மதுரை, ஜன.12- போதைப் பொருள் ஒழிப்பு, ஜாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, கடந்த 2ஆம் தேதி சமத்துவ நடைப்பயணத்தை திருச்சியில் தொடங்கினார்.
நடைப்பயணத்தின் நிறைவு விழா இன்று (12.1.2026) மாலை மதுரையில் நடக்கிறது. இந்தநிலையில், உத்தங்குடி பகுதியில் நேற்று (11.1.2026) இரவு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வைகோ நடைப்பயணம்
“கூட்டணிக் கட்சியில் இருக்கும் பெரும்பாலான தலைவர்கள் நடைப்பயணத்தில் பங்கேற்று ஆதரவினை தெரிவித்தனர். போதைப் பொருட்களால் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று, நான் நடைப்பயணம் அறிவித்தபின்னர்தான், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அது குறித்து பேசினார்கள். அதுவரை அவர்கள் அது குறித்து பேசவில்லை.
அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. கலை உலகில் இருந்து வருபவர்களுக்கும் உரிமை உண்டு. அவர்களை நான் விமர்சிக்க மாட்டேன். அரசியலுக்கு வந்து எளிதில் சாதித்து விடாலம் என்று மணல்கோட்டை கட்டுகிறார்கள். அது எப்போது வேண்டுமானாலும், சரிந்து விழும். வருகிற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும். திமுக தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் தமிழ்நாட்டை வழிநடத்துவார்.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது. ‘சென்சார் போர்டு’ எந்த காரணத்துக்காக படத்தை தடுத்து நிறுத்தி உள்ளது என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். முதலில் தடுத்தாலும், குறுகிய காலத்தில் அதனை நீக்கி கொள்வார்கள். அந்த படம் வெளிவருவதற்கு எந்த பிரச்சினையும் இருக்காது. எனக்கு சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதியின் ‘பராசக்தி’ படம்தான் தெரியும். தற்போது வந்துள்ள ‘பராசக்தி’ பற்றி தெரியாது.
அமித்ஷாவின் உபதேசம் எடுபடாது
தமிழ்நாட்டிற்கு வரும், அமித்ஷா தமிழ்நாடு மக்களுக்கு உபதேசம் செய்கிறார். திராவிட இயக்க பூமியில் அவரது உபதேசம் எடுபடாது. பிரதமர் மோடி தந்திரசாலி. திருக்குறள், புறநானூறு, பாரதியார் பாடல்களை ஹிந்தியில் எழுதி வைத்து கொண்டு வாசிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டையும், தமிழ்நாடு மக்களையும் கவர நினைக்கிறார். ஆனால், தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க மறுக்கிறார்.
தமிழ்நாட்டில் திமுக-வை துடைத்தெறிந்து விடலாம் என நினைக்கிறார்கள். இதைவிட பெரிய அடக்குமுறைகளை எல்லாம் திராவிட முன்னேற்ற கழகம் சந்தித்துள்ளது. திமுக-வை, ஒருபோதும் இந்த பூமியில் இருந்து யாராலும் அகற்ற முடியாது. அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் 8 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தித்து, திராவிட இயக்கத்தை பாதுகாக்க, திமுக-வுடன் கூட்டணி வைத்தோம். இது சித்தாந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. அதில் உறுதியாக இருக்கிறோம் என்றார் வைகோ.
