மும்பை ‘‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்மாரக்’’கில் தமிழர் தலைவர் ஆசிரியர்!
உடுமலை வடிவேல்
- மும்பை ‘‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்மாரக்’’கில் தமிழர் தலைவர் ஆசிரியர்!
- சொன்னதைச் செய்வது; செய்வதை மட்டுமே சொல்வது!
- இரண்டு மாநிலங்களையும் சமூகநீதி எனும் தத்துவத்தால் இணைத்தார்!
- ‘‘Annihilation of Caste” புத்தகம்!
- கூடி நின்றவர்கள் வாயடைத்துப் போயினர்!
- அம்பேத்கரும், பெரியாரும் பாடுபட்டது எதற்காக?
- பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட புத்தகங்கள் அளிப்பு!
- ஆலோசனைகளை வழங்கினார் தமிழர் தலைவர்!
- ஆசிரியரின் பண்பைக் கண்டு நெகிழ்ந்தனர்!
- மூன்று மணி நேரம்!
- உற்சாகத்துடன் அனைவருக்கும் விடை கொடுத்தார்!
கடந்த ஜனவரி 3, 4 ஆம் நாள்களில் மும்பையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்கச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஜனவரி 5 ஆம் தேதி மும்பையில் உள்ள ‘‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்மாரக்’’கைப் பார்வையிட்டார். அதன் விவரம் வருமாறு:
‘‘ஓய்வு என்பது தற்கொலைக்குச் சமமானது.” இது 95 வயது வரையிலும் மூத்திரப் பையை தூக்கிக்கொண்டு சூத்திர, பஞ்சம இழிவு நீங்க தன் வாழ்வையே ஒப்ப டைத்துக்கொண்ட தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழி! எனவே, ‘‘ஓய்வு என்பது இன்னொரு பணி செய்வதே” என்று செயலுருவாக்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இரண்டுமே மனித சமூகத்திற்கும், ஓர் இனத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டோருக்கும் வழங்கிய வாழ்வியல் அருங்கொடையாகும்.
சொன்னதைச் செய்வது;
செய்வதை மட்டுமே சொல்வது!
செய்வதை மட்டுமே சொல்வது!
பெரியார் தொண்டர்களின் சிறப்பு என்னவென்றால், ‘‘சொன்னதைச் செய்வது; செய்வதைத்தான் சொல்வது!’’ அதாவது ‘உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதது’ ஆகும். அப்படித்தான் மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் இரண்டும் இணைந்து, “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – 2026” தமிழ், ஆங்கிலம், மராத்தி என மூன்று மொழிகளில் கருத்தரங்குகளை நடத்தி முடித்திருந்தன.
இரண்டு மாநிலங்களையும்
சமூகநீதி எனும் தத்துவத்தால் இணைத்தார்!
சமூகநீதி எனும் தத்துவத்தால் இணைத்தார்!
மூன்று நிகழ்ச்சிகளிலும் கழகத் தலைவர் கலந்துகொண்டு இருமொழிகளில் பேசி, இரண்டு மாநிலங்களையும் சமூகநீதி எனும் தத்துவத்தால் இணைத்திருந்தார். அந்த வகையில் மும்பை மாநாடு 2026 மிகப்பெரிய உணர்ச்சியை, எழுச்சியை உண்டாக்கும் அளவுக்கு நடந்து முடிந்திருந்தது. மராத்தியர்கள் திராவிடர் கழகம், தமிழர் தலைவர் ஆசிரியரை ‘வீரமணி ஜி’ என விளித்து, “நீங்கள் வழிகாட்டுங்கள். நாங்கள் உங்கள் பின்னால் வரத்தயாராக இருக்கிறோம்” என்று பேசியிருந்தனர். கழகத் தலைவரும், ‘‘தமிழ்நாடு மற்றும் மகா ராட்டிரம் இரண்டும், இரண்டு மாநிலங்கள். ஆகவே, ‘எது நம்மை இணைக்கிறதோ அதை அகலப்படுத்துவோம்! எது நம்மைப் பிரிக்கிறதோ அதை அலட்சியப்படுத்துவோம்’” என்ற உத்தியைக் கூறி, ‘‘இரண்டு மாநிலங்களிலும் உள்ள சமூகநீதிப் பற்றாளர்கள் ஒரு கூட்டமைப்பாக இணைந்து பணி செய்வோம்’’ என்று பேசி மிகப்பெரிய உணர்ச்சியையும், எழுச்சியையும் உண்டாக்கியிருந்தார்.
