சென்னை, ஜன.11– அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளோருக்கான பொங்கல் பரிசுத் தொகையாக 10.1.2026 அன்று காலை 10 மணி வரை ரூ.3348.59 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 24,924 ரேசன் கடைகளில் உள்ள 1.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,348.59 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000/- வழங்கப்படும்” எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8.1.2026 அன்று சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார். மேலும், துணை முதலமைச்சர் சென்னை, சிந்தாதரிப்பேட்டை டியூசிஎஸ் நியாய விலைகடையிலும், அந்தந்த மாவட்டத்தில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 04.01.2026 முதல் 07.01.2026 வரை தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் வழங்கப்பட்டது.
இதில், முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், இரண்டாம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. 10.1.2026 அன்று காலை 10 மணி வரை 24,924 நியாயவிலை கடைகளில் உள்ள 1,11,61,979 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை 3348.59 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது”.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அய்-பேக் சோதனை விவகாரம்
உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை முறையீடு
மேற்கு வங்க அரசு ‘கேவியட்’ மனு!

புதுடில்லி, ஜன. 11– மேற்கு வங்கத்தில் தேர்தல் வியூக நிறுவனமான ‘அய்-பேக்’ (I-PAC) அலுவலகத்தில் நடந்த சோதனையை முதலமைச்சர் மம்தா தடுத்ததாகக் கூறி, அமலாக்கத் துறை (ED) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு எதிராக மேற்கு வங்க அரசு கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளதால் இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன?
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அய்-பேக் நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. நிலக்கரி ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், கொல்கத்தாவில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் தலைவர் பிரதீக் ஜெயின் இல்லத்தில் அமலாக்கத் துறை சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது.
சோதனை நடந்த இடத்திற்கு முதலமைச்சர் மம்தா காவல்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்றதாகவும், அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகவும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டுகிறது. இது மத்திய விசாரணை முகமையின் பணியில் குறுக்கிடும் செயல் எனத் தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:
முதலமைச்சர் மம்தாவின் தலையீடு குறித்து சி.பி.அய். (CBI) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மாநில அரசின் தலையீட்டால் நியாயமான விசாரணை நடத்தும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அங்கு உடனடி நிவாரணம் கிடைக்காததால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
தற்போதைய நிலை
மறுபுறம், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தி, மேற்கு வங்க அரசு ‘கேவியட்’ மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த இரு மனுக்களும் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய இந்த சட்டப் போராட்டம் மேற்கு வங்க அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
