பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தமிழ்நாடு வந்துள்ளார். கோவையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் மருதமலை கோவிலிலும், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் ‘சாமி தரிசனம்’ (11.1.2026) செய்தார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவருடன் பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘‘புண்ணிய பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்து இன்றைய நாளைத் தொடங்கினோம். பாரம்பரிய செழுமை, போற்றக்கூடிய கட்டடக் கலை மற்றும் அமைதியான சூழலால் நிறைந்த இந்த பழமையான சிவன் கோவில், பக்தி மற்றும் அமைதியால் நம் மனதை நிறைக்கும் வகையில் திகழ்கிறது. அனைவருக்கும் சிவபெருமான் அருள்பாலித்து, தர்மத்தின் பாதையில் வழிநடத்தட்டும்’’. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மருதமலையில் ‘சுவாமி தரிசனம்’ செய்தார். அவருடன் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் உடன் சென்றனர்.
பிறகு கோவை, வடவள்ளி பகுதியில் நடந்த ‘மோடி பொங்கல் விழா’வில் பங்கேற்று உறியடித்தார்.
பிஜேபியின் தேசியத் தலைவராக நிதின்நபின் அறிவிக்கப்பட்டு தேசிய தலைவராகப் பொறுப்பேற்றதற்குப் பின் முதன் முதலாக தமிழ்நாட்டிற்கு வந்தவர் என்ன செய்தார்? கோயில் கோயிலாகச் சுற்றித் திரிந்து தரிசனம் செய்து வருகிறார்.
இந்த ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பிஜேபி வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும். மூடப் பக்தியையே மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்துவதைத் தவிர வேறு மக்கள் நலன் சார்ந்த அறிவார்ந்த சரக்கு ஏதுமில்லை.
450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். பாபர் மசூதியை இடிந்த இடத்தில் ரூ.2150 கோடி செலவில் ராமன் கோயில் கட்டப்பட்டது (2025 மார்ச்சு வரை). முழு திட்டத்திற்கு ரூ.3500 கோடிவரை திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த மதத்தினரை இழிவுபடுத்துவது, அவர்களின் வழிபாட்டுத் தலங்களை இடித்துத் தள்ளுவதுதான் இவர்களின் ஹிந்துத்துவா கொள்கை!
கடந்த கிருஸ்துமஸின் போது இந்தியா முழுவதும் அடித்து நொறுக்கப்பட்ட சர்ச்சுகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
மக்கள் மத்தியில் மதத்தின் பெயரால் பிளவுகளையும் கலவரங்களையும் உண்டாக்குவதற்கான ஓர் அரசியல் தேவையா – ஓர் ஆட்சித் தேவையா? என்பது முக்கிய கேள்வி!
இப்பொழுது பிஜேபியின் தேசிய தலைவராகக் கொண்டு வரப்பட்டவர் – ஒரு கடைந்தெடுத்த ஹிந்துத்துவா வாதி என்பது தொடக்கத்திலேயே தெரிந்து விிட்டது. (அப்படிப்பட்டவர்களைத் தானே பொறுக்கி எடுத்து அறிவிப்பார்கள்).
கோயில் கோயிலாகச் சுற்றி பிஜேபி தேசிய தலைவர் போகிற போக்கில் திமுகமீது குற்றப் பத்திரிகை படித்துத் தள்ளியுள்ளார்.
‘‘ஸநாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம். இது பாரதத்தின் பண்டைய ஆன்மிக இறையாண்மையையும், தேசிய விழிப்புணர்வையும் மீட்டெடுப்பதில் ஒரு சகாப்தம் படைக்கும் தருணமாகும். அதே சமயம், தமிழ்நாட்டின் இந்த மகத்தான பாரம்பரியம், திமுக ஆட்சியின் கீழ் அவமதிக்கப்படுகிறது. தமிழ் கடவுளான முருகனுக்கு தீபம் ஏற்றுதல் முதல் ஹிந்து நம்பிக்கைகளை சிதைப்பது வரை, ஸநாதன வேள்விகள் தொடர்ந்து கேலி செய்யப்படுகின்றன.’’ என்று சங்பரிவார்களுக்கே உரிய எகத்தாளத்தோடு பொரிந்து தள்ளியுள்ளார்.
கடவுளில் என்ன தமிழ்க் கடவுள், இங்கிலீஷ் கடவுள், ஹிந்திக் கடவுள், காஷ்மீர்க் கடவுள்! அப்படியென்றால் கடவுள் ஒருவரே அவர் உருவமற்றவர் (அரூபி) என்று சொல்லுவ தெல்லாம் சுத்த மூடத்தனம் என்பது விளங்கவில்லையா!
ஸநாதனத்தைப்பற்றி தொடர்ந்து கேலி செய்யப்படுகிறதாம் தி.மு.க. ஆட்சியில்.
ஸநாதனம் என்றால் என்ன என்ற கேள்விக்கு முதலில் பதில் உண்டா? ஹிந்து மதத் தலைவரான –மூத்த சங்கராச்சாரியார் (மறைந்த) சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?
அவரின் ‘தெய்வத்தின் குரல்’ – முதல் பாகம் (பக்கம் 282–284) பகுதியைப் படித்துப் பார்க்கட்டும்.
ஸநாதனம் என்றால் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் வர்ணதர்மம் என்று குறிப்பிட்டுள்ளாரே!
வருணதர்மத்திற்கு விளக்கம் ேதைவயா? பிறப்பின் அடிப்படையில் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு பிளவுகள் – பிரிவுகள் தானே!
‘‘பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்’’ (கீதை அத்தியாயம் 9, சுலோகம் 321) என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிஜேபியின் புதுத் தேசிய தலைவர் நிதின் நபின் எதிர்ப்பார்க்கிறாரா?
சூத்திரன் என்றால் விபச்சாரிமகன் (மனுதர்மம் அத்தியாயம் 8 – சுலோகம் 415) என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அதிரடியாகப் பேசுகிறாரா?
நினைவிருக்கட்டும்! தமிழ்நாடு தந்தை பெரியார் பிறந்த சுயமரியாதை மண் – திராவிடர் மண்!
இங்கே ஸநாதனத்தின் ஆணி வேர் வரை வீழ்த்தப்படும். இதைக் குற்றச்சாட்டாக வைத்தால் அவர்கள் யார் என்பதை இம்மண்ணின் மைந்தர்கள் உறுதியாக அடையாளங் கண்டு நிராகரிப்பார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளட்டும்!
வாய் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று உளறிக் கொட்ட வேண்டாம்!