கழகத் தலைவருக்கு 6 ஆம் தேதியன்று காலை யில் தான் விமானம். ஆகவே 5 ஆம் தேதி ஓய்வெ டுத்துக்கொள்ளலாம். 93 வயதாயிற்றே அந்த உடல்தான் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளட்டுமா என்று கெஞ்சாதா? என்றெல்லாம் இருந்தாலும், நாம்தான் இந்தக்கட்டுரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? ‘‘ஓய்வு என்பது இன்னொரு பணி செய்வதே” – அதன்படி கழகத் தலைவர் தங்கியிருக்கும் ‘பவாய்’ பகுதியில் இருந்து நவி மும்பையில் அய்ரோலி பகுதியில் உள்ள, ‘‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்மாரக்”கைப் பார்ப்பதற்காக திட்ட மிட்டிருந்தார். 5.1.2026 திங்கள்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மும்பை இலெ மூரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் – நங்கை இணையர், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், உடுமலை வடிவேல் உள்ளிட்டோர் மூன்று வாக னங்களில் கழகத் தலைவர் வந்த வாகனம் நடுவில் வர புறப்பட்டோம்.

”டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்மாரக்” வழமையாகத் திங்கள்கிழமைகளில் தூய்மை செய்யும் நாளாதலால், அன்று விடுமுறை. தமிழர் தலைவர் பார்வையிடுவதற்காக சிறப்பு அனுமதி பெறப்பட்டிருந்தது. சுமார் ஒரு மணி நேரத்தில் அய்ரோலியில் இருக்கும் அம்பேத்கர் ஸ்மாரக் சென்று விட்டோம். நுழைவு வாயிலே, அந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றியது. அதாவது, புத்தகத்தைப் பிரித்து நிறுத்தி வைத்தது போல், வாயில் இருந்தது. ஆசிரியர் அதைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அதே சமயம் அங்கி ருக்கும் பணித்தோழர்கள் ஆசிரியரை வாசல் வரை வந்து வரவேற்று, உள்ளே அழைத்துச்சென்று வர வேற்பறையில் அமரச் செய்தனர். அந்த அறையில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த படங்களில் உள்ள சமூகநீதி ஆளுமைகளைச் சுட்டிக்காட்டி கழகத் தலைவர் பேசிக்கொண்டிருந்தார். அந்த நினை வில்லத்துக்குப் (ஸ்மாரக்) பொறுப்பை ஏற்றுள்ள, நவி மும்பையின் இணை ஆணையர் சங்கரத்தனா கிலாரே வந்து, “தாமதத்திற்கு வருந்து கிறேன்” என்று கூறியபடியே ஆசிரியருக்கு வணக்கம் வைத்தார். பதிலுக்கு ஆசிரியரும் வணக்கம் வைத்தபடியே, “அதிலொன்றும் தவறு இல்லை. நாங்கள்தான் வழக்கப்படி முன்கூட்டியே வந்துவிட்டோம். உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. நவி மும்பையின் டெபுடி கமிசனராக ஒரு பெண் இருப்பதே, பெரியார், அம்பேத்கர் கொள்கைக்கு மிகப்பெரிய வெற்றி” என்று கூறியதும், ஆசிரியர் பற்றிய முதல் அறிமுகமே அவருக்குத் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
முதலில் கருத்தரங்கம், காட்சியகம் நடக்கும் பல்நோக்கு அரங்கைக் காட்டினார். அதன் அமைப்பு சிறப்பாக இருக்கிறது என்று ஆசிரியர் பாராட்டினார். தொடர்ந்து, நூலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆசிரியர் ஒரு குழந்தையைப் போல குதூகலத்துடன் உள்ளே நுழைந்தார். அங்கு, மேனாள் இணை ஆணையரும், தற்போதைய பவனின் ஆலோசகருமான சந்தியா அம்பாடே மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுமேதா பர்தே ஆகிய இருவரும் ஆசிரியரை இருகைகூப்பி வணக்கம் தெரிவித்து வரவேற்றனர்.
‘‘Annihilation of Caste” புத்தகம்!
