமக்கு சிறிதும் கவலையில்லை. இதன்மூலம் இன்னும் கலகம் வலுத்து வருகிறதென்பதை பற்றியே கவலைப்படுகின் றோம். உண்மையில் இக்கலகம் உண்டாவதற்கு முதலில் அரசியல் காரணமாக இருந்தாலும் வரவர இக்கலகம் மதச் சண்டையாகவே முற்றிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆகவே உண்மையில் இது போன்ற வகுப்புக் கலகங்களும், மதச் சண்டைகளும் ஒழிய வேண்டுமானால் மதப்பாதுகாப் பும், ஜாதி நாகரிகப் பாதுகாப்பும் நிலச்சுவான்தாரர் பணக்காரர் களுக்குப் பாதுகாப்பும் உள்ள அரசியல் சீர்திருத்தத்தால் ஒழி யுமா? என்றுதான் கேட்கிறோம். ஏழை மக்களின் வறுமையைப் போக்குவதற்கு முயலாமலும் கவலை கொள்ளாமலும் ஜாதி மதச் சண்டைகளை ஒழித்துச் சமாதானத்தை உண்டாக்க வழி தேடாமலும் இருந்து கொண்டு, வீணே “அய்க்கிய ஆட்சி” “மாகாண சுயாட்சி” “குடியேற்ற நாட்டு ஆட்சி” “சுயராஜ்யம்” என்று பட்டம் பதவிகளுக்காக வேண்டிக் கூச்சலிடும் அரசியல் கட்சிகளால் நாட்டுக்கு என்ன நன்மை உண்டாகுமென்று கேட்கிறோம்.
ஆகையால் பொது ஜனங்கள் எந்த அரசியல் கட்சிக்காரர்களை நம்பினாலும் நன்மையடையப் போவதில்லை என்பது நிச்சயம். ஜாதிப் பிரிவுகளுக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் ஏழை பணக்காரத் தன்மை களுக்கும் காரணமாக இருக்கும் மதத்திற்கும் ஆதரவளிக்கும் எக்கட்சியினாலும் நாட்டுக்குக் கடுகளவும் நன்மை செய்ய முடியாது என்று எச்சரிக்கை செய்கின்றோம். மதமும் பாது காப்பும் நிலைத்து நிற்கும் வரையிலும் வகுப்புச் சண்டைகளும், மதச் சண்டைகளும் ஒழியப் போவது இல்லை என்பது நிச்சயம். ஆகையால் முதலில் மதத்தையும் அதன் மூலம் உண்டான மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க வேண்டியதே உண்மையான தேசாபிமானிகளின் கடமை யாகும். இதை விட்டுவிட்டு வீணாக ‘சுயராஜ்யம்’ ‘சுதந்திரம்’ ‘விடுதலை’, ‘சமத்துவம்’ என்று கூச்சலிடுவதெல்லாம் பொதுஜனங்களை ஏமாற்றும் பொருட்டே என்பதை மீண்டும் கூறி எச்சரிக்கின்றோம்.
குடிஅரசு – தலையங்கம் – 10.07.1932