
தமிழ்நாட்டுப் பெண்கள் கூடி, ‘பெரியார்’ என்று பட்டம் கொடுத்ததால் தான் அவரைப் பெரியார் என்கிறோமா? இல்லை. பெரியாராய் நடந்து கொண்டார். பெரியாராய் சிந்தித்தார். பெரியாராய் செயல்பட்டார். தனது மிக வாழ்க்கையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெரியாராய் மிளிர்ந்தார். அவர் வாழ்ந்த காலக்கட்டத்து பெரிய மனிதர்கள் அனைவராலும் பெரியாராய் போற்றப்பட்டார். மதிக்கப்பட்டார். அதனால் இன்றும் பெரியாராய் அழைக்கப்படுகிறார்.
இது சிறுமதியாளர்களுக்கு, கெடுமதியாளர்களுக்கு, கேவலமாய் வாழ்பவர்களுக்கு, மான ஈனத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்களுக்குத் தெரியாது. தெரியவும் வேண்டியது இல்லை. இந்தக் கழிசடைகள் பாராட்ட வேண்டும் என்று நினைத்தவரல்ல பெரியார்.
பெரியாரின் பெருவெற்றி என்பது தமிழைச் சுற்றி இருந்த களைகளை நீக்கியதில் அடங்கி இருக்கிறது.
“தமிழுக்குத் துரோகமும்
– ஹிந்தி மொழியின் இரகசியமும்’
‘தமிழுக்குத் துரோகமும் ஹிந்தி மொழியின் இரகசியமும்’ என்ற கட்டுரையை 1926ஆம் ஆண்டே எழுதி, ஹிந்தி எதிர்ப்பு கொள்கையை வடிவமைத்தார் பெரியார். ஹிந்தி எதிர்ப்பு, சமற்கிருத எதிர்ப்புக் கருவிகளை அவர் 1930களில் தயாரித்து வழங்கி இருக்காவிட்டால் இன்று தமிழின் கதி என்ன? ஹிந்தியே இங்கு ஆட்சி மொழியாக ஆகி அரை நூற்றாண்டு ஆகி இருக்கும். ஹிந்தித் திணிப்பை தமிழுக்கும் தமிழர் தம் பண்பாட்டுக்குமான ஆபத்தாக முதலிலேயே அடையாளம் கண்டார் பெரியார். ‘தமிழை ஹிந்தி அழிக்காது. எந்த மொழியாலும் அழிக்க முடியாது. ஆனால் தமிழர் தம் பண்பாடு அழிந்து போகும்’ என்று 1938 ஆம் ஆண்டு சொன்னார் பெரியார்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று சொன்னதில் தான் முழுப்பெரியார் பெரும் பேரொளி என வெளிப்பட்டார். ‘தமிழ்நாடு தனிநாடு’ என்று சொல்லி தமிழைக் காத்தார். அன்றைய போராட்ட வழித்தடத்தில் தான் 100 ஆண்டு கால தமிழ்க் காப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைக்கு வரை ஹிந்தி திணிக்கப்படுகிறதே தவிர ஆட்சி செலுத்த முடியாமைக்குக் காரணம் பெரியாரின் தொலைநோக்குப் பார்வையே. அதனால் தான் அவரைப் பெரியார் என்கிறோம்.
இன்றைய பராசக்தி வரை!
“ஓ தமிழனே, தமிழ் அன்னை உன் கடமையைச் செய்ய அழைக்கிறாள். ஆரியக் கொடுமையிலிருந்து தன்னை விடுவித்து விடும்படி ஓலமிட்டுக் கொண்டிருக்கிறாள். தாய் நன்றி கொன்ற மகனும் தாய்ப்பணிக் கடமை கொன்ற மகனும் மனிதனாவானா?” என்று கேட்டார் பெரியார்.
(‘குடிஅரசு’ 29.8.1937) அதுதான் இன்றைய ‘பராசக்தி’யின் வெற்றி வரை தொடர்கிறது.
தமிழ்த்தாயின் துகிலை இராஜாஜி உருவுவது மாதிரியும், ஒரு கையில் தொல்காப்பியத்தையும் இன்னொரு கையில் திருக்குறளையும் வைத்துள்ள பெண்ணை இராஜாஜி கத்தியால் குத்துவது மாதிரியும், ஹிந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட தமிழ்த்தாயை ஹிந்தி பாம்பு கடிப்பதாகவும் கருத்துப்படங்களை 80 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டவர் பெரியார்.அதுதான் இன்றைய ‘பராசக்தி’யின் வெற்றி வரை தொடர்கிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப் போராட்டத்தை மய்யமாகக் கொண்டு ‘பராசக்தி’ என்ற படம் இப்போது வெளியாகி இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு வரும் இளைய தலைமுறையினர், ‘தமிழ்நாட்டில் மொழிக்காக எப்படிப்பட்ட போராட்டம் எல்லாம் நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம்’ என்கிறார்கள். இத்தகைய மொழிப் போராட்டத்துக்கான விதையை விதைத்தவர் என்பதால் அவரைப் பெரியார் என்கிறோம்.