ஆசிரியர் உற்சாகமாக உள்ளே நுழைந்ததும், அங்கி ருந்த ஒரு பெண் பணித் தோழர், டிஜிட்டல் நூலகத்தை அறிமுகம் செய்யும் பொருட்டு, கணினியை இயக்கி கழகத் தலைவருக்கு விளக்க முற்பட்டார். ஆசிரியர் சட்டென்று, அம்பேத்கர் நூல் தொகுதி – மராத்தி கட்டுரைகள் இடம்பெற்றுள்ள 20 ஆம் தொகுதி 56 ஆம் பக்கத்தைப் பார்க்க முடியுமா?’’ என்று கேட்டுவிட்டார். சுற்றி நின்றவர்களின் புருவங்கள் விசுக்கென்று மேலேறிவிட்டன. கீழே இறங்க சற்றுத் தாமதமாகிவிட்டது. ஆசிரியரின் வேகத்திற்கு அந்தக்கணினி ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறியது.
“என்னாச்சுப்பா?” பிரின்சை நோக்கி ஆசிரியர் கேள்வி எழுப்ப, அவரும் முயன்று பார்த்துவிட்டு, ‘‘இணைய வேகம் போதவில்லை. நாம் நூலகத்தை சுற்றிப்பார்த்துவிட்டு வந்துவிடலாம். அதற்குள் எடுத்து வைத்திருப்பார்கள்” என்று பதில் கூறினார். உடன் புத்தகப் பகுதியிலிருந்தே அப்பக்கத்தை எடுத்துக்காட்டி, கூகிள் லென்ஸ்மூலம் ஆங்கிலத்திலும் எடுத்துக்காட்டினார்.

அந்த நூலகத்தில், புத்தகங்கள் கைக்கெட்டும் உயரத்தில், வட்ட வடிவத்தில், கண்களைக் கவரும் வண்ணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்து புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டே வந்தார். சில புத்தகங்களைப் பற்றிய அரிய தகவல்களைப் பகிர்ந்து நூலகர்களையே வியக்க வைத்தார். சுற்றிப் பார்ப்பதற்கான ஒட்டுமொத்த நேரமும் நூலகத்திலேயே முடிந்துவிடுமோ என்ற அய்யம் தோழர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அவரிடம் புறப்படலாம் என்று சொல்வதற்கும் யாருக்கும் துணிவு எழவில்லை. அவ்வளவு ஆர்வத்துடனும். உற்சாகத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தார்.
கூடி நின்றவர்கள்
வாயடைத்துப் போயினர்!
வாயடைத்துப் போயினர்!
“ஆங்… இதுதான்” என்று கூறிவிட்டு, அருகில் இருந்த டெபுடி முனிசிபல் கமிசனரைப் பார்த்து, “Yesterday I spoke about this” என்று சுட்டிக்காட்டினார். 1929 செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாடு குறித்த செய்தி மராத்தியில், அம்பேத்கரால் எழுதப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டினார். அதேபோல், அடுத்த 3 மாதங்களில், நாசிக்கில் நடைபெற்ற சமாஜ் சமதா சங்கத்தின் மாநாட்டில் பெண்கள் உள்பட 5,000 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர். அண்ணல் அம்பேத்கர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, மாநாட்டில் உரையாற்றினார். அந்த அரிய நிகழ்ச்சி பற்றி தந்தை பெரியார் நடத்திய ‘ரிவோல்ட்’ பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதைத்தான் நான் நேற்று நடைபெற்ற, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – 2026 மாநாட்டின் “மராத்தி மொழி அமர்வில் பேசினேன்” என்று நினைவுபடுத்த, கூடி நின்றவர்கள் வாயடைத்துப் போயினர்.
அம்பேத்கரும், பெரியாரும்
பாடுபட்டது எதற்காக?
பாடுபட்டது எதற்காக?
ஒரு பெண் உணர்ச்சி வயப்பட்டு, சட்டென்று ஆசிரியரின் காலில் விழுந்துவிட்டார். ஆசிரியர் மின்னல் வேகத்தில் அவரை எழுந்திருக்கும்படி சைகை காட்டிவிட்டு, “We never accept this” என்று வேகமாகப் பதில் கூறிவிட்டு, ‘‘அம்பேத்கரும், பெரியாரும் பாடுபட்டது எதற்காக? பெண்கள் கல்வி கற்கவேண்டும். அவர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காகத்தானே. அப்படித்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். பெரியார், ‘‘பெண்களின் கையிலிருக்கும் கரண்டியை பிடுங்கிவிட்டு, பேனாவைக் கொடுங்கள்’’ என்றாரே, எதற்காக? ஆகவே, நீங்கள் இப்படிச் செய்யக்கூடாது. இங்கு வந்த பின்தான் ஒன்றை கவனித்தேன். இங்கிருக்கும் பொறுப்பாளர்களில் பெரும்பாலோனோர் பெண்கள். இதற்காகத்தான் இருபெரும் தலைவர்களும் பாடுபட்டனர். சுயமரியாதை மிக மிக அவசியம்” என்று உணர்ச்சிப்பூர்வமாக கழகத் தலைவர் பேசப் பேச பெண்கள், மறுபடியும் உணர்வுமயமாகி
விட்டனர்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட புத்தகங்கள் அளிப்பு!
நேரத்தின் அருமை கருதி, அடுத்தடுத்த அரங்குகளுக்குச் செல்லவேண்டும் என்று நினைவுபடுத்த வேண்டியிருந்தது. நூலகத்திற்குக் கொடுப்பதற்காக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட தந்தை பெரியார், அம்பேத்கர் புத்தகங்களைக் கழகத் தலைவர் நவி மும்பை இணை ஆணையர் அவர்களிடம் வழங்கினார்.
(தொடரும்)
அதன் பிறகு அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் படக்காட்சி அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருக்கும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து, அதன் பின்னணியை – வரலாற்றுச் சம்பவங்களை இணை ஆணையரிடமும், தோழர்களிடமும் விவரித்துக்கொண்டே வந்தார். ஓரிடத்தில் வெறும் மணிக்கட்டுடன் சேர்ந்த அய்ந்து விரல்கள் மட்டும் ஓர் எழுதுகோலை வைத்து எழுதுவது போல், ஓர் உலோகச் சிற்பம் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் ஆசிரியர் முகத்தில் ஒரு களிப்பு, மின்னல் வேகத்தில் வெட்டியபடி ஓடிவிட்டது. நாம் திகைத்து நின்று விட்டதால் அதை படம் பிடிக்க இயலவில்லை. இனி அது போல் ஒரு கணம் வரவே வராது என்ற ஏக்கமே ஏற்பட்டுவிட்டது. அந்த அளவிற்கு அந்த உலோகச் சிலை ஆசிரியரின் சிந்தையைக் கொள்ளை கொண்டுவிட்டது. ஆசிரியர் அந்த சிலை அருகில் தனியாக நின்று, ‘வாழ்க அம்பேத்கர்’ என்பது போல் வலது கையை இறுக மூடி உயர்த்திக் காட்டினார். அது படமாகப் பிடிக்கப்பட்டுவிட்டது.
ஆலோசனைகளை வழங்கினார்
தமிழர் தலைவர்!
தமிழர் தலைவர்!
எல்லாமே கண்களையும், கருத்தையும் கவர்ந்தாலும் மணிக்கட்டு உலோகச் சிலை போலவே இன்னொன்றும் ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவர்ந்தது. அது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பீடிகை என்று சொல்லப்படக்கூடியதாகும். அது மிகப்பெரிய அளவில் சட்டமிடப்பட்டு, அதில் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த நிலையத்திற்குள் முதலில் மராத்தி, பிறகு ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை மட்டுமே கடைப்பிடித்திருந்தார்கள். ஹிந்திக்கு அங்கு இடமே இல்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். படக்காட்சி அரங்கத்தை முழுமையாக சுற்றிப்பார்த்த பின்னர், அங்கே இடம் பெறவேண்டிய தந்தை பெரியாரும், அம்பேத்கரும் சேர்ந்து இருக்கும் மிக முக்கியமான படங்கள் விடுபட்டிருக்கின்றன. அதைச் சேர்க்க வேண்டும் என்று இணை ஆணையரிடம் வேண்டுகோள் விடுத்தார். அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். முறைப்படி அந்தப்படங்களை நாங்கள் அனுப்புகிறோம். கல்வி புலத்திலும், பட்டயப்படிப்புக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உரியவர்கள் மூலம் கலந்துபேசி இணைந்து செயல்படலாம் என்பன போன்ற முக்கியமான ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், அண்ணல் அம்பேத்கர் ேஹாலோகிராம் ஒளிக்காட்சியைக் கண்டார்.
