எங்கும் பொங்கல் விழா பொங்கட்டும்! -முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

முனைவர் அதிரடி க.அன்பழகன்
மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்,
திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

மனிதர்களின் தோற்றம் முதல் பல மாற்றங்கள் வரை இயற்கையாகவும், செயற்கையாவும் உருவாகி இருப்பதை அறிகிறோம். இம்மாற்றங்களுக்கு மனித உயிர்களுக்கே உரித்தான பகுத்தறிவுதான் மிக மிக அடிப்படையான ஒன்றாகும். இதன் காரணமாகவே உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே பகுத்தறிவாளர்கள் என்ற உச்சநிலையில் இருக்கிறார்கள்.

விழாக்கள்

வாழும் இடத்திற்கேற்ப வளங்களைக் கொண்டு வாய்ப்புகளை உருவாக்கியவர்கள் பெற்ற வெற்றிகள்தான் இன்றைய மாற்றங்கள். அந்த மாற்றங்களால் ஏற்பட்ட வளர்ச்சிகளைக் கொண்டாடி மகிழும் மனிதர்கள் விழாக்களைக் கண்டனர். தனித்தனி நபர்களின் வாழ்க்கை – சமூக வாழ்க்கை என பல நிலை உயர்வுகளை, மகிழ்ச்சிப் பெருக்கினை – பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள், தொடக்க நாள், வெற்றி நாள் என பல வகையான மகிழ்ச்சி நிலைகளை விழாக்களாக்கி பார்த்து மகிழ்ந்தார்கள்!

உழவர் திருநாள்

பழங்கால மக்களின் தொடக்கமே வேளாண் தொழில் – உழவுத் தொழில் – பயிர் விளைவித்தல் – அறுவடை – உழைப்பாளர்கள் எனப் படிப்படியாக வளர்ந்தது. உழவுத்தொழில் செய்யும் காலத்தின் விளைச்சல் விழாவாக – அதுவே உழவர்களின் வெற்றி விழாவாக மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது. உலகெங்கும் இவ்விழா கொண்டாடும் காலமும், நேரமும், மாதமும் மாறுபடலாம். அதனை ‘அறுவடைத் திருநாள்’ (Harvest Festival) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. அதனை தமிழர்களாகிய நாம் ‘உழவர் திருநாள்’ என்று அழைக்கிறோம்.

திராவிடர் திருநாள்

தமிழர்கள் அனைவரும் உழவுத் தொழில் செய்வதையே அன்று முதல் கொண்டிருக்கிறோம். தமிழர்கள் அனைவரும் இனத்தால் திராவிடர்கள் ஆனதால் ‘திராவிடர் நாள்’ என்று பொங்கல் நாள் சிறப்பிக்கப்படுகிறது. இச்சிறப்பினை புரட்சிக்கவிஞர் பாடும்போது, “வாழிய  பொங்கல் நன்னாள்! வாழிய திராவிடந்தான்” என்று புகழ்ந்துரைக்கிறார். ‘மார்கழி உச்சியின் மலரும் பொங்கல்” என்றுரைத்து மகிழ்கிறார்.

பொங்கல் விழா

திராவிடர் திருநாள் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்வதால் தமிழர் திருநாள் என்று சிறப்பாக்கிக் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாள் – அறுவடைத் திருநாள் – தமிழர் திருநாள் என்று திராவிடர் இனத்துப் பெருவிழாவாகக் கொண்டாடப்படும் இவ்விழாவிற்கு அழைக்கப்படும் பெயரிலேயே அதற்கான காரணம் அறியப்படுகிறது.

பகுத்தறிவுத் திருநாள்

இப்பெயர்களுக்கான காரணங்களில் எந்த ஒன்றிற்கும் கடவுள், மதம், புராணம், இதிகாசம் போன்ற மதக் கருத்துகள் அறவே இல்லை. எனவே, தந்தை பெரியார் அவர்கள் பொங்கல் விழாவை “பகுத்தறிவுத் திருநாள்” என்று வரவேற்றார்.

தமிழ்ப் புத்தாண்டு

பொங்கல் விழா தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இது பூமியின் சுழற்சியை அடிப்படையாக் கொண்ட கணக்கீட்டின்படி அமைந்த அறிவார்ந்த ஒன்றாகும். எனவே, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு – தமிழர்க்குப் புத்தாண்டு என்று அறிஞர்கள் கூடி முடிவு செய்தனர். அறிவாசானின் கருத்தும் அதனை ஏற்று இன்று தமிழ்ப் புத்தாண்டு என்பது தைத் திங்கள் முதல் நாள் தான் என உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்.

சங்கராந்தி

இச்சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். ‘கிரந்தி’ என்றால் சொல்லுதல். அது சமஸ்கிராந்தியாகி பின் சங்கராந்தி ஆகி பொங்கல் விழா என்ற பெயருக்கு சற்றும் பொருத்தமில்லாததோடு, மதக் கதை புனையப்பட்டு இந்திரனுக்குரிய பண்டிகை என்றும், மாட்டுப் பொங்கல் கிருஷ்ணனுக்குரிய பண்டிகை என்றும், போகித்தல் என்ற வடசொல்லே போகிப் பண்டிகை என்றும், ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை நடத்தி – சமஸ்கிருத மயமாக்கும் பார்ப்பனர் சூழ்ச்சியே ‘சங்கராந்தி’. மேலும், பொங்கல் விழாவை சங்கராந்தி என்று சமஸ்கிருத பெயரிட்டதற்கு காரணமே பார்ப்பனர்கள். அவர்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இல்லை; சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள்; ஆரியர்கள் திராவிடர்கள் இல்லை – தமிழரில்லை என்பதற்கு இதுவே சரியான சான்றாகும்.

எனவே, சங்கராந்தி – இந்திர விழா, போகி என்பதெல்லாம் தமிழனின் விழா இல்லை. பொங்கல் விழாதான் தமிழர் திருநாள். மேலும், பொங்கல் என்பதற்கு நமது முன்னோர்கள் “பெரும் பொங்கல்” என்றே மற்றொரு பெயராலும் அழைப்பார்கள்.

பொங்கல் விழாவில் பொங்கும் சிறப்புகள்

பொங்கல் விழா என்பதன் தனிச்சிறப்பே இயற்கையில் உழவர்களின் உழைப்பில் விளைந்திட்ட உணவுப் பொருட்கள் அனைத்தையும் கொண்டு பொங்கலிடுவதாகும். தைத் திங்கள் அறுவடைக் காலம். அத் தைத் திங்களில் விளைந்திட்ட புதுநெல், கரும்பு, மஞ்சள், இஞ்சி, வாழை, காய்கறிகள் என அனைத்தும் கொண்டு கொண்டாடும் விழா இனிப்பானது மட்டுமல்லாமல் எல்லோர்க்கும் சமமானது – சமத்துவமானது.

சமத்துவப் பொங்கல்

இயற்கையில் விளைந்திட்ட அனைத்துப் பொருட்களும் ஏழை – பணக்காரன், உயர்ந்தோர் – தாழ்ந்தோர் மற்றும் எந்த நோக்கில் வேறுபடுத்தினாலும் அனைவர்க்கும் பொதுவானது. இயற்கையில் விளையும் எவையும் தரம் பிரித்து விளைவதில்லை. ஏன், விளைவிக்கப்படுவதுமில்லை. எல்லோர்க்கம் எல்லாமும் என்கிற – அனைவர்க்கும் அனைத்தும் என இயற்கை நீதியை பறைசாற்றும், பகிர்ந்தளிக்கும் சமத்துவ விழாதான் பொங்கல் விழா. அவ்விழாதான் திராவிடர் திருநாள் என்பதற்கான உரிய விழா! ஒரே விழா!

அனைத்தும் ஆரியமே!

தமிழர் கொண்டாடும் அனைத்து விழாக்களும் ஆரியப் பண்பாட்டுத் திணிப்பு. ஆரிய மூடத்தனத்தின் வெளிப்பாடு என்றார். தீபம், பூஜை, சஷ்டி, நவமி, ஜெயர்ந்தி, கிருத்திகை, அமாவாசை, அபிஷேகம், கும்பாபிஷேகம், அர்ச்சனை, யாகம், மகாமகம், புராணம், இதிகாசம் இன்னபிற அனைத்தும்  வடமொழி – சமஸ்கிருதம். ஆரியத் தத்துவம், கற்பனை – பொய் – மூடத்தனம்.

தமிழர்களின் ஒரே விழா

பொங்கல் விழா ஒன்றே அறிவார்ந்த விழா – அறிவை அடிப்படையாகக் கொண்ட விழா. தமிழர்க்கு என்று -தமிழர் கொண்டாடிய ஒரே விழா பொங்கல் விழா. அது வெறும் விழா அல்ல – பகுத்தறிவு விழா. அது ஒன்றுதான் தமிழர்கள் கொண்டாடும் தகுதி பெற்ற ஒரே விழா. தமிழர்களே! பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழுங்கள் என்று ஆணையிட்டார். ஒவ்வொருவரும் வாழ்த்துக் கூறி மகிழுங்கள் என்றார். அதற்குப் பிறகுதான் பொங்கலுக்கு வாழ்த்துக் கூறும் நிலை உருவானது. பொங்கல் வாழ்த்து அட்டைகள் பல வணங்களில் அச்சாகி அஞ்சல் மூலம் ஒருவருக்கொருவர் அனுப்பப்பட்டது. பொங்கல் வாழ்த்து கூறும் முறையை சாமான்ய மக்களிடம் வரை கொண்டு சென்ற பெருமை பெரியாரைச் சாரும் – திராவிடர் கழகத்தை – திராவிட இயக்கங்களைச் சாரும்.

‘பொங்கட்டும் திராவிடர் திருநாள்!’

தமிழர்தம் உள்ளம் தேறும் தன்மானம் தழைக்கட்டும். தமிழர் தம் இல்லந்தோறும் பொங்கல் சுவை இனிக்கட்டும். தமிழ்நாடு எங்கும் தமிழர் மானம் பொங்கட்டும். திக்கெட்டும் பொங்கல் பொங்கட்டும் – இனி என்றும் திராவிடம் வெல்லட்டும்.

பொங்கலோ பொங்கல்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *