| வ |
ாழ்க்கையில் நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் – வாழ்நாளின் இறுதி வரை ஏராளம் உண்டு.
ஏனோ நம்மில் பலர் அவற்றைப் புறந்தள்ளி விட்டு எப்போதும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்திலேயோ அல்லது இன்ப நுகர்விலேயோ மட்டுமே இருக்க வேண்டும் என்று – ‘நியாயமில்லாத பேராசைக்கு’ தங்களை ஆட்படுத்திக் கொண்டு, பின்னர் சிறு துன்பத்தைக்கூட தாங்கொணா வண்ணம் தளர்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
‘பக்குவம் அடைந்த மனிதர்’ என்ற தகுதி, எப்போது ஒருவருக்குக் கிட்டும் தெரியுமா?
இரண்டு வகை நேர் எதிர்மறை அனுபவங்கள் அடுத்தடுத்து ஒருவருக்கு மாறி மாறி ஏற்படும்போது அவற்றை எதிர் கொள்ளும் வகையில் உரிய தெளிவு வேண்டும். ஒன்று – அளவுக்கு மீறிய கொண்டாட்டம். இரண்டு – ‘இனி இந்த உலகில் எதுவுமே நமக்கில்லை எல்லாம் போய் விட்டது’ என்று மனம் உடைந்து மூலையில் முக்காடு போட்டு முடங்கிக் கொள்ளத் தோன்றும் திண்டாட்டம்.
இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே தவிர்க்கப்பட வேண்டியவையாகும்!
வெற்றி வந்து நம்மை மகிழ்ச்சி அடையச் செய்யும்போது ‘தலை கால் தெரியாமல் ஆடுவது’ கூடாது. அதே போல, தோல்வி வந்து நம்மைத் துன்புறுத்தும்போது ‘ஒரே அடியாய்த் துவண்டு ஒதுங்குதல்’ அல்லது ‘பலவாறு தற்கொலை பற்றிக்கூட எண்ணும் ஒருவகை கோழைத்தன்மை’யான உணர்வுக்கு ஆட்படுதல் கூடாது – தவிர்க்கப்படல் வேண்டும்.
எப்படி இருட்டு சூழ்ந்தால் – அது ஓர் அச்சத்தை சிலருக்கு – குறிப்பாக குழந்தைப் பருவத்தினருக்குத் தருகிறதோ, அதுபோலத்தான் பக்குவமற்றத் தன்மைக்கான மனக் காட்சியுமாகும்.
‘இருட்டும் நிரந்தரமல்ல,
விடிவது அடுத்தக் கட்டம்’ என்று
நம்பிக்கையுடன் இருந்தாக வேண்டும்.
அதைத் தாண்டிடும் மனத் திண்மையும் துணை நிற்க வேண்டும்.
உடலை அவ்வப்போது குளியல் மூலம் தூய்மைப்படுத்தி, வெளுத்த உடைகளை அணிந்து வெளியே வீறு நடை போடுகிறோமே. அதுபோல உள்ளத்தையும் சகிப்புத்தன்மை எனும் நீரால் குளிப்பாட்டி, மனத்தை நிலைநிறுத்திட நாளும் நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொண்டாக வேண்டும்.
அப்போதுதான் மனித வாழ்க்கை மூலம் – சமூக வாழ்வில் சரித்திரம் படைக்க முடியும்.
தத்துவங்கள் – கசப்பு மருந்தல்ல; அனுபவ ஆசான்களாகும்.
அனுபவப் பாடத்தை ‘கசடு அற’ கற்கவும், அதன்பின் ‘கற்றபடி நிற்கவும் பழகினால்’ எதையும் தாங்கும் இதயம் நமக்கு வர முடியும்!
தந்தை பெரியார் அவர்கள் கூறும் எளிமையான கருத்தாக்க அறிவுரையைக் கேளுங்கள்:
‘‘வாழ்க, வாழ்க என்று என்னை வாழ்த்திக் கோஷம் போடும்போது, நான் மகிழ்ச்சி, அடைவதில்லை; சாதாரணமாகவே எடுத்துக் கொள்வேன், ஏன் தெரியுமா?
என்னை வாழ்த்தி உரைப்பதும், என்னை வையும் படியாக உரைப்பதும் இரண்டுமே – தாக்கக் கூடியதாகும். இழிவுபடுத்திடும் பேர்வழிகள் – ‘ஒழிக ஒழிக’ என்று கோஷம் போடுவோர் எண்ணிக்கை வாழ்த்துவோரைவிட அதிகம். எனவே ‘வாழ்க’ என்பதற்கு மகிழ்ச்சி அடைந்தால், ‘ஒழிக’ என்பதற்காக நான் எவ்வளவு வருந்தியாக வேண்டும்?
எனவேதான், சம நிலையில் இரண்டையும் ஒன்றாகவே கருதி, என் பணியை நான் தொடர்ந்து செய்து கடமையாற்றுவதில் கண்ணும் கருத்துமாய் கவனச் சிதறல் இன்றி வாழ முடிகிறது’’ என்றார்.
இந்தப் பாடம் எளியதல்லவா? இதனை நம்மில் எத்தனை பேர் கற்று, ஒழுகுகிறார்கள்?
உங்கள் மனதிற்குரிய சரியான விடையைக் காணுங்கள்– அது சிறப்பான வெற்றியல்லவா?