அடுத்து தியான மண்டபத்திற்குச் செல்லலாம் என்று அழைத்துச் சென்றார்கள். கெடு வாய்ப்பாக மின் தூக்கி வேலை செய்யவில்லை. நவி மும்பையின் டெபுடி முனிசிபல் கமிசனர் சங்கரத்தனா கிலாரே உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல், கையறு நிலையில் இருந்தனர். ஏற்கெனவே ஆசிரியரின் வயது பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆசிரியரோ, “பரவாயில்லை, நான் படியேறுகிறேன்” என்று யாருடைய துணையுமில்லாமல் படி ஏறத் தொடங்கிவிட்டார். அனைவரும் பின் தொடர்ந்தனர்.
மேலே தியான மண்டபத்தின் முகடு ஓர் எழுதுகோலின் முனையின் (nib) வடிவத்தில் அமைந்துள்ளது என்று அதன் நிர்வாகிகள் குறிப்பிட்டு வியப்பைக் கூட்டினர். தியான அரங்கத்தை பார்வையிட்டுவிட்டு, கீழே இறங்கும் போது, “நான் வழக்கமாக படிகள் ஏறும் போது எத்தனை படிகள் என்று எண்ணிவிடுவேன். இங்கே 38 படிகள் இருக்கின்றன” என்றார். அனைவருக்குள்ளும் ‘அடடே…’ தருணமாகிவிட்டது அந்தத் தகவல். கீழே இறங்கும் போது மின் தூக்கி சரி செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர் அதில் சென்றுவிட, தோழர்கள் படிகளில் இறங்கும் போது மிகுந்த உற்சாகத்துடன், ‘‘ஒன்று, இரண்டு, மூன்று” என்று எண்ணிக்கொண்டே இறங்கினர். 38 படிகள் இறங்கியதும், அவர்களின் புருவங்களும் உயர்ந்தன. இத்தனை நாளில் இதை நான் கவனித்ததே இல்லை என்றார், அதன் ஆலோசகர்.
ஆசிரியரின் பண்பைக் கண்டு நெகிழ்ந்தனர்!
நிறைவாக முகப்பறையில் 10 அடி உயரத்திற்கும் மேலாக அம்பேத்கர் முகம் மட்டும் சுவற்றில் பதாகையாகச் சிறப்பாகப் பதிக்கப்பட்டிருந்தது. அங்கு நின்று ஆசிரியருடன் அந்நிலையத்தின் நிர்வாகிகள் அனைவரும் படம் எடுத்துக்கொண்டனர். காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஒதுங்கி நின்ற போது, ஆசிரியர் சைகை காட்டி அவர்களையும் அதில் கலந்துகொள்ளச் செய்தார். ஆசிரியரின் பண்பைக் கண்டு நெகிழ்ந்து அவர்களும் கலந்துகொண்டனர். மறுபடியும் வரவேற்பறையில் அமரவைத்து ஆசிரியரிடம், மிகுந்த எதிர்பார்ப்புடன் ‘‘பார்வையாளர் கருத்துப் பதிவேடு’’ தரப்பட்டது. ஆசிரியர் ஆவலுடன் வாங்கி எழுதத் தொடங்கினார்.
நவி மும்பையின் இணை ஆணையர் சங்கரத்தனா கிலாரே, குமணராசன் அவர்களைப் பார்த்து, “பார்த்ததில் உங்களுக்குப் பிடித்தது எது?” என்று கேட்டார். அவர், “மற்றவையும் சிறப்பாக இருந்தாலும், முதல் இடம் நூலகத்திற்குதான். காரணம் அதுதான் நமது கடந்த காலம் எப்படியிருந்தது; நிகழ்காலம் எப்படியிருக்கிறது; எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் கூறுகின்றன” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இணை ஆணையர், “இந்தக்காலத்து இளைஞர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை” என்று அவருக்குப் பதில் கூறிக்கொண்டு இருந்தார். அதற்குள் எழுதி முடித்துவிட்ட ஆசிரியர், பதிவேட்டை அவர்களிடம் கொடுத்தார். அதில் நூலகத்தின் பெருமைகளையும், அதைச் சிறப்பாகப் பராமரிப்பதையும் பாராட்டி எழுதிவிட்டு, “Human friendly reception” என்று எழுதியிருந்ததைக் கண்டு நிலையத்தின் நிர்வாகிகள் நெகிழ்ந்து போயினர். இந்தக் காலத்தில், மனிதர்களிடம் காணப்படாதது என்று அங்கலாய்த்துக் கொண்டனர். அந்த சிறப்பு தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி சிலாகித்துக்கொண்டனர்.