ஆரியர் உற்சவங்களால்
தமிழர் பெருமை மறைக்கப்பட்டது
மொழிக்கு அடுத்ததாக தமிழனை தலைநிமிர வைத்தது அடுத்த சாதனை ஆகும். ஈரோட்டில் தான் தொடங்கிய அச்சகத்துக்கு தமிழன் அச்சகம், தமிழன் பிரஸ் என்று பெயர் சூட்டினார் பெரியார். (‘விடுதலை’ 29.12.1939) ஈரோடு தமிழ்த்திருநாள் விழாவில் பேசிய பெரியார், தமிழர் பெருமையை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். ஆரியர் உற்சவங்களால் தமிழர் பெருமை மறைக்கப்பட்டது, தமிழர் வீழ்ச்சிக்கு கம்பனின் இனத்துரோகமே காரணம் என்ற பெரியார், சேர சோழ பாண்டியர் ஆட்சி வரலாறு எங்கே என்று கேட்டார்.
“இன்று எல்லை என்று குறிப்பிடப்படும் திராவிடநாடு மாத்திரமல்லாமல் இமயம் முதல் கன்னியாகுமாரி தெற்கு வடக்காக மேல் கடலும் கீழ்க்கடலும் கிழக்கு மேற்காக உள்ள எல்லை பூராவும் திராவிட நாடாகவும் திராவிட மக்களாகவும் திராவிட மொழியாகவுமே இருந்திருக்கிறது” என்று பெரியார் பேசினார். (‘விடுதலை’ 22.1.1942) தமிழின ஒற்றுமை, தமிழ்நாட்டின் பெருமையை அரசியல் மேடைகளில் விதைத்தார் பெரியார். அதனால் தான் அவரைப் பெரியார் என்கிறோம்.
ஆங்கில ஆய்வாளர் பெர்னாட்
என்ன கூறுகிறார்?
திராவிட இயக்கச் சாதனைகள் குறித்து மிக முக்கியமான ஆங்கில ஆய்வாளர் பெர்னாட் எழுதும் போது, ”பல நூற்றாண்டுகளாக சமூக அமைப்பில் உயரடுக்கில் ஞானம், மேற்கத்திய கல்வியின் மூலம் பெறப்பட்ட பரந்த அறிவின் காரணமாக பார்ப்பனர்கள் இருந்தார்கள். நிர்வாகத்தில் முக்கிய பதவிகள் அனைத்தையும் ஆக்கிரமித்து ஏராளமான உரிமைகளையும் சலுகைகளையும் அவர்கள் அனுபவித்தனர். பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பங்கேற்கும் இந்தியர்கள் என்பவர்கள் அனைவரும் பார்ப்பனர்களாக இருந்தார்கள். பார்ப்பனர்களின் ஆதரவுடன் இந்தியர்களை பிரிட்டிஷார் சுரண்டினார்கள். பார்ப்பனர்களும் ஜாதி இந்துக்களும் சேர்ந்து அட்டவணை ஜாதியினர் மற்றும் நலிந்த பிரிவினரைச் சுரண்டினார்கள்.இதுதான் காலனிய காலத்து நிலைமையாக இருந்தது. 1900 களின் தொடக்க காலத்தில் ஏழைகளின் மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி போன்ற அரசியல் அமைப்புகளால் எடுக்கப்பட்டன. இதைத்தான் திராவிடக் கட்சியினர் ‘சுயமரியாதை’ என்பார்கள்” என்கிறார் பெர்னட்.
பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைத்து சமூகங்களும் தமிழ்நாட்டில் ‘சூத்திர’ப் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டன.இந்த பிரிவினையானது அவர்களுக்கு அரசியல் ரீதியாக பயன்பட்டது என்றும் சொல்கிறார். ”பார்ப்பனரல்லாதார் என்பது ஜாதி இல்லை, அது அரசியல்மயமாக்கப்பட்ட சொல்” என்கிறார்.
அனைத்து இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார்கள் பார்ப்பனர்கள். அதிகாரமிக்க பதவிகள் முதல் சாதாரணப் பொறுப்புகள் வரை அனைத்தும் அவாள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இந்த ஆதிக்கத்தை அடித்து நொறுக்க சமூகநீதி என்ற சம்மட்டியைத் தூக்கினார் பெரியார். நீதிக்கட்சி காலத்தில் போடப்பட்ட விதையை, அந்தக் காலத்திலேயே பட்டுப் போக வைக்க பல முயற்சிகள் நடந்தன. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் அதனை முறையாக அமல்படுத்த சட்டம் இயற்ற வைத்து, அந்த ஆட்சியையும் காப்பாற்றி, அந்தக் கட்சியையும் காப்பாற்றினார் பெரியார். சமூகநீதி என்ற ஒற்றைத் தத்துவத்துக்காகவே நீதிக்கட்சியைக் காத்தார் பெரியார்.
சமூகநீதியை சேதாரம் இல்லாமல்
காத்தவர் பெரியார்
அதே சமூகநீதியை காங்கிரஸ் ஆட்சியாளர்களான ஓமந்தூரார், பி.எஸ்.குமாரசாமி, காமராசர், பக்தவத்சலம் ஆட்சியிலும் சேதாரம் ஏற்படாமல் காத்தவர் பெரியார். நீதிமன்றங்களால் அதற்கு ஆபத்து வந்த போது பெரும் போராட்டம் நடத்தி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்ய வைத்தார் பெரியார். 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் ஏறிய அந்தச் சொற்கள் தான், இன்று தமிழன் தலைநிமிர்ந்து வாழ, ஆள, பதவிகளைப் பெற, பொறுப்புகளுக்கு வரக் காரணம். சட்டத்தின் மூலமாக தமிழனுக்கு அதிகாரம் மிக்க பதவிகளைப் பெற்றுத் தந்ததால் தான் அவரைப் பெரியார் என்கிறோம்.
தமிழ்நாட்டு மக்களை மொழி – இன அடிப்படையில் இணைத்ததே பெரியாரின் பெரும் பணியாகும். பார்ப்பானைத் திட்டினார், கடவுளைப் பழித்தார் என்பது என்பது எல்லாம் அவரது ஒரு சில கூறுகள். இவற்றை எல்லாம் செய்வதற்கு அடிநாதமாக இருந்தது எது? மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக தமிழினத்தை ஆக்குவது தான். ‘தமிழா, இன உணர்வு கொள்’, ‘தமிழா, ஆரியத்துக்கு அடிமை ஆகாதே’ என்ற முழக்கத்தின் கிளைகள் தான் மற்றவை அனைத்தும்.
கார்த்திகேசு சிவத்தம்பியின் கருத்து
தமிழ்ப் பண்பாடு என்ற பொதுப்பண்பாட்டை திராவிட இயக்கம் நிறுவியதை அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி அடையாளப்படுத்துகிறார்.
“தமிழ்ப் பண்பாடு சம்பந்தமாகத் திராவிட இயக்கத்தின் பிரதான தாக்கம், இக்கருத்துநிலை காரணமாக, தமிழ்ப் பண்பாடு என்று கொள்ளப்படும் ஒரு ‘பொதுமைப் பரப்பினை’ சமயச் சார்பற்றதாக்கியமையே. சமயச் சார்பற்ற ஒரு ‘தமிழ்ப் பண்பாட்டு’ இருக்கை ஒன்று உள்ளது என்ற ஒரு பார்வைப் பரப்பு இன்று உள்ளது. இதன் உருவாக்கத்திலே திராவிடக் கருத்து நிலைக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. இதன் காரணமாகச் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியன தமிழ்ப் பண்பாட்டின் கருவூலங்களாக எடுத்துரைக்கப்பட்டன.
திராவிடக் கருத்துநிலையின் தொழிற்பாடு காரணமாக தமிழின் மொழிப் பயன்பாட்டில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. தனித்தமிழியக்கம் திராவிடக் கருத்துநிலை வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தை உணர்த்தி நிற்பதாகும். தமிழ்ப் பண்பாடு இவர்களால் அரசியல்மயப்படுத்தப்பட்ட ஓர் எண்ணக் கருவாகிற்று என்றும் துணிந்து கூறலாம்.
இந்த அரசியல்மயப்பாடு காரணமாக, தமிழ்ப் பண்பாட்டின் குறியீடுகளிலும் வேறுபாடு ஏற்படத் தொடங்கிற்று. தைப்பொங்கல், தமிழர் திருநாள் ஆகிற்று; திருக்குறள், ‘உலகத்துக்கு அறிவு வழங்கிய தமிழ் மகன் திருவள்ளுவனாரின் நூல்’ ஆயிற்று; திருமணங்கள் பாரம்பரிய வடமொழி வரும் சடங்குகளின்றி நடைபெறத் தொடங்கின; தமிழ்ச் சினிமாவிற் சில குடும்பநிலைப் பண்புகள், தமிழ்ப் பண்புகளாகப் போற்றப்பட்டன. தமிழனின் மானம், தமிழச்சியின் கற்பு என்பன உருவுடைப் பொருள்கள் (reification) ஆகின. அரசியல் தொடர்பாடலில் இப்பிரயோகங்கள் வலிமை மிக்க கூற்றுக்களாகின.
தமிழ்த் தேசியப் பிரக்ஞை உருவாக்கத்தில் இந்தக் குறியீடுகள் மிக முக்கிய இடம்பெறத் தொடங்கின.
திராவிட இயக்க வரலாற்றில், அதன் கருத்துநிலைப் போக்கின் ஒரு முக்கிய பெரும்பேறாக அமைந்தது தமிழ்ப் பிரக்ஞை, தமிழ்த் தேசிய உணர்வு ஆகும். தமிழ் மக்கள் தங்கள் இன உணர்வு பற்றிய அரசியல் பிரக்ஞை கொள்வதில் திராவிட இயக்கத்தின் பங்கு கணிசமானதாகும். இத்துறையில் ம.பொ.சிவஞான கிராமணியாரின் தமிழரசுக் கட்சியும் ஓரளவு தொழிற்பட்டதுண்மையெனினும், தமிழ் மக்கள் தாங்கள் ஓர் அரசியற்குழுமம் என்ற உணர்வைப் பெறுவதில் இவ்வியக்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும்” என்று சிவத்தம்பி எழுதுகிறார்.
பெரியாரைக் கேவலமாக விமர்சிப்பதன் பின்னணி
இன்று வரை ஆரியர்களால், ஆரிய அடிவருடிகளால், பார்ப்பனர்களால், பார்ப்பன தாசர்களால், பார்ப்பன கைக்கூலிகளால் பெரியார் மிகக் கேவலமாக விமர்சிக்கப் படக் காரணம், தமிழனைத் தமிழன் ஆக்கிவிட்டாரே என்பதுதான். பெரியார் தான் வாழ்ந்த காலத்தில் எதையோ பேசிவிட்டுப் போயிருந்தால் இவர்களே ‘பாலாபிஷேகம்’ செய்து கொண்டாடி இருப்பார்கள். ஆனால் பெரியார், விதைத்துவிட்டுச் சென்று விட்டார். அது இன்று விருட்சமாக ஆகி விட்டது. பெரியார் காலத்தை விட பெரிதாகி விட்டது. பெரியார் காலத்தை விட அதிகமாகி விட்டது. அது தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
”இன்று பேசும் நான் கிழவனாக இருக்கலாம், ஆனால் எதிர்காலத்தில் இளைஞர்கள் வருவார்கள்” என்றார் பெரியார். இளைஞர்கள் வந்தார்கள். வந்து கொண்டே இருக்கிறார்கள். ஆரியமும் அடிவருடிகளும் தோற்ற இடம் இதுதான்.இதனால் தான் அவரைப் பெரியார் என்கிறோம்.
ஜாதி வேற்றுமை எதிர்ப்பு, மத ஆதிக்க எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, மொழி உணர்வு, இனப்பற்று, பெண் விடுதலை,விதவை மறுமணம், குழந்தை திருமணம் ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, எல்லோர்க்கும் எல்லாம், தொழிலாளர்க்கு வியாபாரத்தில் பங்கு, வடவர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, – ஆகிய அனைத்தையும் இன்று நாம் பேசி வருகிறோம். இவை அனைத்தையும் இம்மண்ணில் விதைத்தவர் அவர் தான். அதனால் தான் அவரைப் பெரியார் என்கிறோம்.
பெரியார் என்பது உடல் அல்ல!
பெரியார் என்பது உடல் அல்ல. தாடியும் மீசையும் வளர்த்து வயதான காலத்தில் செத்துப் போன ஓர் உடல் அல்ல. பெரியார் என்பது ஒரு கொள்கை. கோட்பாடு. முழக்கம். அந்தக் கொள்கைக்கான தேவை இருக்கும் வரை அவர் பெரியாராகவே இருப்பார். சிலையை இடிக்கலாம். அவர் படத்தைக் கிழிக்கலாம். அல்லது வாயால் கனைக்கலாம். குரைக்கலாம். இது எதுவும் அவரை துளிகூட சேதாரம் செய்யாது. ஏனெனில் அவர் பெரியார்!
