பதில் சொல்லுவாரா நீதிபதி?
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
– மின்சாரம்
“வயலூர் அர்ச்சகர்கள் பணி நீக்கம் – கருவறைத் தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா?” என்ற தலைப்பில்
– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்யம், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் (தமிழ்நாடு) சார்பில் சென்னை நிருபர்கள் சங்கக் கட்டடத்தில் கடந்த 15.4.2023 அன்று முற்பகல் கருத்தரங்கு நடைபெற்றது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்யத்தின் தலைவர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்ற அக்கருத்தரங்கில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் அக்கருத்தரங்கில் பங்கேற்றுக் கருத்துரை வழங்கினர்.
தந்தை பெரியார் அவர்கள் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதாகும்.
அன்றைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் –
“உங்கள் சீடர்கள் ஆட்சியில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், அய்யா அவர்களே, நீங்கள் போராட் டம் நடத்துவதா? தேவையில்லை; திமுக அரசே அதற்கான சட்டதைக் கொண்டு வரும் என்று கூறி, அவ்வாறே சட்டத்தையும் நிறைவேற்றிக் காட்டினார் (2.12.1970).
ஆதிக்க வெறி பிடித்த பார்ப்பனர்கள் வறிதே இருப்பார்களா? ஆணிவேரில் அல்லவா அய்யா தீயை வைத்தார்.
அவாளுக்கு என்றே இருக்கும் உச்சிக்குடுமி மன்றத்திற்குப் படை எடுத்தனர்.
“ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் டையிடு!” என்று விடுதலையில் எழுதியவாறு தீர்ப்பு அமைந்துவிட்டது.
அடுத்தக் கட்டப் போராட்டங்களை அறிவித்தார். சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அந்தப் போராட் டக் களத்திலேயே தந்தை பெரியார் உயிர் நீத்தார்.
“நெஞ்சில் தைத்த முள்ளோடு, அய்யா உங்களைப் புதைத்து விட்டோமே!” என்று முதலமைச்சர் கலைஞர் கதறினார்.
திராவிடர் கழகத்துக்குத் தலைமையேற்ற அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் இத்திசையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அஞ்சல் அலுவலகம் முன் மறியல், ஒன்றிய அமைச்சர்களுக்குக் கறுப்புக் கொடி என்று போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.
அம்மா மறைவிற்குப் பிறகு, ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் பல்வேறு முயற் சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. கோயில்கள் முன் வேண்டுகோள் – அறப்போராட்டங்களும் நடத் தப்பட்டன.
அதன் விளைவாக அய்யா நூற்றாண்டை ஒட்டி எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசால் நீதிபதி டாக்டர் எஸ்.மகராஜன் தலைமையில் இது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டது.
சுவாமிநாத குருக்கள், ஏ.விசுவநாத சிவாச்சாரியார், என்.ரெங்கராச பட்டர், மு.அருணாசலம், க.வச்சிரவேலு முதலியார், திருமுருக கிருபானந்த வாரியார், யு.சுப்பிரமணியன், ஜே.மு.முத்துசாமி பிள்ளை, ச.சுந்தரராஜ பட்டர், டி.என்.சாம்ப மூர்த்தி சிவாச்சாரியார், அ.வெ.ரா.கிருஷ்ணசாமி ரெட்டியார்.
இந்த ஆன்மிக சிரோன்மணிகள் எல்லாம் இக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். இன்னும் சொல்லப்போனால், இந்தக் குழு காஞ்சி சங்கராச் சாரியார் உள்படப் பலரையும் சந்தித்துக் கருத்தினைக் கேட்டது.
நீதிபதி டாக்டர் எஸ். மகராசன் குழுவின் பரிந்து ரையின் அடிப்படையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்த கருத்தை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேரில் சந்தித்துக் கடிதம் ஒன்றினையும் அளித்தார் (6.5.1983).
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான வழி முறைகள், பயிற்சிப் பள்ளிகள் குறித்து ஆலோசனை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி திரு என்.கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது (1984).
அ.ச.ஞானசம்பந்தம் உள்பட 11 பேர் அக்குழுவில் உறுப்பினர்களாக இருந்து கருத்துகள் வழங்கினர்.
தமிழில் உள்ள ஆகமங்கள் சமஸ்கிருதத்துக்கு முந்தியவை என்று நீதிபதி மகராசன் குழு அறிக்கை கூறுகிறது.
இந்த நிலையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் இரு கோயில்களில் பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர் ஆக்கப்பட்டனர்.
மதுரையை அடுத்த அய்யப்பன் கோயில் ஒன்றில் மாரிமுத்து என்ற பயிற்சி பெற்ற மாணவரும் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோயிலில் தியாகராஜன் என்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்.
தி.மு.க. ஆட்சயில் 2021 ஆகஸ்டு 14ஆம் தேதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற 28 மாணவர்கள் கோயில்களில் அர்ச்சகர்களாக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பணி நியமன ஆணை யைப் பெற்றனர் – இது ஒரு நல்ல திருப்பமான பொன்னெழுத்தாகும்.
இதில் 4 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்கள். பெண் ஓதுவார் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் திருச்சி குமார வயலூர் கோயிலில் அர்ச்சகர்களாக இருந்த இரு அர்ச்சகப் பார்ப்பனர்கள் தொடுத்த வழக்கில் இரு அர்ச்சகர்களை பணி நீக்கம் செய்து மதுரை அமர்வின் உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஜி.ஆர்.சாமிநாதன் 24.2.2023 அன்று தீர்ப்பளித்துள்ளார்.
இதன் மீது சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தான் 15.4.2023 அன்று சென்னை செய்தியாளர்கள் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பார்ப்பனர்களிலும் எல்லோரும் அர்ச்சகர் ஆக முடியாது. அதில் குறிப்பிட்ட பிரிவினர்தான் அர்ச்சக ராக முடியும் என்று நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் கூறி யுள்ளாரே!
அந்தப் பிரிவைச் சேர்ந்த பார்ப்பன அர்ச்சகர்களின் யோக்கியதைதான் என்ன?
நாம் சொல்லவில்லை. இந்திய அரசாங்கத்தால் சர்.சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப் பட்ட குழுவின் (1960-1962) அறிக்கை என்ன கூறுகிறது?
“படித்தவர்கள் குறைந்து, வடமொழி அறிவும், அவர்களுக்கு இல்லாதவர்களாய், பூஜை வெறும் சடங்காக மட்டும் ஆகி விட்டதே, தவிர அதில் திருத் தமோ, பொருளறிவோ, அடியோடு மறைந்து விட்டது. இதுபற்றி சர் சி.பி.இராமசாமி அய்யர் தலைமையில் இந்து சமய அறநிலையக் கமிஷன் (1960-1962) இந்திய அரசிற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ள பின்வரும் கருத்துகள் மீண்டும் சிந்திக்கத்தக்கன.
“அர்ச்சகர்களும் பூசாரிகளும் எழுத்து வாசனை அற்றவர்கள், அல்லது அரைகுறைப் படிப்பேயுள்ள வர்கள் அன்றியும் இவர்கள் பொதுவாகப் பணம் பறிக் கும் நோக்கமே கொண்டிருந்தார்கள். மந்திரங்களை இவர்கள் உச்சரிக்கின்ற முறையும் சுரந் தவறிச் சொல்லும் முறையும் கேட்போர் மனத்தில் பிழை படவும் விருப்பம் உணடாக்காமலும் இருந்தன. இதில் மிகவும் நொந்து கொள்ள வேண்டிய தன்மை என்ன வென்றால் இவர்களுக்குத் தாங்கள் சொல்லுவதன் பொருளோ, கருத்தோ கொஞ்சமும் தெரியாது. இதனால் தெய்வ அருள் வேண்டிக் கோயிலுக்கு வரும் சேவார்த்திகள் மற்றும் பக்த கோடிகளிடத்தில் பக்தியு ணர்வையும், தெய்வ உணர்வையும் இவர்களால் உண்டாக்க முடிவதில்லை என்பது தெளிவு” (பக்கம் 47) என்று கூறுகிறது சர்.சி.பி.இராமசாமி அய்யர் தலை மையிலான குழு.
நீதிபதி திரு எஸ்.மகராசன் குழு தலைமையிலான அறிக்கையிலும் (பக்கம் 33) இது எடுத்துக் காட்டப் பட்டுள்ளது.
இதெல்லாம் கனம் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அவர்களுக்கு வசதியாகத் தெரியாமல் போய் விட்டதா?
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டக் குழு அளித்துள்ள தக வல்கள் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது – குமட்டிக் கொண்டு வருகிறது.
அந்தக் குழுவிலும் ராமானுஜ ஆச்சாரியார், உ.சே.வாசுநம்பிள்ளை போன்றவர்கள் அடங்குவர்.
இவர்கள் எல்லாம் ஈரோட்டுப் பாசறையில் பயின்ற வர்கள் அல்லர். ஆன்மிகத்தில் கற்றுத் துறைப் போன வர்கள்தான்.
ஒவ்வொரு கோயிலாகச் சென்று ஆய்வு நடத்தி யுள்ளனர்.
தமிழ்நாட்டில் 108 வைணவக் கோயில்கள் உள்ளன. இதில் 106 கோயில்களுக்குச் சென்று வந்துள்ளனர்.
அடுத்ததுதான் அதிர்ச்சித் தகவல். இதில் 30 வைணவ திவ்ய தேசங்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் உள்ளனர் என்று அந்தத் திவ்ய தேசங் களுக்கு (கோயில்கள்) நேரில் சென்று பார்த்து வந்த உ.வே.வாசுநம்பிள்ளை, ராமானுஜாச்சாரியார் கூறி யுள்ளனரே!
இது வைணவக் கோயில்களின் இலட்சணம் என்றால் சிவாகமப்படி நடப்பதாகக் கூறப்படும்
கோயில்களின் நிலைமை என்ன?
சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகமவிதிகள் தெரிந்துள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர் களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே.
(ஆதாரம்: “கோயில்கள் ஆகமங்கள், மாற்றங்கள்” -நீதியரசர் ஏ.கே.ராஜன்)
கனம் நீதிபதி திரு.ஜி.ஆர்.சாமிநாதன் அவர்களிடத் தில் இதற்கான பதில் உண்டா?
இவர்களுக்குத் தகுதி உண்டு. ஆனால், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் முறைப்படி ஆகமம், மந்திரம் கற்றவர்களுக்கு அர்ச்சகர் ஆகத் தகுதி கிடையாதாம் – காரணம் இவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்கள் அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் “சூத்திரர்கள்!” – அப்படித்தானே!
பழனி கோயில் யாருக்குச் சொந்தமானது? நவபாஷாணத்தால் அந்த முருகனை உருவாக்கியவர் யார்? சித்தர் வழி வந்த போகர் என்பவர் தானே. அவர் வழிவந்த பண்டாரங்கள் தானே அந்தக் கோயிலில் பூஜை செய்து வந்தனர்?
இப்பொழுது அது பார்ப்பன அர்ச்சகர்கள் கையில் கை மாறியது எப்படி?
திருமலைநாயக்கரின் தளபதி ராமப்பன் அய்யர் தானே, ‘சூத்திரர்‘ கையால் பிரசாதம் வாங்க மாட்டேன் என்று கூறி அவர்களை வெளியேற்றிவிட்டு அங்கு பார்ப்பனரை நியமித்த பேர் வழி!
கருமாரியம்மன் கதை என்ன? அது ஒரு சாக்த்த சமயக் கோயில் தானே! அந்த முறை அங்கு இப்போது பின்பற்றப்படுகிறதா?
இப்பொழுது சைவ ஆகமம் பின்பற்றப்படுவது எப்படி? பார்ப்பனர்கள் புகுந்தது நேர்மையான வழியா? கொல்லைப் புற வழியா?
சென்னை தியாகராயர்நகர் சிவா விஷ்ணு கோயில் ஆகம முறையில் கட்டப்பட்டதுதானா? சென்னை பெசண்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலின் கதையும் அதுதானே!
இந்தப் புற்றுகளில் பாம்புகள் புகுந்தது எப்படி? எப்படி? நீதிபதியைக் கேளுங்கள்! கேளுங்கள்!!