சென்னை, ஜன.18 பொங்கல் விழா விடுமுறையை முன்னிட்டு சென்னையின் முக்கிய கடற்கரைகளில் குவிந்த 160.83 மெட்ரிக் டன் திடக்கழிவுகளைப் பெருநகர சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது.
தீவிரமான தூய்மைப் பணிகள்சென்னையின் அடையாளங்களாக விளங்கும் மெரீனா, பெசன்ட் நகர் உள்ளிட்ட 6 முக்கிய கடற்கரைகளில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, 14.1.2026 முதல் கூடுதல் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நவீன இயந்திரங்களைக் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணிகளை மேற்கொண்டது.
கடற்கரை வாரியாக அகற்றப்பட்ட கழிவுகள் 14.1.2026 – –- 16.1.2026 மூன்று நாட்களில் சேகரிக்கப்பட்ட மொத்தக் கழிவுகளின் விவரம் மெரீனா கடற்கரை116.17 பெசன்ட் நகர்20.97 திருவான்மியூர்9.02 பாலவாக்கம் 6.96 நீலாங்கரை4.34 திருவொற்றியூர்3.37 மொத்தம்160.83 பொதுமக்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், உணவு எச்சங்கள் மற்றும் குப்பைகளைக் கொட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கடற்கரையின் தூய்மையைப் பேணிக் காக்க வேண்டும் என்றும், கழிவுகளை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
2,000 ஆண்டு பழைமையான நாணயங்கள்
பாகிஸ்தான் தொல்லியல் துறை கண்டெடுப்பு
இசுலாமாபாத், ஜன.18 பாகிஸ்தானில் 2,000 ஆண்டுகள் பழைமையான குஷானப் பேரரசு காலத்து நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
நம் அண்டை நாடான பாகிஸ் தானின் ராவல்பிண்டி அருகில் உள்ள தட்சசீலம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இடத்தில், 2,000 ஆண்டுகள் பழைமையான குஷான பேரரசு காலத்து நாணயங்களை, அந்நாட்டு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
இந்த நாணயங்கள் குஷானப் பேரரசின் கடைசி பேரரசர்களில் ஒருவரான, மன்னர் வாசுதேவாவின் காலமான 2ஆம் நுாற்றாண்டை சேர்ந்தவை என கூறப்படுகிறது.
மேலும், தட்சசீலம் அருகில் உள்ள பீர்மவுன்ட் என்ற இடத்தில், விலைமதிப்பற்ற லேபிஸ் லாசுலி என்ற நீலக்கல் துண்டுகளையும் கண்டுபிடித்துள்ளனர். இது நாணயங் களைவிட மிகவும் தொன்மையானது.
கண்டெடுக்கப்பட்ட வெண்கல நாணயங்களில் ஒருபுறம் மன்னர் வாசுதேவாவின் உருவமும், மறுபுறம் ஒரு பெண் தெய்வத்தின் உருவமும் பொறிக்கப்பட்டு உள்ளன.
இது குஷான மன்னர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் பின்பற்றாமல், பல மதக் கடவுள்களையும் மதித்து போற்றி னார்கள் என்பதை காட்டுகிறது.
மேலும், இந்திய, ஈரானிய, கிரேக்க மற்றும் புத்த மதச் சின்னங்களையும் தங்கள் நாணயங்களில் குஷான மன்னர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கண்டுபிடிப்புகளின் வாயிலாக, தட்சசீலம் ஒருகாலத்தில் உலகளாவிய வணிக மய்யமாக இருந்தது உறுதியாகியுள்ளது.
தட்சசீலம், அப்போதைய மவுரியப் பேரரசின் தலைநகரான பாடலிபுத்திரம் எனும், இன்றைய பீகார் தலைநகர் பாட்னாவுடன் கலாசார மற்றும் வணிக பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
மேலும், கனிஷ்கர் போன்ற மன்னர்களின் கீழ், தட்சசீலம் நிர்வாக மய்யமாக மாறியதுடன், கிரேக்கம், பாரசீகம் மற்றும் இந்திய கலைகள் இணைந்த காந்தார கலை வளரவும் முக்கிய இடமாக திகழ்ந்துள்ளது.
