நமது பாசத்திற்கும், அன்பிற்குமுரிய ‘சொல்லின் செல்வர்’ ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் மகன் மானமிகு ஈ.வெ.கி.ச. இனியன் சம்பத் அவர்கள் (வயது 71) சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார் (9.1.2026) என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
செல்வர் இனியன் சம்பத் அவர்களின் அரசியல் நிலைப்பாடு எப்படி இருந்தாலும் தந்தையைப் போலவே ஒரு நல்ல பகுத்தறிவுவாதி – எவரிடத்திலும் பணிவோடு பழகும் பான்மையர்.
தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் ஆகியோரிடத்திலும், நம்மிடத்திலும், குடும்பத்தாரிடத்திலும் வாஞ்சையோடு பழகி அவர்களது அன்பைப் பெற்ற தனித்த சிந்தனையாளர்.
சிறிது காலம் உடல் நலக் குறைவு ஏற்பட்டு, அதன் காரணமாக ஏற்பட்ட அவரது மறைவு – ஈடு செய்ய இயலாத ஒன்றாகியுள்ளது.
அவரை இழந்து வருந்தும் அவரது வாழ்விணையர் மற்றும் குடும்பத்தினர், சகோதர, சகோதரிகள், நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறி, நமது இயக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு. இனியன்சம்பத் ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’ படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ‘புரட்சிக்காரன்’ படத்தில் வைதீகப் பார்ப்பனர் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்துப் புகழ் பெற்றவருமாவார் என்பதையும் நினைவு கூருகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
குறிப்பு: மறைவுற்ற இனியன் சம்பத் உடலுக்கு நேற்று (9.1.2026) மாலை பெசன்ட் நகர் இடுகாட்டில் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறி, இரங்கல் தெரிவித்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன் ஆகியோர் கழகத் தலைவருடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். பெசன்ட் நகர் இடுகாட்டில் இனியன் சம்பத் உடல் எரியூட்டப்பட்டது.
