திண்டிவனம், ஜன.10 தைலாபுரம் தோட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்பும் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெறும் நிகழ்வு நேற்று (9.1.2026) தொடங்கியது.
இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்த மருத்துவா் ச.ராமதாஸ், பாமகவினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் அவரது அரசுக்கு 5 ஆண்டுகள் நிபந்தனையற்ற ஆதரவளித்தோம். ஆனால், அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்குபெற விருப்பம் இருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நன்றாகவே நடைபெற்று வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியை மீட்பதற்கான நடவடிக்கையையும் எடுத்துக்கொண்டு வருகிறோம். இதில், நாங்கள் விரும்பிய வெற்றியைப் பெறுவோம்.
சிறீகாந்தி போட்டி: கட்சியின் செயல் தலைவா் சிறீகாந்தி இந்த தோ்தலில் போட்டியிடுவார். ஜனவரி 12-ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம். தேவைப்பட்டால், இதற்கான தேதியை நீட்டிப்போம். பாமகவில் ஒரே அணிதான். அதுவும் என் தலைமையிலான பாமகதான் என்றார் ராமதாஸ்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, உங்கள் கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்த ராமதாஸ், விசிக தலைவா் தொல். திருமாவளவன் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணியில் நீங்கள் இடம்பெறுவீா்களா என்ற மற்றொரு கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றார்.
புதுச்சேரி மாநிலத்தில்
பொங்கல் இலவச வேட்டி, சேலைக்கு பதில் ரொக்கம்
இன்று முதல் வங்கிக் கணக்கில் வரவு!
புதுச்சேரி, ஜன.10 புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பிபிஎல் (BPL) மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச வேட்டி மற்றும் சேலைத் திட்டத்தில் இந்த ஆண்டு முக்கிய மாற்றத்தை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
ரொக்கம்
கடந்த ஆண்டு வரை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் ரேசன் கடைகள் வழியாக இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, பொருள்களுக்குப் பதிலாக நேரடி பணப் பரிமாற்றம் (Direct Benefit Transfer) மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கிலேயே பணம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த நிதியுதவி பிரிக்கப்பட்டுள்ளது:
ரேசன் அட்டையில் ஒருவர் மட்டும் உள்ள பயனாளிகளுக்கு ரூ. 500 வழங்கப்படும்.
குடும்பத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும்.
இந்தத் தொகையானது இன்று (10.1.2026) முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
வழக்கமாக ரேசன் கடைகளில் வழங்கப்படும் வேட்டி, சேலை விநியோகம் இந்த முறை இருக்காது என்பதால், பொதுமக்கள் ரேசன் கடைகளுக்குச் செல்லத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளிகள் தங்களுக்குப் பிடித்தமான உடைகளைத் தாங்களே வாங்கிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொங்கல் விழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த பணப் பரிமாற்றம் ஏழை எளிய மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
