
- புலவர்
- முத்து.வாவாசி எம்.ஏ.,
- புராணக் கதைகளில் சிக்காத பொங்கல்
- தமிழர்கள் தனித் தன்மையானவர்கள் என்பதைக் கூறும் தந்தை பெரியார்
- சிலப்பதிகாரம் காட்டும் தமிழனின் தனித்தன்மை!
- சோதிடம் பொய் என்ற இளங்கோவடிகள்
- சிலப்பதிகாரத்தில் மற்றொரு நிகழ்ச்சி
- பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறும் தமிழன் வீரம்
- திராவிட நாயகரின் தனித் தன்மைமிக்க வீரம்
- முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய தமிழனின் தனித்தன்மை
- தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் தாங்கிப்பிடிக்கும் தமிழனின் தனித்தன்மை
- விழிப்புடன் செயல்படுங்கள்!
புலவர்
முத்து.வாவாசி எம்.ஏ.,
“மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே’’
-என்று மணிமேகலை இலக்கியம் சொல்லும்.
உலக உயிர்களுக்கெல்லாம் உயிர் வளர்க்கும் உணவுப் பொருள்களை ஓய்வு உறக்கமின்றி, வெயில், மழை, பனி, குளிர் கருதாது, கழனியில் பயிர் வளர்த்து விளையச்செய்பவர்கள் உழவர்கள்!
விளைந்த பயிர்களை அறுவடை செய்து – உழவுத்தொழிலுக்கு உதவிய தோழர்களுக்கெல்லாம் பகிர்ந்து வழங்கியபின் நெல் மணிகளை வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள் உழவர்கள்!
அந்த நெல் மணிகளை உரலில் இட்டுக்குத்தி, வீட்டுவாசலில் அடுப்புக்கட்டிகள் வைத்து, அதில் புதுப்பானையை ஏற்றி, அதன் கழுத்தில், இஞ்சிக் கொத்துகளையும், மஞ்சள் கொத்துகளையும் கட்டி, புத்தரிசியும், கரும்பு தந்த வெல்லமும், பசும் பாலும் பெய்து, பொங்கி வரும் வேளையில், தாய்-தந்தையர், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் சூழநின்று ‘பொங்கலோ பொங்கல்’ என முழங்கி கதிரவனுக்கும், வான்மழைக்கும் நன்றிகூறும் முகத்தான் படைத்து உண்டுமகிழ்வதில் பெருமை காண்பவர்கள் உழவர்கள்!
“பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க’’
-என்பது நாலடியார்.
“பகடு நடந்தகூழ்’’ என்றால் மாடுகள் நடந்து உழுததனால் விளைந்த உணவு என்பது அதன் பொருள்.
அந்த உணவைப் பலரோடும் பகிர்ந்து உண்பதைத்தான், பொங்கல் திருநாளாக – உழவர் திருநாளாக ஆண்டுதோறும் தை முதல் நாளில் கொண்டாடி மகிழ்கிறார்கள் உழவர்கள்!
பல்லாயிரம் ஆண்டுளாகத் தமிழ்ச் சமுதாய மக்கள் கொண்டாடி மகிழும் இந்தப் பொங்கல் திருநாள் தமிழரின் பண்பாட்டுத் திருநாள் என்றே – தமிழர் திருநாள் என்றே போற்றப்படுகிறது.
புராணக் கதைகளில் சிக்காத பொங்கல்
ஓர் ஆண்டில் பன்னிரெண்டு மாதங்களிலும் பல்வேறு திருநாள்கள் கொண்டாடப்பட்டாலும், அவற்றிற்கெல்லாம் அறிவுக்குப் பொருந்தாத புராணங்களோடு இணைத்துப் பொய்யான கதைகள் சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்தப் பொங்கல் திருநாள் ஒன்றுக்குத்தான் தமிழ்நாட்டில் புராணக் கதைகள் சொல்லப்படுவதில்லை. “சங்கராந்தி’’ எனச் சிலர் புராணக் கதையைப் பொங்கலுக்குள் திணிக்கப் பார்த்தாலும், தமிழர்கள் அதை ஏற்பதில்லை.
தமிழர்கள், ஏனைய இந்திய மக்களோடு வேறுபட்டவர்கள்; தமிழர்கள் தனித்தன்மையானவர்கள்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’
– உலகில் பிறக்கும் எல்லோரும் வேறுபாடில்லாமல் ஒரே இயல்பைக் கொண்டவர்கள்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்’’
– உலகில் எந்த ஊரும் நம்மைப் போன்ற மாந்தர்கள் வாழும் ஊர்கள் தான். எல்லா மாந்தரும் நம் உறவினர்கள் தான் என்னும் உயர்ந்த-பரந்த எண்ணம் கொண்டவர்கள் தமிழர்கள்!
“தீதும் நன்றும் பிறர்தரவாரா’’
– நமக்கு நன்மை வருவதும் நம்மால்தான்! நமக்குத் தீமையும் நன்மையும் வந்தாலும் அதற்கும் நாம்தான் காரணம்! என்பதைக்கூறி நன்மை வருவதற்கும் தீமைகள் வராமல் தடுப்பதற்கும் உரிய முறைகளில் அனைவரும் ஒழுக்கமுடன் வாழவேண்டும் என்று உரைத்தவர்கள் தமிழர்கள்!
– இத்தகைய உணர்வுகளை உலகில் வேறு எந்தவொரு சமுதாயமும் கொண்டிடவில்லை. அதனால்தான், தமிழர்கள் தனித் தன்மையானவர்கள் என்று சொல்லப்படுகின்றனர்.
தமிழர்கள் தனித் தன்மையானவர்கள் என்பதைக் கூறும் தந்தை பெரியார்
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களும் தமிழர்களின் தனித் தன்மையை – பெருமையை அழகாக எடுத்துரைக்கிறார்.
“ஆரிய எதிர்ப்புணர்ச்சியும் அவர்களின் கலாச்சாரப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வும் இந்தியாவிலேயே “தமிழன்“ என்கிறவனுக்குத்தான் – தமிழ்நாட்டில்தான் இருந்திருக்கிறது. நம்முடைய கலை, சிற்பம் என்பது நாம் எவ்வளவு நாகரிகம், பண்பாடு ஆகியவைகளைப் பெற்று அந்தக் காலத்திலேயே நாம் எப்படி உயர்ந்திருக்கிறோம் என்பதைக் காட்டும். இந்தியாவின் மற்ற எந்தப் பகுதியிலும் இப்படிப்பட்ட உயர்ந்த அறிவும், சக்தியும் அந்தக் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை’’ – என்கிறார்.
மேலும், “தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் முன்னேறு வதற்கு இயற்கையான தடை எதுவும் இல்லை. தமிழர்கள் வாழும் நாடு எல்லா வளங்களையும் கொண்ட நாடாகும். தமிழர்களின் மொழி, தமிழர் அல்லாதவர்களுடைய மொழியைவிடச் சிறந்த மொழியாகும். தமிழர்களின் இயற்கை அறிவுத் திறன் தமிழர் அல்லாத மற்ற மக்கள் எல்லோரையும்விட வளர்ச்சிக்கு ஏற்ற நல்ல அறிவுத் திறன் ஆகும்’’ – என்றும்;
“தமிழர்கள் மற்ற இந்திய மக்களைவிடச் சிறந்தவர்கள்; கல்வியிலும், நாகரிகத்திலும், இலக்கியத்திலும், மொழியிலும் சிறந்தவர்கள் என்பதை நான் அறிவேன்’’ – என்றும் தமிழர்களின் தனிப் பெரும் பண்புகளைத் தொகுத்துக்கூறிப் போற்றுகிறார் தந்தை பெரியார்.
சிலப்பதிகாரம் காட்டும் தமிழனின் தனித்தன்மை!
“தமிழனின் தனித் தன்மைக்கு நம் சிலப்பதிகாரத்தில் பல செய்திகள் கூறப்படுகின்றன. கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் சென்று விடுகிறான். வேதனையில் மூழ்கிய கண்ணகியைப் பார்த்து தேவந்தி என்னும் பார்ப்பன மாது – அவளும் கணவனைப் பிரிந்தவள் – கண்ணகிக்கு ஆறுதல் கூறுவதுபோல், “கண்ணகி, கவலைப்படாதே என்னைவிட்டுப் பிரிந்து சென்ற வேதியன் என் கணவனும் இன்னும் வரவில்லை. காவிரி ஆறு கடலோடு சேருமிடத்திற்கு அருகே சோமகுண்டம், சூரியகுண்டம் எனும் இரண்டு பொய்கைகள் உள்ளன. அந்தப்பொய்கைகளில் மூழ்கி எழுந்து அருகில் உள்ள காமவேள் – மன்மதன் கோயில் சென்று வணங்கினால், பிரிந்துபோன கணவன் திரும்பி வருவான்; எனவே வா, நாம் இருவரும் சென்று பொய்கைகளில் மூழ்கி காமவேள் கோயிலில் வழிபடுவோம் வா” – என்று அழைத்தாள்.
அதைக்கேட்ட கண்ணகி அவ்வாறு சென்று, குளத்தில் மூழ்கி, கடவுளிடம் சென்று வேண்டுவது எங்களுக்குப் பெருமையல்ல; நாங்கள் அப்படிச் செய்யமாட்டோம் என்று, அக்காலத்தில் தமிழ்ச்சமுதாயம், குறிப்பாகப் பெண்கள் சமுதாயம் கடைப்பிடித்த அறிவார்ந்த தமிழ்நெறியை – “அது பீடன்று“ – பெருமையல்ல; என ஒரே சொல்லில்கூறி தமிழ்ச்சமுதாயத்தின் தனித்தன்மையை கண்ணகி வாயிலாக உணர்த்துகிறார் இளங்கோவடிகள்.
இதனை, புகார்க்காண்டம் – கனாத்திறம் உரைத்த கதையில் 57-64 வரிகளில்:
“கடலொடு காவிரிசென்று அலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தலம் கானல், தடம்உள
சோமகுண்டம் சூரியகுண்டம் துறை மூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம்இன்புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியிலும் போய்ப்பிறப்பர்
யாம் ஒருநாள் ஆடுதும் என்ற அணியிழைக்கு
பீடன்று’’ – என்றாள் கண்ணகி.
சோதிடம் பொய் என்ற இளங்கோவடிகள்
இதேபோலத்தான், சோழ மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அரசவைக்கு வந்த சோதிடன் ஒருவன், சேரனின் மூத்த மகன் இளவரசன் செங்குட்டுவனையும், இளையவன் இளங்கோவையும் நேரில் பார்த்து, “இள வரசர்கள் இருவரில் மூத்தவன் தந்தைக்குப் பின் நாட்டின் அரசனாக மூடிசூட வாய்ப்பில்லை; இளையவன்தான் முடிசூடுவான்’’ – என்றுகூற அதுகேட்ட இளையவன் இளங்கோ, “சோதிடன் சொல் பொய் என்பதை நிரூபிப்பேன்’’ எனக்கூறி – உடனடியாக இளவரசுப் பட்டம் துறந்து துறவியாகி, குணவாயில் கோட்டத்திலே சென்று தங்கினான் – என, சோதிடத்தைப் பொய் எனப் புறந்தள்ளிய அன்றைய தமிழ்ச்சமுதாயத்தின் தனித்தன்மையை நிலை நாட்டியுள்ளார் – இளங்கோவடிகள்.
இதனை, சிலப்பதிகாரம் நூலின் பதிகம்;
“குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோவடிகள்’’ –என்கிறது
சிலப்பதிகாரத்தில் மற்றொரு நிகழ்ச்சி
சேரன் செங்குட்டுவன் அரசவைக்கு வந்த துறவியர், அரசனிடம் வட ஆரிய மன்னர்கள் வேறு சில மன்னர்களோடு கூடி, விருந்துண்ட நேரத்தில் தென் தமிழ்வேந்தர்களின் வீரத்தை இழிவுபடுத்திப் பேசினர் எனக்கூறியதைக் கேட்டதும், “சினம் கொண்டு சீறிய சேரன்செங்குட்டுவன் தமிழன் வீரத்தை இழிவுபடுத்திய வட ஆரிய மன்னர்கள் கனக-விசயரின் மீது படையெடுத்துச் சென்று, வென்று இமயத்தில் கண்ணகிச் சிலைக்கான கல்லெடுத்து அவர்கள் தலையில் ஏற்றி வைத்து வஞ்சிமாநகர் மீண்டு சிலை நாட்டினான்“ என்று கூறுகிறார் இளங்கோவடிகள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறும் தமிழன் வீரம்

பேரறிஞர் அண்ணா அவர்கள், அந்த செங்குட்டுவன் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, சந்திரகுப்தன் காலத்திலும் – அசோகர் காலத்திலும் இல்லை; கனிஷ்கர் காலத்திலும் இல்லை; புலிகேசி காலத்திலும் இல்லை; அவுரங்கசீப் கூட விந்திய மலைக்கு இப்பால் வரமுடியவில்லை! இவர்கள் ஆண்டதெல்லாம் விந்திய மலைக்கு அப்பால்தான் என்று தமிழர்கள் எக்காலத்திலும் வீரத்தில் சிறந்தவர்களாக விளங்கியுள்ளார்கள் என்றும், தமிழர்களை எவரும் வென்றதில்லை போரில் என்றும், கூறியுள்ளார்கள்
திராவிட நாயகரின் தனித் தன்மைமிக்க வீரம்
இன்றைய நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் – திராவிட நாயகர் அவர்கள், தமிழனின் வீரத்தை அந்தப் போர்க்குணத்தை இயல்பாகக் கொண்டுள்ளவர்.
இன்றைய ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிர்வாக ரீதியாக பல பிரச்சினைகளைத் தந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்குத் திட்டங்களை அனுமதிப்பது இல்லை. வழங்க வேண்டிய நிதிகளையும் வழங்குவது இல்லை. நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கைப்படி மும்மொழித் திட்டத்தை ஏற்காவிடில்; தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2300 கோடியைத் தரமுடியாது எனக்கூறியதைக் கேட்டவுடன், பொங்கி எழுந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சீற்றம் கண்டு, அந்த அமைச்சர் உடனடியாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன், 100 முறை வேண்டுமானாலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் எனக் கெஞ்சியதும், தமிழ் மண்ணின் வீரம், தமிழனின் தனித்தன்மை என்று அங்கே அப்பொழுதே நிலைநாட்டப்பட்டதை நாடே கண்டு வியந்தது.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் – திராவிட நாயகர் அவர்கள், தர்மேந்திர பிரதான் தன்னை ஒரு “மன்னர்” போலக் கருதிக்கொண்டு அகங்காரத்துடன் பேசுவதாகவும், அவர் தனது நாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்கள்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குச் சேர வேண்டிய ‘சமக்ர சிக்சா (SSA) நிதி மற்றும் கல்வி உதவித்தொகைகளை, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக நிறுத்தி வைப்பது “பிளாக்மெயில்” (Blackmail) செய்யும் செயல் எனச் சாடினார்கள்.
மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைச் சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
‘‘2,000 கோடி அல்ல, 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத் தாலும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் அபாய கரமான தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்காது.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை அழித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியை 1000 ஆண்டுகளுக்குப் பின்தங்கிவிடச் செய்யும் கொடிய செயலை நான் செய்யமாட்டேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்“ எனச் சூளுரைத்து தமிழ்நாட்டின் மானத்தைக் காத்து வருபவர் – நம் முதலமைச்சர். தமிழனின் தனித் தன்மையைத் தொடர்ந்து நிலைநாட்டி வருபவர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு’’
– என்று நாமக்கல்லார் பாடியதும் தமிழனின் இத்தகைய தனித்தன்மையை எண்ணித்தானே!
எனவே, இந்தப் பொங்கல் திருநாளை, தமிழனின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் பண்பாட்டுத் திருநாள் என்று கூறிக் கொண்டாடுவது முறைதானே.
முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய தமிழனின் தனித்தன்மை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களும், இந்தப் பொங்கல் திருநாளை தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள் எனப் பறைசாற்றிச் சட்டம் இயற்றியதும். தமிழனின் தனித் தன்மையை அவனிக்கு உரைத்திடத் தானே!
அறிவுக்கு ஒவ்வாத – ஆடவன் நாரதன் பெண்ணாகி கண்ண பிரானோடு 60 ஆண்டுகள் கூடி, பெற்றெடுத்த பிரபவ, விபவ, சுக்கில முதலாக, அட்சய ஈறாக 60 பிள்ளை களின் பெயர்கள்தான் 60 தமிழ் வருடங்களின் பெயர்கள் எனக் கதைகட்டி; ஏமாந்த தமிழர்களை நம்ப வைத்தனர். இந்த 60 பெயர்களில் ஒன்றாவது தமிழ்ப் பெயர் உண்டா?
தந்தை பெரியார் அவர்களின், முதன்மைச் சீடரல்லவா முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அதனால்தான் அந்த 60 ஆண்டுகளின் பெயர்களைக் குப்பைகளில் வீசுங்கள்! “சித்திரையல்ல நமக்குப் புத்தாண்டு, தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு“ எனச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தினார்கள்.
தமிழ் இன உணர்வில்லாதவர்கள் – தமிழ் இன-மானம் அறியாதவர்கள் அந்தச் சட்டத்தைப் புறக்கணித்தாலும். இன-மான உணர்வு கொண்ட தமிழர்கள் இன்றும் தைத் திங்கள் முதல்நாளைத்தான் தமிழ்ப்புத்தாண்டின் தலைநாள் எனக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் தாங்கிப்பிடிக்கும் தமிழனின் தனித்தன்மை
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைப் பாரெங்கும் பரப்புவதையே தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டு, இந்த 93 வயதிலும் 39 வயது இளைஞரைப்போல் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிலைநாட்டிட வேண்டும் எனும் உறுதியோடு தமிழ்நாடு முழுவதிலும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு, தமிழ் இனத்தின் தன்மானச் சிந்தனைகளை நினைவுபடுத்தி – தமிழர்களை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தி வருகிறார்கள்.
“அய்யா, நீங்கள் நல்லாயிருக்க வேண்டும்“ என்று கூறியவுடன், “கட்டைவிரலை உயர்த்திக்காட்டி, நான் நல்லாயிருப்பேன்! நான் நல்லாயிருப்பேன்! 2026 ஆம் ஆண்டிலும் நம்முடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து, உங்களுடன் நானும் இருப்பேன்’’ – என்று அண்மைச்சில நாள்களுக்குமுன் கூறியது இன்னும் என் செவியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
இப்படி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமி ழறிஞர் கலைஞர், தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் என தமிழ்நாட்டின் தன்மானத்தை- தனித்தன்மையை நிலை நாட்ட ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு தலைவராகத் தோன்றி நமக்காக ஓயாமல் உழைத்து வருகிறார்கள். நமக்கெல்லாம் உணர்வூட்டி வருகிறார்கள்.
மானமுள்ள தமிழர்களே, சிறிது கண்ணயர்ந்தாலும் தமிழனை –தமிழ்நாட்டை விழுங்கப் பார்க்கிறார்கள் எதிரிகள்! தமிழ்நாடு பெற்றுள்ள பெருமைகளை அழிக்கப் பார்க்கிறார்கள்!
தமிழ் மொழியை அழிக்க;
வகுப்புவாரி இடஒதுக்கீடுகளை அழிக்க;
அறநிலையத்துறையை விழுங்க;
மொத்தத்தில் தமிழ்நாட்டை ஏப்பம்விட;
விழிப்புடன் செயல்படுங்கள்!
ED அமலாக்கத்துறை – வருமானவரித் துறை – CBI என ஒன்றிய அரசின் அமைப்புகளையெல்லாம் ஏவிப் பார்க்கிறார்கள். இந்தியத் திருநாட்டின் ஜனநாயகப் பெருமையைச் சீர்குலைத்திட SIR என்னும் மந்திரக் கோலையும் காட்டி ஆட்டம் போடுகிறார்கள். இன்று திரைப்படங்களுக்கான தணிக்கைத் துறையையும் கையில் வைத்துக் கொண்டு, தமிழ்ச்சமுதாயத்தை மிரட்டிப் பணிய வைத்திட இப்படியெல்லாம் அதிகாரத்தைத் தவறான வழியில் கையாளுகிறார்கள் என்பது புரிகிறது அல்லவா? விழிப்புடன் செயல்படுங்கள்!
தமிழனின் தனித் தன்மையை மீண்டும் நிலைநாட்டிட வேண்டிய தருணம் தற்போது நமக்கு வந்துள்ளது.
“கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை! எனவே, தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை எவரும் எதிர் நின்றே!”
– எனப் பாவலர் பெருஞ்சித்திரனார் கூறிய கவிதையை நெஞ்சில் தாங்கி, பெற்ற வெற்றிகளையெல்லாம் நினைவில் நிறுத்தி, முந்தைய தேர்தல் வெற்றிகளைப்போல், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரிகளை முறியடித்து வெற்றி வாகைசூடி – நமது திராவிட நாயகர் அவர்களுக்கு மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முடிசூட்டிடுவோம்.
உறுதியுடன் ஒன்றுபட்டு வெற்றிக் கனிகளைப் படைத்து தமிழனின் தனித்தன்மையைத் தரணிக்கு மீண்டும் ஒருமுறை முழங்கிடுவோம்!
வெல்லட்டும் தமிழினம்! – வெற்றி
முழங்கட்டும் தரணி!
