மாண்பமை துணைக் குடியரசு தலைவரின் சிந்தனைக்கு!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டில்லியில் நடைபெற்ற மூன்றாவது பன்னாட்டு இந்திய மொழிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்து மாண்பமை குடியரசு துணைத் தலைவர் சி.பி.இராதா கிருஷ்ணன் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது: ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை, நாட்டின் பலதரப்பட்ட மொழிகளை அங்கீகரித்து, கவுரவிக்கிறது. இது நமது தேசத்தின் பண்டைய ஞானத்தைப் பிரதிபலிக்கிறது.

நாட்டின் ஒற்றுமை என்பது அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில் இல்லை; மாறாக, ஒருவருக்கொருவா் காட்டும்  மரியாதையில்தான் உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தனது தாய்மொழியில் சிந்தித்துச் செயல்படும்போதுதான் உண்மையான ஜனநாயகம் மலரும். மாநிலங்களவைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, நான் வழிநடத்திய முதல் கூட்டத்தொடரிலேயே பல உறுப்பினர்கள் தங்களின் தாய்மொழியில் உரையாற்றியதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். இதுவே நமது ஜனநாயகத்தின் உண்மையான வலிமை.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது!

இந்தியா முழுவதும் பல்வேறு  மாநிலங்களில் இருந்தும் குறிப்பாக, ஹிந்தி பேசாத மாநிலங்களில் இருந்தும் விருந்தினர்கள் வருகை தந்த போதிலும் பொது மொழியான ஆங்கிலத்தை புறக்கணித்து ஹிந்தியில் நிகழ்ச்சி நிரலையும் பதாகையையும் வரவேற்பு உரையையும் ஹிந்தியில் மட்டுமே அச்சடித்து தந்தது எதற்கு?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஆங்கிலம் இடம் பெறாவிட்டாலும் அலுவல் மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

காரணம், இந்தியாவில் அனைவருக்கும் பொதுவான மொழியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் ஹிந்தியோடு ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கிறது.

பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் ஒன்றிய அரசு அறிவிக்கும் திட்டங்களின் பெயர்கள் எல்லாம் ஹிந்தி, சமஸ்கிருதத்தில்தான் இருந்து வருவது ஏன்?

எட்டாவது அட்டவணையில் இடம் பெற்ற மொழிகளை சமப் பார்வையில் ஒன்றிய பிஜேபி அரசு  ஓர்ந்து கண்ணோடாது பார்க்கிறதா?

குடியரசு துணைத் தலைவராக இருக்கும் மாண்பமை சி.பி.இராதா கிருஷ்ணன் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் – தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர் – அவருக்கு 541 ஆவது திருக்குறள் தெரிந்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

‘‘ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.’’

என்பதுதான் அந்தக் குறள். இக்குறள் செங்கோன்மை அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளதாகும்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் குடியரசு  துணைத் தலைவர் இதனைப் புரிந்து கொண்டிருக்கக் கூடும்.

குற்றத்தை ஆராய்ந்து எவரிடத்திலும் பாரபட்சம் காட்டாமல் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டியதை இக்குறள் வலியுறுத்துகிறது.

அதன்படிப் பார்த்தால் குடியரசு துணைத் தலைவர் தம் பேச்சில் குறிப்பிட்ட அரசியலமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட 22 மொழிகளை  சமப் பார்வையுடன் பார்க்கிறதா – அணுகுகிறதா ஒன்றிய பிஜேபி அரசு என்பது பொருள் பொதிந்த வினாவாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 0.002 விழுக்காடு மட்டும் பேசப்படும் சமஸ்கிருத மொழிக்கு அளிக்கப்பட்ட நிதி ரூ.2,532 கோடி. அதே நேரத்தில் உலகளவில் 8 கோடி மக்களும், தமிழ்நாடு அளவில் 7.2 கோடி மக்களும் பேசும் தமிழ்மொழிக்கு அளிக்கப்பட்ட நிதி ரூ.120 கோடி மட்டுமே!

இதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்ற அனைத்து மொழிகளையும் மதிக்கும் இலட்சணமா என்ற கேள்வி எழத்தானே செய்யும்! தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு 2006ஆம் ஆண்டிலேயே தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியும், இந்நாள் வரை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் உத்தரப்பிரதேசம் (1969), பீகார் (1972), ராஜஸ்தான் (1950), மத்தியப்பிரதேசம் (1971) ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாண்பமைக் குடியரசு துணைத் தலைவர் தமிழர் என்பதால் தம் செல்வாக்கைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வருவதற்கு ஆவன செய்தால், டில்லியில் அவர் ஆற்றிய உரைக்கு அர்த்தம் இருக்கும்  – செய்வாரா? எங்கே பார்ப்போம்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *