மும்பை, ஏப். 24- மகாராட்டிரா அரசு இன்னும் 15 முதல் 20 நாட்களில் கவிழ்ந்துவிடும் என்று சிவ சேனா (உத்தவ் பால் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத் இவ்வாறு கூறினார்.
முன்னதாக கடந்த ஆண்டு மகாராட்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவு டன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக் கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக் கினர்.
இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைந்தது. கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே மகாரட்டிரா முதலமைச்சரானார். சிவ சேனா இரண்டாக உடைந்தது. சின்னத் தையும் இழந்த உத்தவ் தாக்கரே கடும் உளைச்சலுக்கு உள்ளானார். இந்நிலையில், ஷிண்டே கட்சியின் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவிருப்பதாகக் குறிப்பிட்ட சஞ்சய் ராவத், “இன்னும் 15 முதல் 20 நாட்கள் தான் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கும். ஷிண்டே அரசுக்கு “மரண வாரண்ட்” பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அதில் யார் கையெழுத்திடுவார்கள் என் பது மட்டும்தான் இப்போதைக்கு தெரிய வேண்டும் ” என்றார். ஏற் கெனவே பிப்ரவரி மாதத்துடன் ஷிண்டே தலைமையிலான அரசு கவிழ்ந்து விடும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.