திஸ்பூர், ஜன.11 இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா (சர்மா)வின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓவைசியின் விருப்பம்: மராட்டிய மாநில உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சோலாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஏ.அய்.எம்.அய்.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சம உரிமை அளிக்கிறது. ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார்” என்று விருப்பம் தெரிவித்தார்.
ஹிமந்தா பிஸ்வா (சர்மா) கருத்து: ஓவைசியின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா (சர்மா) கூறியதாவது:
“அரசியலமைப்புச் சட்டத்தின் படி இந்தியாவில் யார் வேண்டு மானாலும் பிரதமராக முடியும், அதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால், இந்தியா ஒரு இந்து நாடு மற்றும் இந்து நாகரிகத்தைக் கொண்டது. எனவே, இந்தியப் பிரதமர் எப்போதும் ஒரு இந்து வாகவே இருப்பார் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
ஒரு தரப்பு ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வருவார் என எதிர்பார்க்கும் நிலையில், அதற்கு நேர்மாறாக ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ள இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
