இங்கே ‘புண்ணியம்’
அங்கே சட்டவிரோதம்!
இந்தியாவில் ‘கோசாலா’ என்ற பெயரில் மாடுகளை அடைத்து வைத்து அதற்கு அமாவாசை, முழு நிலவு நாளன்றும் இதர பரிகாரம் செய்பவர்கள் அகத்திக்கீரை, கொத்தமல்லித்தழை, கேரட், பூசணி போன்றவை தருவார்கள்.
குஜராத், மகாராட்டிரா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ‘கபூத்தர் கானா’ என்று புறாக்களுக்காகவே பிரத்யேகமாக கோபுரங்கள் அல்லது திறந்தவெளி இடங்களை அமைத்து உணவளிப்பர்.
அன்றாடம் ஆயிரக்கணக்கான கிலோ தானியங்கள் பொதுமக்களால் இங்கே வழங்கப்படுகின்றன. இது ஒரு ‘புண்ணிய’ காரியமாகவும், முன்னோர்களின் ஆசி கிடைக்கும் (?) செயலாகவும் நம்பப்படுகிறதாம்!
அதே நேரத்தில், லண்டன் உள்ளிட்ட இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் பொது கோசாலா என்ற பெயரில் மாடுகளை அடைத்துவைத்து உணவளிப்பது மற்றும் புறாக்களுக்கு உணவளிப்பது சட்டப்படி குற்றமாகும்.
லண்டனின் புகழ்பெற்ற ‘டிரஃபால்கர் சதுக்கத்தில்’ புறாக்களுக்கு உணவளித்தால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.55,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். சட்டத்தை மீறி தொடர்ந்து உணவளிப்பவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
ஏன் இந்தத் தடை?
புறாக்களின் எச்சம் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களை அரித்துச் சிதைக்கிறது.
‘அளவுக்கு அதிகமான புறாக்கள் பெருகுவது நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும்’ என அந்நாட்டு அரசு கருதுகிறது. தரையில் சிந்தப்படும் தானியங்கள் எலிகளைக் கவர்ந்திழுப்பதாக அதிக புகார்கள் எழுப்பப்படுகின்றன.
மாடுகளுக்கும், பறவைகளுக்கான கருணை ஒருபுறம் இருந்தாலும், வளர்ந்து வரும் நகரமயமாக்கலில் இவற்றினால் சுகாதாரச் சீர்கேடு ஆபத்துகளை விளைவிக்கும் நுண்ணுயிர்ப் பரவலால் கடுமையான நோய்த் தொற்று ஏற்படும்.
நோய்களைக் கட்டுப்படுத்த அய்ரோப்பிய நாடுகளில் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்தவர்களும் மிகப் பெரிய விலையாக தங்கள் இன்னுயிரையும் இழந்துள்ளனர்.
குறிப்பாக எலிகளால், புறாக்களால் ஏற்படும் அமிபா தொற்று காலரா உள்ளிட்ட பல நோய்களை உருவாக்கி அய்ரோப்பாவில் அரைவாசி மக்கள் தொகையை காலிசெய்துவிட்டது.
அந்த பாதிப்பில் இருந்து மீண்ட வரலாற்றின் காயம் இன்றளவும் அய்ரோப்பிய நாடுகள் குறிப்பாக லண்டன், பாரிஸ், லிஸ்பன் மற்றும் மாட்ரிட் நகரங்களில் உண்டு. காலரா பரவலால் ஒட்டுமொத்த மாட்ரிட் மக்களும் மாண்ட வரலாறு இன்றும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காக பசுக்களுக்கு உணவளிப்பது, புறாக்களுக்கு மத நம்பிக்கையின் பெயரில் ஆசியா நாட்டவர், குறிப்பாக இந்தியாவிலிருந்து அய்ரோப்பிய நாடுகளில் குடியேறிய ஹிந்துக்கள் மற்றும் மார்வாடிகள் சுகாதாரம் பற்றி சிந்திக்காமல் சாணம் தோய்ந்த மாடுகளை கட்டி வைத்து உணவளிப்பது மற்றும் புறாக்களுக்கு உணவளிப்பது போன்றவற்றிற்கு கடுமையான சட்டம் கொண்டு தடை (12.1.2026) செய்து வருகிறது.
புறாக்களைப் பற்றி திரைப்படங்களில் வருணித்துப் பாடுவதை ரசனையோடு நிறுத்திக் கொள்வதே நல்லது.
ஆனால் புறாக்களை வளர்ப்பது – அவைகளுக்குத் தீனிப் போடுவதால் ஏற்படும் நோய்கள் ஆபத்தானவை!
புறாக்களின் எச்சங்கள், பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் கிருமிகளைக் கொண்டிருக்கும். அவற்றின் தொற்று காரணமாக மனிதர்களுக்கு நுரையீரல் வீக்கம் ஏற்படுகிறது. வயிற்றுப் போக்கு, வாந்தி, காய்ச்சல் ஏற்படக் கூடிய நிலையும் ஏற்படும்.
அதே போல, மாட்டுச் சாணத்தால் ஏற்படும் ஆபத்துகளும் அதிகம். நுரையீரலைப் பாதித்து ஆஸ்துமாவை உண்டாக்கும். இரத்தக் கொதிப்பு, இதயத் துடிப்பு சீர்குலைவு முதலியவற்றை ஏற்படுத்தும்.
மாட்டு மூத்திரத்தை ‘கோமியம்’ என்று பயப் பக்தியோடு குறிப்பிடுவார்கள். கோமியத்தின் பக்க விளைவுகள் பற்றி தெரிந்திருந்தும் அய்.அய்.டி. போன்ற உயர் தொழில் நுட்ப இயக்குநர் என்ற தகுதியில் உள்ளவர்கள்கூட ‘கோமியம் குடித்தால் நோய்கள் அண்டாது’ என்று ‘குடுமியை’ தட்டிக் கொண்டு உபதேசிப்பார்கள்.
ஆனால், உண்மை என்ன? மருத்துவ அறிவியல் என்ன கூறுகிறது?
சாணத்தில் E.coli (Escherichia coli) போன்ற பாக்டீரியா மூலம் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுகிறது. மாட்டு மூத்திரத்தில் உள்ள கிருமிகளால் நிமோனியா காய்ச்சல், வயிற்றுப் போக்கு, இரத்த சோகை, சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படும்.
இப்படி எல்லாம் பாதிப்புகள் பற்றித் தெரிந்திருந்தும் பல மூடத்தனங்களைப் பக்தியின் பெயரால் பரப்புகின்றனர். இவர்களெல்லாம் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளே!
