மதவாதச் சக்திகளைச் செந்தமிழ்நாட்டை விட்டு ஓடச் செய்வோம்! நம்மை வார்ப்பிக்கின்ற ஆருயிர் அண்ணன் ஆசிரியர் வீரமணி வாழ்த்துவது நமக்குப் பேறு! ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரை

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, ஜன. 10  மதவாதச் சக்திகளைச் செந்தமிழ்நாட்டை விட்டு ஓடச் செய்வோம்! நம்மை வார்ப்பிக்கின்ற ஆருயிர் அண்ணன் ஆசிரியர் வீரமணி வாழ்த்துவது நமக்குப் பேறு என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் செல்லும் ‘சமத்துவ நடைப்பயண’த்தின்போது. இன்று (10.1.2026) மதுரை மேலூர் அருகே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சந்திப்பின்போது, கட்டியணைத்து அன்பைப் பரிமாறிக் கொண்ட  வைகோ அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தமிழ்நாட்டினுடைய வாழ்வுரிமையைக் காப்பவராக…

தமிழ்நாட்டினுடைய படைவீரர்களின் செயல் நாயகராக, தமிழ்நாட்டினுடைய வாழ்வுரிமையைக் காப்பவராக, சுயமரியாதையை, பகுத்தறிவைத் தமிழ்நாட்டில் நிலைநாட்டுகின்ற பணியில், 92 அகவை கடந்தும், என்னைவிட வேகமாகத் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து, ஊர் ஊராகச் சென்று, தமிழ்நாட்டினுடைய தன்மானத்தையும், சுயமரியாதையையும், வாழ்வுரிமைகளையும் பாதுகாப்பதற்காகவே கருஞ்சட்டைப் படை வீரர்களையும் திரட்டிக்கொண்டு, அவர் வரலாறு படைத்து வருகிறார். அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்கு, வலக்கரமும், இடக்கரமும், மனச்சாட்சியாகவும் திகழ்ந்த நம்முடைய தமிழர் தலைவர், நாம் நடந்துவருகின்ற இந்தப் பயணத்தில், தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்காக மேற்கொண்டுள்ள சமத்துவ நடைப்பயணத்தில், ‘‘இந்து – முஸ்லிம் ஒற்றுமை ஓங்கட்டும்! இந்து – முஸ்லிம் – கிறித்துவ ஒற்றுமை ஓங்கட்டும்! சமத்துவம் தழைக்கட்டும்; சகோதரத்துவம் வளரட்டும்!

தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டதையும் பொருட்படுத்தாமல்…

இது தந்தை பெரியாரின் பூமி! அறிஞர் அண்ணாவின் பூமி!

இங்கே நச்சரவங்கள் நடமாட நாங்கள் விடமாட்டோம்!‘‘ என்று உறுதி எடுத்துக்கொண்டு, தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டதையும் பொருட்படுத்தாமல், அவரே ஊர் ஊராகச் செல்லுகின்றபோது, இந்த வைகோ, அவரைவிட 10 வயது இளையவன்; நான் நடந்தால் என்ன? இன்னும் அதிகமாகக் கஷ்டப்பட்டால் என்ன? என்று எனக்கு வழிகாட்டியாக, எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக,  போர்க் களத்தில் திகழ்கிற ஆருயிர் அண்ணன், மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள் இங்கே நம்மை வாழ்த்துவதற்காக வந்தமைக்கு, நான், இந்த சமத்துவ நடைப்பயணத்தில் பங்கேற்று இருக்கின்ற நூற்றுக்கணக்கான தம்பிமார்கள் சார்பில், கழகத்தின் முன்னோடிகள் சார்பில், இந்தப் பயணத் திட்டத்தை வகுத்துக் கொடுக்கின்ற மாவட்டச் செயலாளர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து, உங்கள் வருகை உற்சாகம் தருகிறது.  எனக்கு சற்று களைப்பாக இருந்தது கொஞ்ச நேரத்திற்கு முன்பு – நீங்கள் எங்களோடு சற்று தூரம் நடந்து வரவேண்டும் என்று எடுத்த முடிவுக்குப் பிறகு இப்போது அந்தக் களைப்பு பஞ்சாய் பறந்துவிட்டது!

‘திராவிட இயக்கப் போர் வாள்’ பட்டம் கொடுத்தவர்!

அண்ணன் வந்ததைப் பாராட்டுவதைப் போல, சீதலக் காற்று, குளிர்ந்த காற்று, மார்கழித் திங்களுடைய மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் வண்ண மாருதம் வீசுகின்ற இந்த வேளையில், என் இருகரம் கூப்பி, நன்றி தெரிவிக்கிறேன். எனக்குத் ‘திராவிட இயக்கப் போர் வாள்’ என்ற பட்டத்தைக் கொடுத்ததே ஆருயிர் அண்ணன் வீரமணி அவர்கள்தான்.

பட்டத்தை அவர் கொடுத்தார். அந்த வாளினை என் கையிலே கொடுத்தார். அந்தப் பட்டமான ‘திராவிட இயக்கப் போர் வாள்’ என்பது என் வாழ்க்கையின் பெருமையாகக் கருதுகிறேன்.

இந்த வாள், சுழன்று கொண்டே இருக்கும்; இது உறைக்குள் போகாது!

நாம் தொடுக்கின்ற அறப்போருக்கு அரணாக இருக்கின்ற, ஆயுதமாக இருக்கின்ற…

தமிழ் மானம் காக்க, தமிழர் மானம் காக்க, பகுத்தறிவு காக்க, மதவாதச் சக்திகளை பூண்டோடு அழிக்க, பின்னங்கால் பிடரியில் அடிபட, சிலரைச் செந்தமிழ் நாட்டை விட்டு ஓடச் செய்ய, நாம் தொடுக்கின்ற அறப்போருக்கு அரணாக இருக்கின்ற, ஆயுதமாக இருக்கின்ற, வார்ப்பிக்கின்றவராக இருக்கின்ற என்னுடைய ஆருயிர் அண்ணன் ஆசிரியர் வீரமணி அவர்கள், இன்று நம்மை வாழ்த்தி, உரையாற்றுவது நாம் பெற்ற பேறு.

– இவ்வாறு ம.தி.முக.. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *