திருவண்ணாமலை, ஜன.18 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குறுக்கு வழியில் பக்தர்கள் செல்ல முயற்சித்ததால் தமிழ்நாடு – ஆந்திர மாநில பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலுக்கு நாள்தோறும் வெளிமாவட்டம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வழிபாடு செய்யவும், 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் செல்லவும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலுக்கு வருகின்றனர்.
வழக்கத்தை விட பொங்கல் விழாவென்பதால் அண்ணாமலையார் கோயிலுக்குள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் ராஜகோபுரம் வழியே நீண்ட வரிசையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆயிரம் கால் மண்டபம் அருகே பக்தர்கள் வரிசையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஆந்திரா மாநில பக்தர்கள் வரிசையில் குறுக்கே சென்று வழிபாடு செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும், ஆந்திர பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. ஒருவரை ஒருவர் தலை முடியை பிடித்து அடித்து சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இந்த நிகழ்வு அண்ணாமலையார் கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒரு புறம் இருக்க கோயில் சார்பில் போடப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வேலிகளை தாண்டியும் பக்தர்கள் குதித்து செல்ல முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