தொடர்ந்து ஆசிரியர், “மின் தூக்கி வேலை செய்யாதது நல்ல வாய்ப்பாகப் போய்விட்டது” என்று மறுபடியும் மின் தூக்கி விவகாரத்தைத் தொடங்கினார். இணை ஆணையர் உள்ளிட்டோர் மிகுந்த சங்கடத்துடன், மறக்க வேண்டியதை நினைவு படுத்துகிறாரே; என்ன சொல்லப்போகிறாரோ என்ற கவலையுடன் அவரைப் பார்த்தனர். அவரோ, “படிகளில் ஏறியதால் என்னுடைய இதயம் நன்றாக வேலை செய்கிறது என்று அறிவியல் பூர்வமாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து விட்டது” என்று வாய்விட்டுச் சிரித்தபடியே கூறியதும், மற்றவர்களும் வெடித்துச் சிரித்துவிட்டனர். இப்படியும் ஒரு தலைவர் இருப்பாரா? என்று அதன் நிர்வாகிகள் வியந்து போயினர். தங்களுக்கேற்பட்ட சங்கடத்தையும் அறிவியல் பூர்வமாக, ஆக்கபூர்வமான செய்தியாக்கிவிட்டாரே என்று வியந்து போயினர்.
மூன்று மணி நேரம்!
இறுதியில் அன்புடன் வற்புறுத்திச் சிற்றுண்டி கொடுத்து உபசரித்தனர். பிறகு வாயில் வரையிலும் வந்து, சில மணிநேரம் மட்டுமே ஓர் அறிவு மின்னல் தெறித்தது போன்ற உணர்வால் நெகிழ்ந்து, மகிழ்ந்து உண்மையாகவே ஆசிரியருக்கும், தோழர்களுக்கும் பிரியா விடை கொடுத்தனர். ஏறக்குறைய 3 மணி நேரம் அங்கே செலவிட்டிருந்தார் ஆசிரியர்.
அதற்குப்பிறகு மதிய உணவு எடுத்துக்கொண்டார். அங்கும் உணவு சாப்பிடும் கடையில் புரட்சிக்கவிஞர் பேசியதைக் கூறி, வயிறு வலிக்க சிரிக்க வைத்து, கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டார். பின்னர் நவி மும்பையிலிருந்து கடல் வழியாகக் கட்டப்பட்டிருந்த மிக நீண்ட பாலத்தின் வழியாக, தெற்கு மும்பையில் உள்ள, ”நாரிமன் முனை” கடற்கரைக்கு ஆசிரியரைத் தோழர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சென்றதும், “அய்யா இங்கே கொஞ்சம் நடைப்பயிற்சி செய்கிறீர்களா?” என்று கேட்டதும், “நான் தயார்” என்று உடனே கூறியபடியே ‘விறுவிறு’வென்று கால்களை வீசியபடி வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டார். அவரது வேகத்திற்கு உண்மையாகவே தோழர்களால் ஈடுகொடுக்க இயலவில்லை. நடைப்பயிற்சி செய்கிற அங்கிருக்கும் மக்கள் கருப்பு உடையணிந்தவர்கள் சூழ நடுவில் ஒருவர் நடந்து வருவதைக் கண்டு், அதை இருவர் படம் பிடிப்பதையும் வியப்புடன் வேடிக்கை பார்த்தபடியே கடந்து சென்றனர்.
உற்சாகத்துடன் அனைவருக்கும்
விடை கொடுத்தார்!
விடை கொடுத்தார்!
அங்கிருந்து புறப்பட்டு, இரவு 9.30 மணிக்குத் தங்கும் இடத்திற்கு திரும்பினார் ஆசிரியர். அப்போதும் மிகுந்த உற்சாகத்துடன் அனைவருக்கும் விடை கொடுத்தார். இடையில் துளியும் ஓய்வில்லை. 93 வயதில் ஏறக்குறைய ஒருநாளில் 12 மணி நேரம் இப்படிச் சுற்றிச் சுழன்று வருகிறாரே என்று அவரை நன்றாக அறிந்த தோழர்களே ஒவ்வொரு கணமும் புதிதுபுதிதாக வியந்த வண்ணம் திரும்பினர். அடுத்த நாள் (6.1.2026) காலை 11 மணிக்கு விமானத்தில் சென்னைக்குப் புறப்பட்டு பிற்பகல் மூன்று மணிக்கு இல்லம் திரும்பினார்.
