அலாஸ்கா, ஜன. 11– அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து அலாஸ்காவிற்குத் தனியாகச் சுற்றுலா சென்ற ஹரி என்ற இந்திய இளைஞர், கடும் பனிப்பொழிவுக்கு இடையே காணாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
டெக்ஸாஸில் வசித்து வரும் ஹரி, கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அலாஸ்காவிற்குத் தனிப்பயணமாகப் புறப்பட்டார். அங்குள்ள டெனாலி (Denali) பகுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்த அவர், டிசம்பர் 31ஆம் தேதி வரை தனது நண்பர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அன்றைய நாள் அவரது கைப்பேசி சிக்னல் கடைசியாகக் கிடைத்த நிலையில், அதன் பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
கடும் குளிர் மற்றும் சவால்கள்
ஹரி காணாமல் போன டிசம்பர் 31ஆம் தேதியன்று அலாஸ்காவில் வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் ஆகக் குறைந்துள்ளது. இவ்வளவு கடுமையான காலநிலையில் பொதுவாகப் பயணிகள் இந்தப் பகுதிக்கு வரமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. எனினும், சாகச விரும்பிகள் மற்றும் அபாயகரமான பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் இக்காலகட்டத்தில் வருவது வழக்கம் என்பதால், ஹரி அந்த நோக்கத்தில் சென்றாரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது.
தேடுதல் பணிகள்
ஹரியின் நண்பர்கள் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் அவரது ஒளிப்படத்துடன் கூடிய அறிவிக்கைகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், சமூக வலைதளங்கள் வாயிலாக உதவி கோரப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மோசமான வானிலை நிலவி வருவதால், மீட்புப் பணிகளில் சவால்கள் நீடித்து வருகின்றன. ஹரி ஏன் இவ்வளவு ஆபத்தான சூழலில் தனியாகப் பயணம் மேற்கொண்டார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
டிசிஎஸ் அய்டி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சென்னை, ஜன.11- . டிசிஎஸ் அய்டி நிறுவனத்தில் தற்போது TCS Atlas hirng batch 2026 என்ற பெயரில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த அறிவிப்பு என்பது நிறுவனத்தில் டேட்டா சயின்ஸ், அனலிட்டிக்ஸ் மற்றும் பிசினஸ் கன்சல்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு 2026ஆம் ஆண்டில் எம்.எஸ்சி., எம்.ஏ. பாடப்பிரிவுகளில் கணிதம், Statistics அல்லது Economics படிப்புகளை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு 10, பிளஸ் 2, டிப்ளமோ, கல்லூரி படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண் இருக்க வேண்டும். கல்லூரி படிப்பை முழுநேரமாக படித்திருக்க வேண்டும். தொலைதூர கல்வியில் படிப்பை முடித்தவர்களுக்கு அனுமதி கிடையாது.
விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு அரியர் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதனையும் பணிக்கு சேரும் முன்பாக முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான ஊதியம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட நேர்முகத் தேர்வின்போது தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) ஆகும். ஒவ்வொருவரும் TCS NextStep Portal வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதில் IT Category-யை தேர்வு செய்து பிற விவரங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கான தேர்வு மய்யத்தையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பிறகு டிசிஎஸ் சொல்லும் நாளில் அந்த குறிப்பிட்ட மய்யத்துக்கு சென்று தேர்வு எழுத வேண்டும்.
ஏதாவது உதவி வேண்டும் என்றால் டிசிஎஸ் ஹெல்ப் டெஸ்க்கை தொடர்பு கொண்டு பேசலாம். அதன்படி [email protected] அல்லது 18002093111 என்ற டோல்ப்ரீ எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். மேலும் தேர்வு என்பது 115 நிமிடங்கள் வரை நடக்கும். Statistics, Mathematics, Economics, Programming, Verbal Ability என்ற 5 வகையில் இருக்கும். மேலும் இதுதொடர்பான பழைய கேள்விகள் யூடியூப் சேனல்களில் உள்ளன. அதனை பார்த்து கொண்டால் விண்ணப்பதாரர்களுக்கு கேள்வி தொடர்பான விளக்கங்கள் கிடைக்கும்.
மேலும் தற்போதைய அறிவிப்பில் பணிக்கு தேர்வாகும் நபர்கள் எங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசியில் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் டிசிஎஸ் நிறுவனம் உள்ளதால் அங்கு கூட பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்.
