போக்குவரத்து நெரிசலும், மக்கள் நெரிசலும் நிறைந்த பகுதி மும்பை. நாம் நினைத்ததைப் போல பெரிய அளவிற்குக் குளிர் இல்லை. மாநாட்டு அரங்கமும், தங்கும் விடுதியும் 2 கிலோமீட்டர் தொலைவு இருக்கும். விடுதி அருகிலேயே தமிழ்நாட்டு உணவுடன் இரண்டு உணவகங்கள் இருந்தன. புதிதாக ஒரு மாநிலத்திற்குச் சென்றால், அங்குள்ள உணவைச் சுவைத்துப் பார்க்கலாம் என்கிற எண்ணம் 90 விழுக்காட்டினருக்கு வருவதே இல்லை. அதே இட்லி, அதே ஊத்தப்பம். மும்பை பெருநகரில் எங்கு பார்த்தாலும் தேநீர் நிலையங்கள். பெரும்பாலும் சுவையாக இருக்கின்றன.
நமது தோழர்களுக்கு முதல் நாளில், சில மணி நேரங்கள் தான் தடுமாற்றம் இருந்தது. பின்னர் அருகில் உள்ள இடங்களுக்கு நகர் வலம் வரத் தொடங்கிவிட்டனர். விடுதியில் இருந்து மாநாட்டுத் திடலுக்கு முதல் நாள் காலை ஆட்டோவில் வந்தார்கள். அன்று மாலை நடந்தே வந்துவிட்டார்கள். அந்தளவிற்குப் பழகிவிட்டது என்பதைவிட, பழக்கிக் கொண்டார்கள். மற்றவர்களை, பகுத்தறிவாளர்களுக்குக் கூடுதல் தனித்தன்மை வேண்டும் என்பது நியாயம் தானே!

ஆசிரியரின் ஆங்கில மொழி உரை!
04.01.2026 ஞாயிறன்று காலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் சமூகநீதி மாநாடு ஆங்கில மொழியில் தொடங்கியது. “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சம்சோடன்” சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி யஸ்வந்த் சாவ்ரே, மாநிலங்களவை செயலக முன்னாள் பணியாளர் எஸ்.என்.சாகு, பகுஜன் குடியரசு சமத்துவக் கட்சியின் சுரேஷ் மானே, அந்தசர்தா நிர்முலன் பத்திரிகையின் துணை ஆசிரியர் முக்தா தபோல்கர், இதர பிற்படுத்தப்பட்ட அமைப்பின் சார்பில் விவேக்குமார், சமூக செயற்பாட்டாளர் அய்ஸ்வர்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, தத்தம் பார்வைகளில் சிறப்பான கருத்துகளை எடுத்து வைத்தனர். நிறைவாகத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மிகச் சிறந்த ஆங்கில உரையை45 நிமிடங்கள் வழங்கினார்கள். சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தேவையான கருத்துகளை அழகுற எடுத்து வைத்தார்கள். மிகச் சிறந்த அமர்வாக அது அமைந்தது.

மனதை வருடும் நினைவுப் பரிசு!
ஆசிரியருக்கு மும்பைத் தோழர்கள் மிகச் சிறந்த நினைவுப் பரிசு ஒன்றினை வழங்கினார்கள். செயற்கை நுண்ணறிவு மூலம் (Artificial intelligence) தந்தை பெரியார், பாபாசாகேப் அம்பேத்கர், சாகு மகராஜ், ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய் புலே ஆகியோருடன் ஆசிரியர் நிற்பதைப் போலவும், பேசிக் கொண்டு சிரிப்பதைப் போலவும் அந்தப் படம் அற்புதமாக அமைந்திருந்தது. அந்தப் படத்தை ஆசிரியர் பெறும்போது அரங்கமே மகிழ்ச்சியால் நிறைந்தது. அந்தப் படத்தைத் தயார் செய்த சென்னை தோழர் கதிர் ஆர்.எஸ். அவர்களுக்கு நன்றி! மதிய உணவை விழாக் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
தாய்மொழியின் முக்கியத்துவம்!
மாலையில் நடைபெற்ற மராத்தி மொழியிலான மாநாடு வித்தியாசமான ஓர் அனுபவத்தைத் தந்தது. இருமொழிக் கொள்கை தமிழ்நாட்டில் 1968 முதல் நடைமுறையில் இருக்கிறது. இந்தக் கொள்கை வலுவாக இருந்த காரணத்தால் தான் நம் தாய்மொழி நம்மிடமே நீடிக்கிறது. ஆனால் இந்தியாவின் பிற மாநிலங்களில் ஹிந்தியையும் இணைத்து மும்மொழியை ஆதரித்ததால், அனைத்து மாநில மொழிகளும் அழிந்து, ஹிந்தி மட்டுமே நிலைத்து நிற்கிறது. இந்தத் தலைமுறையினருக்குத் தங்களுக்கு ஒரு தாய்மொழி இருக்கிறது என்பதே தெரியவில்லை.

அதேநேரம் 1940 ஆம் ஆண்டில் மும்பைக்குப் பெரியார் பயணம் செய்தபோது, அங்கு வசித்த தமிழர்கள், “பெரியார் வாழ்க என்றதுடன், ஹிந்தி ஒழிக”, எனவும் முழக்கமிட்டுள்ளனர். இன்றைக்கு மும்பையில், “எங்களுக்கு ஹிந்தி வேண்டாம், மராத்தியே போதும்”, என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. அப்படியான மகாராட்டிர மாநிலத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு ‘மராத்தி’ மொழியில் நடைபெற்றது.
தமிழ்நாட்டு மகளிர் பெருமைக்குரியவர்கள்!
எழுத்தாளர் பீம்ராவ் சர்வடே கலந்து கொண்டு தந்தை பெரியாரின் சிறப்புகள், தமிழ்நாட்டின் தனித்துவம், ஆசிரியரின் செயல்பாடுகள், மராத்திய மாநிலத்தின் தேவைகள் என அனைத்தையும் குறிப்பிட்டுப் பேசினார். இவர் தந்தை பெரியார் குறித்து 10 நூல்கள் எழுதியவர். தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளில் சமூக நலக் கட்டுரைகளை எழுதி வருபவர். தொடர்ந்து மீனவர் சங்கத் தலைவர் ராஜாராம் பாட்டில் பேசினார். மீனவர்களுக்கே உரிய தொப்பியை தலையில் அணிந்திருந்தார்.
அவர் பேசும்போது, “பெரியாரை இத்தனை காலம் அறியாமல் விட்டேனே? பெரியார் பாலா அறிமுகம் செய்யாவிட்டால் இப்போதும் தெரிந்திருக்காதே? எங்கள் மீனவர் சமூகத்தில் காலை முதல் இரவு வரை எங்கள் மகளிர் மீன் வியாபாரம் செய்கிறார்கள். நாங்கள் கடலுக்குச் சென்றுவிடுவோம். கடுமையான உழைப்பைச் செலுத்தும் எங்கள் மகளிருக்கு உரிய மரியாதை கிடையாது. மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தந்தை பெரியார் பெண்களுக்காகப் போராடியதால், தமிழ்நாட்டு மகளிர் நல்ல நிலையில் இருப்பதை அறிகிறேன்.
வீரமணிஜி எங்களுக்கு வழிகாட்டுங்கள்!
மும்பை மாநாட்டிற்குத் தமிழ்நாட்டில் இருந்து அதிகமான மகளிர் வந்திருப்பதைப் பார்த்துப் பூரிப்படைகிறேன். ஆனால் இந்தியாவின் நிலை என்ன? இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட அனைத்துப் புராணங்களிலும் பெண்களைக் கேவலமாகச் சித்தரித்துள்ளனர். கடவுள் என்கிற ஒருவர் இருந்தால், பெண்கள் படும் வேதனைகளைப் போக்க வேண்டாமா? வீரமணிஜி அவர்களே, இனி நீங்கள் தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்; பெரியாரின் நூல்களை எல்லாம் நாங்கள் மராத்தியில் மொழிபெயர்க்க ஆசைப்படுகிறோம். அதற்கு நீங்கள் உதவ வேண்டும்”, என மிகச் சிறந்த உரையை வழங்கினார்.
இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி!
தொடர்ந்து மும்பைத் திராவிடர் கழகப் பொருளாளர் பெரியார் பாலா பேசினார். இவரது இயற்பெயர் பாலாஜி. கொள்கையை அறிந்த பிறகு பெயருக்குப் பின்னால் “பெரியார்” என்பதைச் சேர்த்துக் கொண்டார். கொள்கை மேலும் வலுவான பிறகு பாலாஜி என்பது கடவுள் பெயர், எனவே பாலா என்பதோடு சுருக்கிக் கொண்டார். தமிழ்நாட்டில் சிலர் புதிதாக ‘ஜி’ போட்டு பேசி வரும் வேளையில், மும்பையில் இருப்பவர் தன் பெயரில் உள்ள ‘ஜி’ என்கிற எழுத்தையே எடுத்துவிட்டார்.
அவர் மராத்தி மொழி மாநாட்டில் பேசும்போது, “வாகனங்களுக்குப் பதிவு எண் வாங்குகிற போது முன்பு MH (Maharashtra) என்று கொடுப்பார்கள். இப்போது BH (Bharath) என்று கொடுக்கிறார்கள். எங்களின் MH என்கிற அடையாளமே போய்விட்டது. இதேபோலத்தான் ஒரே நாடு, ஒரே வாக்கு, ஒரே மொழி, அதுவும் ஹிந்தி எனக் கொண்டு வரப் பார்க்கிறார்கள். இந்தக் கருத்துகளைத் தான் தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அனைத்து மாநிலங்களுக்குமே உரிமை வேண்டும், சமத்துவம் வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் கோரிக்கை!
வி.பி.சிங் குடும்பத்தின் நெகிழ்ச்சி!
இட ஒதுக்கீட்டிற்காகக் கடுமையாகப் போராடியது தமிழ்நாடு. குறிப்பாக வீரமணி சார் பல்வேறு மாநாடுகள், பிரச்சாரங்களைச் செய்து இந்தியாவிற்கே இட ஒதுக்கீடு கிடைக்கக் காரணமாய் இருந்தார். அதை நடைமுறை செய்த ஒரே காரணத்திற்காகத் தம் பதவியையே துறந்தார் வி.பி.சிங். அப்பேற்பட்ட தலைவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிலை ஒன்றைத் திறந்து வைத்தார். அந்நிகழ்வில் கலந்து கொண்ட வி.பி.சிங் குடும்பத்தார், “இட ஒதுக்கீட்டு முறையால் இந்தியாவே பயன் பெற்று வருகிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தான் வி.பி.சிங் அவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறது” எனக் கூறினார்கள்.
பாதுகாப்பு அரண் திராவிடர் கழகம்!
தந்தை பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் செல்ல வலுவான அமைப்பாகத் திராவிடர் கழகம் இருக்கிறது. அதன் தலைவராக வீரமணி சார் இருக்கிறார்கள். ஆனால் பெரியார் போல இங்கே வாழ்ந்த சமூகநீதித் தலைவர்களின் அத்தனைப் பிள்ளைகளும், அவர்களின் வாரிசுகளும் பாஜகவில் இணைந்துவிட்டார்கள். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) எனும் திட்டம் வந்தபோது முதல் எதிர்ப்புக் குரல் திராவிடர் கழகத்தில் இருந்து தான் வந்தது. வீரமணி சார் கடுமையாக எதிர்த்ததுடன், விரிவான விளக்கத்துடன் அறிக்கையும் கொடுத்தார்கள். மற்ற மாநிலங்களில் எந்த எதிர்ப்பும் இல்லை. அந்தத் திட்டம் தங்களை எப்படிப் பாதிக்கிறது என்பதே தெரியாமல் இருந்தார்கள்.
அதேபோல விஸ்வகர்மா யோஜனா திட்டம் வந்த போது இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் ஆதரித்தார்கள். சுயதொழிலுக்கு ஒன்றிய அரசு கடன் கொடுப்பதாக நினைத்தார்கள். ஆனால் வீரமணி சார் தமிழ்நாட்டில் இதைக் கடுமையாக எதிர்த்தார். அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி போராட்டம் செய்தார். இப்படி தமிழ்நாட்டைப் பாதிக்கும் ஒவ்வொரு திட்டங்களையும் கண்டறிந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாப்பு அரணாக இருப்பது திராவிடர் கழகம், அதன் தலைவர் வீரமணி சார். இதுபோன்ற அமைப்பும், தலைவரும் அனைத்து மாநிலங்களுக்கும் இல்லையே என்பது எங்கள் எதிர்பார்ப்பு”, எனப் பெரியார் பாலா பேசினார்.
நிறைவடைந்த
மும்மொழி மாநாடு!
மராத்திய மக்களுக்குப் புரியும் வண்ணம் ‘வீரமணி சார்’ எனக் குறிப்பிட்டுப் பேசினார். இட ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான திட்டம் (EWS), விஸ்வகர்மா யோஜனா என ஒவ்வொரு திட்டங்களின் பெயரையும் குறிப்பிட்டு, அதற்கு வீரமணி சார் என்ன செய்தார்கள், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது, பிற மாநிலங்களில் என்ன நடக்கிறது என மிக அழகாக ஒப்பிட்டுப் பேசினார். அவர் பயன்படுத்திய மொழியை விட, அவர் வெளிப்படுத்திய உணர்வு அனைவருக்குள்ளும் ஊடுருவிச் சென்றுவிட்டது. அதனால் அவரது பேச்சும் எளிதில் புரிந்து, பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆக மும்மொழிகளில், இரண்டு நாள் மாநாடு இனிதே முடிவடைந்தது. இரவு உணவு முடித்து, தோழர்களும் ஓய்விற்குச் சென்றுவிட்டனர். அடுத்த நாள் அனைவரும் தமிழ்நாடு திரும்ப வேண்டும். ஆனால் யாருமே புறப்படவில்லை. என்ன காரணமாக இருக்கும்?
(தொடரும்)
