சித்தார்த்தனின் பெரும் பணி முடிவுற்றதா! பிரிவாற்றா நிலையில் வீர வணக்கம்! வீர வணக்கம்!!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இன்று காலை (10.1.2026) மதுரைக்குச் சென்ற நான், ‘திராவிட இயக்கப் போர்வாள்’ சகோதரர் மானமிகு வைகோ அவர்களை, அவரது சமத்துவ நடைப் பயணத்தில் நேரில் சந்தித்து, வாழ்த்துக் கூறி, அதில் ஒரு சிறு பங்கேற்பும் பெற்ற மகிழ்ச்சியோடு மதுரை தங்கும் விடுதிக்கு வந்த சில மணித்துளிகள் –  மகிழ்ச்சி பொங்க நடைப்பயண நிகழ்வுகள்பற்றி கழகப் பொறுப்பாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது வந்த செய்தி கேட்டு, நன்கு சுவைத்த யாழ் இசையின் நடுவே –  யாழின் நரம்பறுந்து, இசை நின்று, யாழும் செயலற்றுப் போனதே என்று அதிர்ச்சியுடன், கலங்கிய கண்களும், நடுங்கிய அவயங்களும் ஒரு கண நேரம் மூச்சே நின்று விடுவது போன்ற மின்னல் இடிக்கு ஆளானோம்!

கொடுமை! கொடுமையிலும் கொடுமை!

திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் – தொண்டறம் புரிந்த நம் கொள்கைக் குடும்பத்தின் சீரிய வழக்குரைஞர் தோழர் மு.சித்தார்த்தன் (வயது 54) அவர்கள், மதுரையில் வைகோ நடைப்பயணத்தில் என்னைச் சந்திக்க வந்தபோது, விபத்து ஏற்பட்டு, அங்கேயே உயிர் பிரிந்தார் என்ற செய்தியை, என்னிடத்தில் முழுமையாக உடனே தெரிவிக்காமல், மெல்ல, மெல்ல, விபத்து நடந்தது என்றும், பின்னர் சீரியஸ் ஆக இருக்கிறார் என்றும் பல பகுதிகள் போலக் கூறி பிறகு முடிவெய்தினார் என்று சொன்ன செய்தி கேட்ட அதிர்ச்சியிலிருந்து நம்மால் இன்னமும்கூட வெளியே வர இயலவில்லை.

மதுரையில் வழக்குரைஞர் தோழர் கணேசன் என்னைச் சந்தித்தபோது, “சித்தார்த்தன் வரவில்லையா?’’ என்று கேட்டபோது, “சந்திப்பதாகச் சொன்னார் – அவர் வருவார்” என்றார்!

ஆனால் ‘‘இயற்கையின் கோணல் புத்தி’’ கோலோச்சியதன் காரணமாக,  மதுரை அரசு மருத்துவமனைக்கு நான் சென்று, அவரது உடலைத் தான் பார்க்க நேரிட்டது மிகவும் கெடுவாய்ப்பல்லவா?

அவரது துணைவியார், குடும்பத்தினர் ஆகியோருக்கு நான் ஆறுதல் கூறுவதா? அல்லது எனக்கும், நம் அனைவருக்கும் அவர்கள் ஆறுதல் கூறுவதா என்று புரியாத நிலையில் கனத்த இதயத்தோடு,

யார் யாருக்கு ஆறுதல் கூறுவது?

வேதனை, வேதனை, வெந்தணலில் வேகும்வரை விடுபட முடியாத துயரம், துன்பம்!

அவரை – நாம் வளர்த்த நமது வழக்குரைஞர் பிள்ளையை, திருச்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு உடலாக மட்டும் வழி அனுப்பும் கொடுமையான கடமையைத் தோழர்களோடு செய்தோம்!

வாழ்க்கையின் நடைமுறையில் ஒரு யதார்த்தம் – மகிழ்ச்சியாக இருக்கும்போதே, அடுத்து சந்திக்கப் போகும் துயரத்தையும், சோகத்தையும் எதிர்கொள்ள, நாம் நம்மைத் தயார்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைக் காலம் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. கடந்த சில நாள்கள், பல நிகழ்வுகள் மும்பை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு உட்பட பல நிகழ்வுகளில் இயக்கத் தோழர்களின் கடமை உணர்வைப் பாராட்டி மகிழ்ந்த எனக்கு, இந்த அலையும் அடித்தது.

எது தவிர்க்க முடியாததோ அதை ஏற்றுக் கொள்வதுதான் பகுத்தறிவு – இல்லையா?

ஆறுதல் அடைவோம். உணர்வாக என்றும் நம் உள்ளத்தில் உறைந்த, நிறைந்த வழக்குரைஞர் (அரசு) பண்பு நிறைந்த சித்தார்த்தன் போன்ற பல ‘சித்தார்த்தர்களை’ உருவாக்க ஓய்வின்றி உழைப்போம்; அவரது இலக்குகளை நிறைவு செய்ய உறுதி ஏற்று, அவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.

அவரது குடும்பம் என்பது நமது குடும்பம் என்றும் துணை நின்று தொண்டறம் தொடர்வோம்.

வாழ்க சித்தார்த்தன் என்ற கொள்கைச் சுடர்!

பிரிவாற்றாத் தோழன்

 

 

தலைவர்,

10.1.2026      திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *