நம் உடலில் இரு பகுதிகளைக் கொண்ட நுரையீரல் மார்புக்கூட்டில் பாதுகாப்பாக உள்ளது. நுரையீரலின் உள்ளே பல்லாயிரக்கணக்கான அல்வியோலா எனும் பகுதிகள் நுரையீரல் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. மூக்கு வழியாக நாம் உள்ளே இழுக்கும் காற்று நுரையீரலுக்குள் சென்று பலவித மாற்றங்களுக்குப் பிறகு வெளியேற்றப் படுகிறது .நுரையீரல்களில் உள்ள திசுக்களில் கட்டுப்பாடில்லாத அளவில் செல்களின் வளர்ச்சியே நுரையீரல் புற்றாகும்.
ஆண்டுதோறும் 1.4 மில்லியன் மக்கள் நுரையீரல் புற்றுநோயால் இறக்கின்றனர் என்று கூறி அதிரவைக்கிறது உலக சுகாதார நிறுவனம். நுரையீரல் புற்றுநோயால் சுத்தமான (ஆக்சிஜன் நிறைந்த) ரத்தம் மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்வது பாதிக்கப்படுகிறது. ரத்தத்தின் வழியாக புற்றுநோய் செல்கள் பயணித்து உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கின்றன. இந்நோய் தாக்குதலுக்குப் பலவித காரணங்கள் உண்டு.
குறிப்பாக புகைப் பிடிப்பவர்களை தயவு தாட்சண்யமின்றி நுரையீரல் புற்று தாக்குகிறது. மென்மையான திசுக்களைக் கொண்ட நுரையீரல்களில் நிக்கோடின் கொண்ட புகை, தாக்குதலை ஏற்படுத்தி நுரையீரல் புற்றை ஏற்படுத்துகிறது. இது தவிர ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் வசிப்பவர்கள், மாசுபட்ட சுற்றுச்சூழலில் வாழ்பவர்கள், யுரேனியம், ஆர்சினிக் போன்ற பொருட்களின் அருகில் பணிபுரிபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.
பசியின்மை, எலும்பில் வலி, உடல் வீக்கம், குரல் மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்கவும். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் மூலமாக நுரையீரல் புற்றுநோய் வராமலும், வந்தபின் அதனைக் கட்டுப்படுத்தவும் முடியும்.
கரும்பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் உள்ள காய்கறிகள், கீரைகள், பழங்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். பூசணி, பச்சைத் தேயிலை, பீன்ஸ், சோயாபீன்ஸ், கேரட், பழச்சாறு இவைகளுக்கு நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. தொடர்ந்து தினமும் ஒரு கேரட், 85 கிராம் காய்கள், வாரம் இருமுறை பழச்சாறு சாப்பிட வேண்டும். மேலே குறிப்பிட்ட காய்கறிகள் புற்றுநோய் வராமல் தடுக்கும் மற்றும் நோய் வந்தபிறகு அதனை மேலும் பரவாமல் தடுக்கும் பணியைச் செய்கின்றன.
மருத்துவர் ‘டம்பையர்’ எனும் தொற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவர் மேற்கொண்ட பரிசோதனையில் காய்கறிகள், பழங்கள் அதிகம் உண்பவர்களைவிட, குறைவாக உண்பவர் களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. காய்கறிகளில் குறிப்பாகக் கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதால் நுரையீரல் புற்றுநோய் நெருங்காது. நாள்தோறும் ஒரு கேரட்டை மென்று சாப்பிட வேண்டும். ரத்தத்தில் குறைவான அளவு பீட்டா கரோட்டின் இருந்தால் அவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். டர்னிப், புரோகோலி, பீன்ஸ், சோயா ஆகியவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. காரணம், இவற்றில் பீட்டாகரோட்டின், போலிக் அமிலம் அதிகம் இருப்பதுதான்.
அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் பிளாக் கூறுகையில், “காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் அவற்றில் உள்ள பீட்டாகரோட்டின், போலிக் அமிலம் உள்ளிட்ட சில வேதிப் பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் படையை (Patcher) சுருங்க வைக்கும் புற்றினால் ஏற்படும் தடிப்பை (Eruption) மாற்றும். மேலும், புற்றுநோயை மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுக்கும். பழம். காய்கறிகள் புற்றுநோய் வரும் முன்பு காக்கும் பணியைச் செய்கிறது” என்றார். வெள்ளைப் பூண்டு, முட்டைக்கோஸ், அதிமதுரம்,இஞ்சி, வெங்காயம். காலிபிளவர், ஓட்ஸ், புதினா, வெள்ளரி ஆகியவை புற்றுநோய் வராமல் தடுக்கக் கூடியவை. அமெரிக்க புற்றுநோய் ஆய்வுக் கழகம் இதுகுறித்து கூறுகையில், நாள்தோறும் 2 முறை பழங்கள், காய்கறிகள் (100 – 150 கிராம்) சாப்பிடுபவர்களைப் புற்றுநோய் நெருங்குவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
ஹவாய் பல்கலைக் கழகத்தில் நடந்த ஆய்வில், காய்கறிகள், பழங்கள், பச்சைத் தேநீர் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பீட்டாகரோட்டின் அளவு அதிகரித்தது தெரியவந்துள்ளது. காய்கறிகளில் உள்ள பீட்டாகரோட்டின், லூட்டிஸ், லைகோபினே, இன்டோல் போன்ற வேதிப் பொருட்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை வாய்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டது. புகைப் பிடிப்பவர்கள் ஆரஞ்சு, தர்ப்பூசணி, திராட்சை இவற்றை அதிகம் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். புகைப் பிடிப்பதை விட்டொழித்தும், பசுமையான காய்கறிகள், பழங்கள், பச்சைத் தேநீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க முடியும்.
