பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உரை!

10 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மீண்டும் மனு தர்மத்திற்கு அடிமையாக வேண்டுமா?
எக்காரணத்தைக் கொண்டும் கொள்கை எதிரிகள்
தேர்தலில் வெற்றி பெற்று விடக்கூடாது, எச்சரிக்கை தேவை!
கம்பம், தேனி பகுதிகளில் கழகத் தலைவர் ஆசிரியர்

கம்பம், ஜன.12 ”திராவிடர் இயக்கம் தனது கருத்தைச் சொல்லி மக்களை சுதந்திரமாக சிந்திக்க வைத்திருக்கிறது” என்றும், ‘‘இந்தியா என்பது இந்து நாடு. இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளிப்படையாக பேசுகிறார். அதற்கு இடம் கொடுக்கப் போகிறோமா?” என்றும் கம்பம், தேனி பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கழகத் தலைவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் படி உரையாற்றினார்.

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். –
இதுதான் பா.ஜ.க.ஆட்சி; இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல் ஆட்சி’’

சென்னை மறைமலை நகரில் நடைபெற்ற, “சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழ்நாடு அரசு முதலமைச்சர் முன்னிலையில், ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – இதுதான் பா.ஜ.க.ஆட்சி; இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று 90 கூட்டங்களில் பேசப்போகிறேன்” என்று ஒரு பிரகடனம் போல, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார். அதன்படியே ஆலங்குடி தொடங்கி இன்றைய தேதியில் 25 கூட்டங்களுக்கு மேல், ஒரே மூச்சில் பேசி முடித்து விட்டார். ஓயாத அலைகள் போல 93 வயது காணும் கழகத் தலைவரின் பயணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் நேற்று (11.1.2026) மாலை 6 மணியளவில் கம்பம் பார்க் திடலில் உள்ள கலையரங்கத்தில் பரப்புரை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கழகப் பொதுக்குழு உறுப்பினர் டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனன் தலைமையில் மாவட்டச் செயலாளர் ப.செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார். மாவட்டத் தலைவர் வெ.தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பி னர் வி.பாஸ்கரன், மாவட்டக் காப்பாளர் கருப்புச் சட்டை நடராசன், மார்க்சிஸ்ட் கட்சித் தோழர் லெனின், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். சுற்றுப்பயண ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார் மேடை ஒருங்கிணைப்பையும், இரா.குணசேகரன் கழகப் புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினர். கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தொடக்க உரையாற்றினார்.

பெரியார் உலகத்திற்கு
நிதியளிப்பு!

கூட்டத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று சங்கிகள் சிலர் காவல் நிலையத்தில் புகார் கடிதம் கொடுத்திருந்தால் 25–க்கும் மேற்பட்ட காவலர்கள் நான்கு சாலைகளும் சந்திக்கும் இடமாக இருப்பதால் நான்கு முனைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். ஆசிரியர் மேடைக்கு வருகை தந்த போது எழுச்சிகரமான கொள்கை ஒலி முழக்கங்கள் அரங்கை அதிரச் செய்தது. ஆசிரியர் மேடையேறியதிலிருந்து வரிசையாக இந்தியா கூட்டணிக் கட்சிப் பொறுப்பா ளர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் என்று வரிசை யாக மேடையேறி அவருக்கு மரியாதை செய்தனர். ஆசிரியர் அவர்கள் அனைவரது மரியாதையையும் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பெரியார் உலகம் நிதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கழகத் தலைவர் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

அவர்  தமதுரையில், பெரியார் உலகம் பற்றி சிறிது விவரித்துவிட்டு, அதற்காக நிதி அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். தலைப்புக்குள் சென்ற அவர், ஆர்.எஸ்.எஸ். பற்றி குறிப்பிட முதலில் மனுஸ்மிருதியை குறித்து பேசினார். அது எப்படி எல்லாம் நம்மை கூறுபோட்டு வைத்திருந்தது என்பதைச் சொல்லிவிட்டு, “மனு தர்மத்துடன் உள்ளே நுழைந்தது ஆரியம்; அதை விரட்டி அடித்தது தான் திராவிடம்” என்று அதன் சாரத்தை பிழிந்து கொடுத்தார். மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு சுலோகத்தைச் சொன்னார். அதாவது, “பிராமணன், சத்ரியன், வைசியன் என்று இந்த மூன்று வர்ணத்தாருக்கும் பொறாமையின்றி சூத்திரன் சேகவம் செய்வதுதான் அவன் தர்மம்” என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, நமது சமூகம் திராவிடர் இயக்கம் தோன்றுவதற்கு முன்பு எப்படி இருந்தது என்பதை பளிச்சென்று மனதில் பதிய வைத்தார்.

சமூக நீதி நாள் – சமத்துவ நாள் –
சமத்துவப் பொங்கல்!

தொடர்ந்து பேசிய அவர், “தப்பித் தவறி கூட பா.ஜ.க. தமிழ்நாட்டில் வந்துவிட்டால் நாம் பழையபடி மனு தர்மத்திற்கு அடிமையாகத்தான் இருக்க நேரி டும்” என்று எச்சரித்தார்.  “இந்த சிக்கல்களுக்குத் தீர்வாகத்தான் திராவிடர் இயக்கம் மக்களிடம் தனது கொள்கைகளைச் சொல்லிச் சொல்லி அவர்களை சுதந்திரமாக சிந்திக்க வைத்திருக்கிறது” என்று சொல்லி இன்னொருவர் புத்திமதி மக்களுக்குத் தேவை யில்லை. அவர்களே ஆர்.எஸ்.எஸ்.சின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுமளவுக்கு சிந்திக்கும் வாய்ப்பை பெற்றிருப்பதை நினைவுபடுத்தினார். திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் இன்றைய முதலமைச்சர் சமூக நீதி நாள் – சமத்துவ நாள் – சமத்துவப் பொங்கல் என்று கொண்டாடி வருகிறார்” என்று திராவிடர் இயக்கத்தின் கொள்கை மாறாத வழித்தடத்தை நிறுவினார். தொடர்ந்து ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பட்டியிலிட்டு, திராவிட மாடல் ஆட்சி வேண்டுமா? ஆர்.எஸ்.எஸ். மாடல் ஆட்சி வேண்டுமா? என்ற சிந்தனையை மக்களுக்குள் விதைத்தார். தொடர்ந்து, “ஆகவே, 2026 இல் மறுபடியும் திராவிட மாடல் அரசுதான் வரவேண்டும் என்று சொல்வது தி.மு.க.வுக்காக அல்ல; எங்களுக்காக அல்ல; உங்களுக்காக; உங்களின் சந்ததிகளின் கல்விக்காக; மான வாழ்வுக்காக” என்று சொல்லி, அனைவரும் வாக்குகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து உரையை நிறைவு செய்தார். அந்த இடம் நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாதலால் ஏராளமான மக்கள் வெகு தூரம் வரையிலும் நின்று கேட்டுக்கொண்டிருந்தனர். பிறகு தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தேனியை நோக்கி தனது பரப்புரை பயணக் குழுவினரோடு புறப்பட்டார். நிறைவாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.முத்தழகன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார்.

பங்கேற்ற தோழர்கள்

தி.மு.க. தோழர்களான கம்பம் வடக்கு நகரச் செயலாளர் ஜெயக்குமார், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இரா.பாண்டியன், கம்பம் தெற்கு நகரச் செயலாளர் பால்பாண்டி ராஜா, திராவிடர் கழகத் தோழர்களான மாவட்ட துணைத் தலைவர் க.சிவா, என்.டி.பட்டி மணிகண்டன், மாவட்ட மகளிர் அணித் தலைவர் சுமிலா, மாவட்ட மாணவர் கழகத் தோழர் தமிழ்வாணன், கூடலூர் நகரச் செயலாளர் க.பா.நாகராசு, என்.டி.பட்டி தோழர் சகா, மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன், கம்பம் ஒன்றிய செயலாளர் ஒ.மகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பா.முகிலன், கே.கே.பட்டி ம.நாகராசு, சுருளிப்பட்டி கிளைத் தலைவர் பா.ஆண்டிச்சாமி, கே.கே.பட்டி கிளைத் தலைவர் சி.முருகன், கே.கே.பட்டி கிளைச் செயலாளர் அழகேசன், கே.ஜி.பட்டி கிளைச் செயலாளர் செல்வம், கே.கே.பட்டி தோழர்கள் ரா.ஜெயா, ரெங்கேஸ்வரன், மாணவர் கழகத் தோழர் சி.தமிழ் இலக்கியா, கூடலூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் மலைச்சாமி மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரண்டு வந்து கருத்துகளை செவிமடுத்துச் சென்றனர்.

