சென்னையில் ‘துக்ளக்’ ஏட்டின் ஆண்டு விழா கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றிருக்கிறது. சில ஆண்டுகளாகவே அவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்குத் தேர்வு செய்துள்ள இடம் நாரதகான சபாவாகும்.
அப்படி நடத்தினாலும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக நடைபெறுவதில்லை.
அழைப்பிதழ் கொடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு. கேள்விக்குப் பதில் சொல்லுவது என்ற ஒரு முறையை வைத்திருந்தனர்.
ஏதோ ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் போல் காட்டிக் கொள்வதற்கே அப்படி ஓர் ஏற்பாடு! உண்மை என்னவென்றால், கேள்விகளை முன் கூட்டியே வாசகர்கள் என்ற பெயரில் சிலரிடம் பெற்றுக் கொண்டு, அதிலும் வடிகட்டி, சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுவதை வழமையாக வைத்துள்ளனர் இந்த ‘வீராதி வீரர்கள்!’
இவ்வாண்டு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.
யாரை சிறப்பு விருந்தினர்களாகத் தேர்வு செய்வார்கள் என்றால் பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாகவும், திராவிடத்தை இழித்துப் பேசுபவர்களாகவும் உள்ளவர்களாகப் பார்த்துதான் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள்.
அந்த வகையில் இவ்வாண்டு இவர்களுக்குக் கிடைத்தவர் ஒன்றிய பிஜேபி கல்விஅமைச்சர் தர்மேந்திரபிரதான் ஆவார்.
அவரும் அவர்கள் எதிர்பார்த்த அல்லது ஏற்கெனவே தயாரித்துக் கொடுக்கப்பட்ட ‘சரக்குகளை’ ஒப்புவித்திருக்கிறார்.
‘‘தமிழ்மொழி பாரம்பரியமும், தொன்மையும் மிக்க மொழி, பிரதமர் மோடி தமிழை உலக அரங்கில் எடுத்துச் சென்று வருகிறார். உலக அரங்குகளில் திருக்குறளின் பெருமைகளை கொண்டு செல்கிறார். குறளில் ஆட்சி நிர்வாகம் அறநெறி, மனிதாபிமானம் என அனைத்து விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன. பண்டைய தமிழகம் ஆன்மிக பூமியாக திகழ்ந்தது. சோழர் ஆட்சிக் காலத்தில் ஆன்மிகம் தழைத்தோங்கியது. ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. தமிழகத்தையும், ஸநாதனத்தையும் பிரிக்க முடியாது; இரண்டும் பின்னிப் பிணைந்தவை. ஆனால் சமீப காலமாக ஸநாதனம் மீதான மாண்பு குறைந்து வருகிறது. ஸநாதனமும் கேலியும் விமர்சனம் செய்யப்படுகிறது’ என்று ‘துக்ளக்’ குழுமம் எதிர்பார்த்தபடியும் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி வகையறாக்களின் குருதியில் குடிகொண்டிருக்கும் கொள்கைப்படியும் பேசித் தள்ளி இருக்கிறார்.
தமிழைப் பற்றி இப்பொழுதெல்லாம் பிரதமர் முதல் பிஜேபி ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் பெருமையாகப் பேசத் தலைப்பட்டுள்ளனர். காரணம் தெரிந்ததே! தமிழ்நாட்டில் இவர்கள் கால் பதிக்க முடியாத நிலையிலும், இதுவரை தமிழைக் குறித்து அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடும், தமிழ்நாட்டு மக்களின் மத்தியில் பெரும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் ஏற்படுத்தி விட்டன.
அரசியல் கணக்கில் இதுவரை அவர்கள் மேற்கொண்ட தமிழ்மீதான வெறுப்பு என்ற போக்கில் மாற்றம் அடைந்ததுபோல் போலி நாடகம் நடத்தத் துவங்கியுள்ளனர்.
ஒன்றிய பிஜேபி அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு 2014 முதல் 2025 வரை (11 ஆண்டுகள்) ஒதுக்கிய தொகை ரூ.147 கோடி! ஆனால் ‘செத்த மொழி’ சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையோ ரூ.2532 கோடிக்கு மேலாகும் – என்பதிலிருந்தே தமிழ்மொழிமீது ஒன்றிய பிஜேபி அரசுக்கு இருந்து வரும் அக்கறை எத்தகையது என்பது எளிதில் விளங்கும்.
உலகளவில் தமிழ் மொழியைப் பேசுவோர் எண்ணிக்கை 8.85 கோடி; தமிழ்நாட்டில் மட்டும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு பேசுவோரின் எண்ணிக்கை 7 கோடி பேர் (89%) அதே நேரத்தில் இந்தியா முழுமைக்கும் சமஸ்கிருதம் பேசுவோர் 24,821; விழுக்காடு கணக்கில் 0.002 மட்டுமே!
ஏனிந்த மாற்றாந்தாய் மனப்பான்மை? சமஸ்கிருதம் என்பது பார்ப்பனர்களின் தாய்மொழி, ஆர்.எஸ்.எஸின் குருநாதர் எம்.எஸ்.கோல்வால்கரால் எழுதப்பட்ட ‘ஞானகங்கை’ நூலில் (Bunch of Thoughts) இந்தியாவுக்குத் தாய்மொழி சமஸ்கிருதம் என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் மனுஸ்மிருதியும் இருக்க வேண்டும் என்றும் கூறியிருப்பதை மனதிற் கொண்டு பார்த்தால் இந்தப் பாரபட்சத்தின் வேர் எங்கே தொடங்குகிறது என்பது விளங்காமல் போகாது.
அடுத்து ஆன்மிகம், ஸநாதனம் பற்றியும் பேசி இருக்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர், சோழ அரசர்களைப் பற்றியும் தூக்கிப் பேசி இருக்கிறார். இவற்றிற்கும் பார்ப்பனர்கள் கண்ணோட்டத்தில் பலமான காரணங்கள் உண்டு.
ராஜராஜசோழன்தான் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினான். கோயிலுக்குள் பார்ப்பன அர்ச்சகர்களையும், சமஸ்கிருதத்தையும் கொண்டு வந்ததும் அவனே! தேவதாசி முறையை அறிமுகப்படுத்தியவனும் அவனே! 400 தேவதாசிகளை அமர்த்தினான் என்றால் அவனை நன்றாகவே தெரிந்து கொள்ளலாமே!
இது பத்தாம் நூற்றாண்டில் (கி.பி.985–1014) நடைபெற்றது. சோழ பேரரசு காலக் கட்டத்தில்தான் 9–13ஆம் நூற்றாண்டில் பெரும் கோயில்களில் சோழ அரசர்கள் காலத்தில் பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக ஆக்கப்பட்டதும், சமஸ்கிருதம் அர்ச்சனை மொழியாகப் புகுத்தப்பட்டதும் நடந்தது.
இதே சோழ அரசர்கள் காலத்தில்தான் நான்கு வேதம் படித்தவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) சதுர்வேதி மங்கலம் என்றும் மூன்று வேதங்களைப் படித்த பார்ப்பனர்களுக்கு திரிவேதி மங்கலங்கள் என்றும் தானமாக வழங்கப்பட்டன. இவை வரி விலக்கு அளிக்கப்பட்ட பகுதிகளாகும். மங்கலம், மங்கலம் என்று எந்த ஊரின் பெயர்கள் இருந்தாலும் (எடுத்துக்காட்டு: நீடாமங்கலம், மாதிரி மங்கலம், கதிராமங்கலம், சாலியமங்கலம்.. இத்தியாதி இத்தியாதி) இவை எல்லாம் பார்ப்பனர்களுக்கு சோழ அரசர்களால் தானமாகக் கொடுக்கப்பட்டவைகளே! ெதன்னாற்காடு மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்திலும், திருபுவனத்திலும் (புதுச்சேரியருகே) திருவாவடுதுறையிலும், சோழ அரசர்களால் நடத்தப்பட்ட கல்விக் கூடங்களில் சொல்லிக் கொடுக்கப்பட்டவை எல்லாம் பார்ப்பனர்களின் மீமாம்ச வேதாந்த தத்துவங்கள், மனுதர்ம சாஸ்திரம், சாரக சமிதை அஷ்டாங்க இருதய சமிதை, முதலிய பார்ப்பனர்களின் சமஸ்கிருத மொழியில் உள்ளவைதான் பாடங்களாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டன. சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களும் பார்ப்பனர்கள் – படித்த மாணவர்களும் பார்ப்பனர்களே!
சோழ அரசர்கள் காலத்தில் ஆன்மிகம் செழித்தோங்கியது என்றும், கோயில்கள் கட்டப்பட்டன என்றும் ‘பெருமையாக’ ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் பேசியதன் இரகசியம் இவைதான்.
ஸநாதனம் குறித்து தமிழ்நாட்டில் கேலியாக பேசப்படுகிறது என்று மெத்த வருத்தப்பட்டுள்ளார் ஒன்றிய கல்வி அமைச்சர்.
ஸநாதனம் என்றால் வருணாசிரமம் என்று காஞ்சிபுரம் மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம்) கூறிய பிறகு – திராவிடமண்ணில் – அதுவும் தந்தை பெரியார் மண்ணில் எதிர்க்கப்படுவதில் உள்ள நியாயமும், மானுட சமத்துவமும் எத்தகையது என்பது விளங்காமல் போகாது.
திருவள்ளுவரைப் பற்றியும் பிரமாதமாகப் பேசியுள்ளார் ஒன்றிய கல்வி அமைச்சர். பிஜேபியின் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தருண்விஜய் திருவள்ளுவர் சிலையை கங்கை நதிக்கரையில் நிறுவிட முயற்சி செய்தாரே – அந்த சிலையின் இன்றைய நிலை என்ன? அரித்வாரின் “Dam Kothi Guest House” என்ற இடத்தில் பராமரிப்பின்றி வீசப்பட்ட நிலையில் தானே கிடக்கிறது.
‘துக்ளக்’ ஆண்டு விழா என்பது பார்ப்பனீயத்தைப் பரப்புவதற்கே! ‘துக்ளக்’ வாங்கும் பார்ப்பனரால்லாதார்கள் புரிந்து கொள்வார்களாக!
