‘பெரியாருக்கு எதிராக அரசியல் செய்கிறேன்’ என்கிற பெயரில் சிலர் வெறுப்புப் பிரச்சாரத்தில் இறங்கி வரும் நிலையில், திராவிட வெறுப்பு என்பது வரலாற்றுத் துரோகம் எனப் பதிவிட்டுள்ளார் சமூக செயற்பாட்டாளர் பாபிரேம் அவரது பதிவிலிருந்து –
“இன்று தமிழ்நாடும், தமிழரும், தமிழ் மொழியும் இந்தியாவின் ஏனைய நிலப்பரப்பு, இனம், மொழி ஆகியவற்றைவிட, சிறப்பெய்தி காணப்படுவதற்கான ஒரே காரணம் திராவிடம்தான். இதை நான் சொல்ல வில்லை. பெரியாருக்கு எதிராக நிறுத்த முயலும் புரட்சி யாளர் அம்பேத்கர் அவர்களே அதைத்தான் சொல்கிறார்.
டாக்டர் அம்பேத்கர் எழுத்துகள் தொகுதி
14-இல் தீண்டாமையின் தோற்றுவாயாக இனவேறுபாடு எனும் கட்டுரையில், ‘நாகர்களும் திராவிடர்களும் இந்தியா முழுமைக்கும் பரவி இருந்தார்கள். தமிழ் அல்லது திராவிடம் என்பது இந்தியா முழுமைக்கும் பேசப்படுகிற மொழியாக இருந்தது. ஆரியர்களுடன், ‘நாகர்கள்” இணக்கமாக ஆரம்பித்து தங்களின் தாய்மொழியான தமிழை கைவிட்டு, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், திராவிடர்கள் அவ்வாறு இணங்கவில்லை. இதனாலேயே, ‘தென் இந்திய நாகர்கள் தங்களை ‘திராவிடர்கள் என்று கூறிக்கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர். அது மட்டுமன்றி, ‘வட இந்திய நாகர்கள் திராவிட மொழியை முழுவதுமாக கைவிட்ட காரணத்தால், திராவிட மொழி பேசும் ஒரே மக்கள் என்ற முறையில் தங்களை ‘திராவிடர்கள்’ என்று அவர்கள் அழைத்துக்கொள்வது மிக மிக அவசியமாயிற்று. தென் இந்தியர்கள் திராவிடர்கள் என என் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்’ என்று எழுதியிருக்கிறார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்தியா முழு மைக்கும் பரவி இருந்த திராவிடர்களை, நாகர்களை ஆரியர்கள் தங்கள் மொழிக்கலப்பினால் மாற்றி, மாற்றி தமிழ்நாடு என்னும் ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் அடைத்துவிட்டார்கள் என்பது தெளிவாகிறது.
இருந்தாலும், தமிழ் இன்றும் தன் இருப்பை உறுதி செய்துகொள்வதற்காக ஆரியத்தோடும், சமஸ்கிருதத் தோடும் போராடிக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம் திராவிடர் என்கிற உணர்வு மட்டும்தான். திராவிடர் என்கிற உணர்வு செத்துப்போகும்போது தமிழும் செத்துப்போகும்.
அந்தத் திராவிடர் என்கிற உணர்வை இத்தனை ஆண்டுக் காலம் விடாமல் இருக்கிப் பிடித்திருப்பவர்கள் திராவிட இயக்கத்தவர்கள் தான்” என்கிறது அவரது பதிவு.
‘முரசொலி’ 14.1.2026