தேனியில் இரண்டாம் பொதுக்கூட்டம்

இதே தலைப்பில் இரண்டாம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான தேனி பங்களாமேடு பகுதி, நகரத்தின் முதன்மைச் சாலையோரம் இருந்தது. ஏராள மான கொடிகளும், பதாகைகளும் நிகழ்ச்சிக்கான கட்டியம் கூறிக்கொண்டிருந்தன. கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி பேசிக்கொண்டிருக்கும் போது, கழகத் தலைவர் நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். மிகுந்த உற்சாகத்துடன் மாவட்டத் தோழர்கள் எழுச்சிகரமான வரவேற்பை தலைவருக்கு நல்கினர். அனைவரின் வரவேற்போடு கழகத் தலைவர் மேடையேறினார்.

கழகத் தலைவரின் சுற்றுப்பயணம்
நிச்சயம் வெற்றி பெறும்:
– தங்க.தமிழ்ச்செல்வன்!

முன்னதாகவே தொடங்கி நடந்து கொண்டிருந்த இக்கூட்டத்திற்கு ஆசிரியர் வருகைக்குப் பின், மாவட்டக் காப்பாளர் ச.இரகுநாகநாதன் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பூ.மணிகண்டன் வரவேற்பை முன்னதாகவே வழங்கியிருந்தார். மேடை ஒருங்கிணைப்பை மாவட்டத் தலைவர் ம.சுருளிராஜ் மேற்கொண்டிருந்தார். தி.மு.க. தேனி நகரச் செயலாளர் நாராயண பாண்டியன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் சர்புதீன், ஆதித் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் முல்லை அழகர், திராவிடப் புரட்சி கழகப் பொறுப்பாளர் தலித் ராயன், வி.சி.க.மாவட்டச் செயலாளர் சுசி தமிழ் பாண்டியன், சி.பி.அய்.மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்குமார், எஸ்.டி.பி.அய். முகமது சமூக ரஸ்ஸல் பேரவை அபூபக்கர், சி.பி.எம்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர். தி.மு.க. மாவட்டச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பி னருமான தங்க. தமிழ்ச்செல்வன், கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் நிச்சயம் வெற்றி பெறும் என்று வாழ்த்துரை வழங்கி உரையாற்றினார்.

மாவட்டக் கழகத் துணைத் தலைவர் ஆண்டிப்பட்டி ஸ்டார் சா.நாகராசன், பொதுக்குழு உறுப்பினர்கள் பேபி சாந்தா தேவி, அன்புக்கரசன், மாவட்ட துணைச் செயலாளர் லோ.முத்துசாமி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் செ.கண்ணன், வெற்றித் தமிழர் பேரவை மாவட்டத் தலைவர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சகோதரர் மணி கார்த்திக்,  மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். பயண ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார் மேடை நிகழ்வையும், இரா.குணசேகரன் இயக்கப் புத்தகங்களை அறிமுகம் செய்து உரையாற்றி மக்களை புத்தகங்களை வாங்கி பயன்பெறும்படி வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

தொடர்ந்து கழகத் தலைவருக்கு அனைத்துக் கட்சித் தோழர்களும், கழகத் தோழர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பிலும் மரியாதை செய்யப்பட்டது. கழகத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வீரபாண்டி பேரூராட்சி செயலாளர் கீதா சசி அம்மையார் ஆகியோருக்கு மரியாதை செய்தார். தொடர்ந்து பெரியார் உல கத்திற்கான நிதியளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் ஒழுங்க மைத்தார். பின்னர் கழகத் தலைவர் உரையாற்றினார்.

