சென்னை, ஏப்.23 அடுத்த சில மாதங்களில் ஆதித்யா எல்-1, சந்திரயான்-3 உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் செயல்படுத் தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் ஏவுதல் திட்டம் வெற்றியடைந்த பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்ய (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:சி-55 ராக்கெட் திட்டம் பிஎஸ்எல்வி-யின் 57-ஆவது பயணமாகும். இதன் வெற்றி, பிஎஸ்எல்வி வணிகப் பணிகளுக்கு ஏற்ற, நம்பகமான ராக்கெட் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. பிஎஸ்எல்வி ராக்கெட் வடிவமைப்பில், நேரம், செலவைக் குறைக்க பல்வேறு யுத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதற்காகப் பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த சில மாதங்களில் ஆதித்யா எல்-1, சந்திரயான்-3, ககன்யான் சோதனை ஓட்டம் என பல்வேறு முக்கியத் திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
பன்னாட்டு அளவில் அதிக செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய வெற்றிகரமான ராக்கெட் என்ற பெருமையை பிஎஸ்எல்வி பெற்றுள்ளது. எனவே, வர்த்தக ரீதியில் ராக்கெட்களை ஏவும் பணிகள் அதி கரிக்கப்படும். மேலும், எதிர்காலத் தேவைக்கேற்ப புதிய ராக்கெட் உருவாக்கத்துக்கான ஆராய்ச்சிகளிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.