திருப்பூர், ஜன.18 திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி மூலம், கடந்த ஓராண்டில் மட்டும் 924 பச்சிளம் குழந்தைகள் உயிர் காக்கப்பட்டுள்ளனர். இந்த உன்னதமான காரியத்திற்கு 539 தாய்மார்கள் முன்வந்து தாய்ப்பால் கொடை வழங்கியுள்ளனர்.
கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த தாய்ப்பால் வங்கி, 2023-ஆம் ஆண்டு வரை போதிய வரவேற்பின்றி சற்று மந்தமாகவே செயல்பட்டது. இருப்பினும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் குழுவினரின் தொடர் விழிப்புணர்வு முயற்சியால், தற்போது தாய்ப்பால் கொடை அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்லூரி ‘டீன்’ மனோன்மணி அவர்கள் கூறியதாவது: “கொடையாகப் பெறப்படும் தாய்ப்பால் நேரடியாக குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவை முறையாகச் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே குழந்தைகளுக்குப் புகட்டப்படுகின்றன. இதற்கெனத் தனி மகப்பேறு மருத்துவர் குழு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.”
தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கு, இந்த வங்கி ஒரு பெரும் வாய்ப்பாக உள்ளது.
24 மணி நேர சேவை: உபரி தாய்ப்பால் உள்ள தாய்மார்கள் எந்நேரமும் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு கொடை வழங்கலாம்: திருப்பூர் மாவட்டத்தில் இந்த வசதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. இங்கிருந்து தேவைப்படும் பிற அரசு மருத்துவமனைகளுக்கும் தாய்ப்பால் அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் சிசு இறப்பு விகிதத்தைக் குறைக்கும் முயற்சியில், இந்த தாய்ப்பால் வங்கி மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தாய்ப்பால் கிடைக்காத நிலையில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு, இந்தக் கொடை மறுவாழ்வு அளிக்கிறது. “உபரி தாய்ப்பால் இருந்தால் கொடை செய்ய முன்வாருங்கள்; பச்சிளம் உயிர் களைக் காப்போம்!” என மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