கழகத் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தனது உரையில், பெரியார் உலகத்தை தொட்டுக்காட்டி விட்டு, நிதி அளித்தவர்களுக்கு தலை தாழ்ந்த நன்றிகளை தெரிவித்தார். தொடர்ந்து, திராவிடர் இயக்கம் செய்த சாதனைகளை 100 ஆண்டுகளில் தலைகீழ் மாற்றங்களை செய்திருப்பதை அறிவுப்புரட்சி, கருத்துப் புரட்சி என்றெல்லாம் வரு ணித்து, அந்தப்புரட்சி ஒரு துளி ரத்தம் சிந்தாமல், ஆயுதம் ஏந்தாமல் நடந்த அறிவுப்புரட்சி என்று குறிப்பிட்டார். மேலும் அவர், ‘‘நாங்கள் எதற்காக நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று இப்படி பிரச்சாரம் செய்து வருகிறோம்? என்று கேட்டுவிட்டு, “படித்தவர்களே கூட அதிக வட்டி கிடைக்கிறது என்பதற்காக நிதி முதலீடு செய்து, பின்னர் நிதி இழந்தோர் சங்கம் வைக்கிறார்கள். அதுகூட முக்கியமில்லை. மக்கள் மதி இழந்தோர் சங்கம் வைத்துவிடக்கூடாது” என்று சொன்னதும் மக்கள் சிந்தித்தவாறே சிரித்தனர். தொடர்ந்து, “அப்படி தேர்தலில் நாம் ஏமாந்து விடக்கூடாது என்றுதான் நாங்கள் இப்படி நாடு முழு வதும் பிரச்சாரம் செய்து வருகிறோம்” என்று சொல்லி, முன்னர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

திராவிடர் கழகம்

திராவிடர் இயக்கம் செய்த சாதனை;
தந்தை பெரியார் செய்த சாதனை!

மேலும் அவர், “ஏன் பிரச்சாரம் செய்கிறோம்?” என்று மறுபடியும் கேட்டு, “எக்காரணத்தைக் கொண்டும் நம் கொள்கை எதிரிகள் வெற்றி பெற்றுவிடக்கூடாது” என்று அழுத்திச் சொன்னார். மக்கள் உணர்ச்சிவசப்பட்டு தம்மை மறந்து கைதட்டினர். அந்தக் கொள்கை எதிரிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சொல்ல வந்தவர், “எதைக்கொடுத்தாலும் கீழ் ஜாதிக்காரனுக்கு கல்வியைக் கொடுக்கக் கூடாது என்கிறது இந்த மனுதர்மம்” என்று அசல் மனுதர்மம் புத்தகத்தை எடுத்துக் காட்டினார். புத்தகத்தைக் காட்டியதும் ஆசிரியர் சொன்ன கருத்துக்கு அதிக வலிமை சேர்த்தது. “அதை தலைகீழாக மாற்றிக் காட்டியது தான் திராவிடர் இயக்கம் செய்த சாதனை; தந்தை பெரியார் செய்த சாதனை” என்று ஆசிரியர் தொடர்ந்ததும் மக்கள் அதை அங்கீகரித்து கைதட்டினர். மேலும் அவர், “இதை சட்டபூர்வமாக்கியவர் புரட்சியாளர் அம்பேத்கர்” என்று சொல்லி, இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை எடுத்துக்காட்டினார். மக்களின் கைதட்டல் தொடர்ந்தது.

மதவெறியர்களின் வாலை
தமிழ்நாடு ஒட்ட நறுக்கிவிடும்!

அடுத்து, நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று சமூகம், அரசியல் தளங்களில் திராவிடர் இயக்கம் செய்த மகத்தான சாதனைகளை பட்டியலிட்டார். அதற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளையும் சுட்டிக்காட்டி, தற்போது பா.ஜ.க. அரசு அமைப்புகளை கையில் வைத்துக்கொண்டு, கூட்டணிக்கு வருவதற்காக மிரட்டிக் கொண்டிருப்பதையும் எடுத்துரைத்து, அதற்கு அடிமையாகி விட்ட அ.தி.மு.க.வையும் ஒரு பிடி பிடித்தார். ‘‘லேடியா? மோடியா?’’ என்று முன்னாள் முதலமைச்சர் கேட்டதையும் உதாரணமாக்கினார். ஓட்டுத்திருட்டு மூலம் ஆட்சியைத் திருடுவது, பீகார் போல தமிழ்நாட்டில் நடைபெறாது என்பதையும் சுட்டிக்காட்டி, “மதவெறியர்களின் வாலை தமிழ்நாடு ஒட்ட நறுக்கிவிடும்” என்றும் எச்சரித்தார். ‘‘தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மாடல் கஜகர்ணம் போட்டாலும் தேறாது” என்றும் சவால் விட்டார்.  ’’திராவிட மாடல் அரசு அமைய வேண்டும் என்று நாங்கள் சொல்வதற்குக் காரணம், தமிழன் மானத்தோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான்” என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக போடிநாயக்கனூர் நகரத் தலைவர் பெரியார் லெனின் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார். பிறகு, கழகத் தலைவர் தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தனது முகாம் அலுவலகம் சென்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *