அறிவிப்பு திருவள்ளுவர், அண்ணா, காமராசர், பாரதிதாசன் உள்ளிட்ட விருதாளர்கள் பட்டியல்

சென்னை, ஜன. 13- சமூகநீதி கிடைக்கப் பாடுபட்டவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு தந்தை பெரியார் விருது 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகிறது. இதுவரை 30 ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
அவ்வரிசையில் 2025ஆம் ஆண்டுக்கான விருது வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது என்று தமிழ்நாடு அரசு இன்று (13.1.2026) அறி வித்துள்ளது. அது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“பள்ளிப் பருவம் முதல் பெரியார் இயக்க மேடைகளில் முழங்கத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து வருகிறார் வழக்குரைஞர் அ.அருள்மொழி சுயமரியாதை, சமூகநீதி, பெண் விடுதலை, அரசியலமைப்பு சட்டக் கோட்பாடுகள் ஆகியவை குறித்து தமிழ்நாட்டு மேடைகளில் அதிக காலம் பேசிவருபவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். பெரியாரியலுடன் சேர்ந்து பாவேந்தரின் கவிதைகளில் அதிக ஈடுபாடு கொண்டு புரட்சிக்கவிஞரின் பாடல்களைப் பரப்பும் பெரும் பணியைச் செய்து வருகிறார். தனது கருத்தை ஆழமாகவும், அதே நேரத்தில் துணிச்சலுடனும் மாற்றார் வைக்கும் வாதங்களை வலிமையாக மறுக்கும் வகையிலும் மேடைகளில் முழங்கி வரும் வழக்குரைஞர் அ.அருள்மொழி இந்த ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது சிந்தனைச் செல்வனுக்கும், பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கும், பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது முதுமுனைவர் வெ.இறையன்புக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது முனைவர் சு.செல்லப்பாவுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் விருது விடுதலை விரும்பிக்கும் வழங்கப்படுகிறது.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.அய்ந்து லட்சம், ஒரு சரவன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள்.
