இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் மோடியிலிருந்து, தமிழ்நாட்டின் பா.ஜ.க.வினர் வரை தமிழின் பெருமைகளைப் பேசத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரப்போகிறது என்பதை இதிலிருந்து எளிதில் தெரிந்துகொள்ளலாம். மோடியின் தமிழ்நாட்டுப் பயணங்களும், அறிவிப்போடு நின்றுவிடுகின்ற திட்டங்களும் அடுத்தடுத்து வரும்.
தமிழின் பெருமை, திருக்குறளின் அருமை ஆகியன குறித்து அவ்வப்போது மோடி பேசுவார். அண்மையில், ‘மனதின் குரல்’ என்னும் வானொலி உரையில் பிசித் தீவில் ‘தமிழ் நாள்’ கொண்டாடப்பட்டதையும், பிசித் தீவில் இளம் தலைமுறையினர் தமிழ் மொழியுடன் இணைப்பை ஏற்படுத்துவதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது நாடாளுமன்றத் தொகுதியான வார ணாசியில் ‘காசித் தமிழ்க் கூடல்’ நிகழ்வில் தமிழ் கற்பிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழ் இலக்கியம் மிகவும் வளமானது என்று புகழ்ந்துள்ளார். அத்துடன், இதனை இந்திய ஒருமைப்பாட்டின் வெளிப்பாடாகவும் மடை மாற்றுகிறார்.
அடுத்து, ஹிந்தித் திணிப்பை வலியுறுத்தி, தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய நிதியினை நிறுத்தி வைத்துள்ள ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய ஒருமைப்பாட்டுக்கான அடையாளம் தமிழ் மொழி என்று எடுத்துரைக்கிறார்.
அதோடு நில்லாமல், தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், தமிழ்நாடு அரசுதான் ஏற்கவில்லை என்றும் உண்மையை மறுத்துக் கூறியதுடன், ஒன்றிய அரசின் நிதியினை விடுவிப்பதற்கான கெடு இன்னும் சில நாள்களில் முடியப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் புரியாத சமஸ்கிருத அல்லது ஹிந்திப் பெயர்களை வைத்துக் குழப்பிக்கொண்டிருக்கும் பா.ஜ.க. ஒன்றிய அரசில் அமைச்சராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த
எல். முருகன், தூத்துக்குடி வானூர்தி நிலையத்துக்குத் தமிழில் பெயர் சூட்டவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறார்.
தமிழுக்குப் பாராட்டு,
தமிழரிடம் பகைமை
ஒருபுறம் பேச்சளவில் தமிழின் பெருமை சிறப்பிக்கப்பட்டாலும், மறுபுறம் தமிழர்களுக்கான உரிமைகளைப் பறிப்பதிலும், மறுப்பதிலும் மோடியின் ஒன்றிய பா.ஜ.க. அரசு முனைப்புக் காட்டிவருகிறது.
- தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய நிதிக் குறைப்பு மற்றும் நிறுத்தம்
- ஒன்றிய அரசின் திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிப்பு
- அரசியல் உரிமைகள் பறிப்பு
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளில் தலையீடு
- ஆளுநர் வழியாக இடையூறு
- தமிழரின் பண்பாட்டு வழமைகளில் வெறுப்பு
- தமிழ் மொழி வளர்ச்சித் தடுப்பு
- தமிழரின் தொன்மைகளை அறிய முடியாமல் மறைப்பு
- தமிழரது வழிபாட்டு விருப்பங்களில் மறுப்பு
எனப் பல வகைகளில் ஒன்றிய அரசும் பா.ஜ.க. வினரும் தமிழர்களின் நலன்களுக்குப் பகையாகவே இருக்கின்றனர்
இவற்றுக்கெல்லாம் விளக்கங்கள், விரிவுரைகள் வேண்டியதில்லை. தமிழ்நாட்டு மக்கள் பல ஆண்டு களாகத் தாங்கள் ஒதுக்கிவைக்கப்படுவதை உணராமல் இல்லை.
குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், தமிழர்களின் சமூக-பொருளிய-அரசியல்- பண்பாட்டு உரிமைகளை ஒதுக்கியும், எதிர்த்தும், மறைத்தும், மறுத்தும், வெறுத்தும் பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும் செயல்டுகின்றன என்பதில் அய்யமேதுமில்லை.
தமிழர்களின் வாழ்நிலைகள் அனைத்திலும் பா.ஜ.க. வினர் எதிர்நிலையே எடுத்துவருகின்றனர்.
உரிமைக் குரல் பிரிவினையா?
ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாமையைச் சுட்டிக்காட்டினாலும், தமிழ்நாட்டுக்கான தன்னாட்சி உரிமைகளைத் தட்டிக்கேட்டாலும், எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும், இவற்றையெல்லாம் பிரிவினைக்கான போக்குகளாகக் காட்ட ஒன்றிய அரசும், பா.ஜ.க.வும் முயற்சிக்கின்றன.
குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், தலைமை அமைச்சர், அமைச்சர்கள், பா.ஜ.க.வினர் அனைவரும் தமிழ்நாடு பிரிவினையை நோக்கிச் செல்வதாகவே படம் பிடித்துக்காட்ட நினைக்கின்றனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தல், பிரிவினையாளர்க ளுக்கும், தேசியத்தினருக்கும் இடையே நடப்பது என்று தமிழ்நாட்டினரான பா.ஜ.க. தலைவர் எச்.ராஜா அண்மையில் வெறுப்பினைக் கொட்டியிருக்கிறார்.
அவர்களைப் பொறுத்தவரை, தமிழர்களின் பெருமை பேசுவதும் தமிழ்நாட்டின் வளர்ச்சியினைக் காட்டுவதும் பிரிவினைப் போக்காகவே பார்க்கப்படுகிறது.
சமஸ்கிருதம் அல்லது ஹிந்தித் திணிப்பு, உரிமைகள் பறிப்பு, நிதிக் குறைப்பு, ஸநாதன மறுப்பு, ஒன்றிய மோடி அரசின் மக்கள் நலனுக்கு மாறான கொள்கைகள், இப்போதைய தொழிலாளர் பகைச் சட்டங்கள் போன்ற வற்றுக்கு எதிராகப் பேசுவது என யாவும் பிரிவினை நோக்கம் என்றே காணப்படுகிறது.
அதாவது, இவையெல்லாம் ஒன்றிய ஒற்றுமைக்கு ஒத்துவராத தேசியப் பகை நிலைகளாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மோடியின் ஒன்றிய அரசைப் பாராட்டிப் புகழ்ந்துகொண்டிருப்பதுதான், ஒன்றிய ஒற்றுமைக்கும் தேசியத்துக்குமான அளவுகோலாக அவர்கள் எடுத்துக்கொள்கின்றனர்.
மாற்றுக் கட்சி மாநிலங்களின்
சிறப்பு மறுப்பு
குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், மாநில ஆளுநர்கள், தலைமை அமைச்சர், பிற அமைச்சர்கள் என அனைவரும் ஒன்றிய அரசின் பெருமைகளைப் போகுமிடமெல்லாம் பெரிதுபடுத்துகின்றனர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்குச் செல்லும்போது, அந்த மாநில அரசுகளின் செயல்பாடுகளைச் சிறப்பித்துக் கூறவும் தயங்குவதில்லை
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் தங்களது மாநில அரசுகளின் செயல்பாடுகளைப் பாராட்டுகின்றனர். ஆயினும், அந்த மாநில அரசுகளின் கொள்கைகளை மறந்தும் மாற்றிப் பேசுவதில்லை.
ஆனால், தமிழ்நாட்டுக்கு அல்லது பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநிலங்களுக்குக் குடியரசுத் தலைவர், தலைமையமைச்சர் உள்ளிட்ட பெரும் தலைகள் போகின்றபோது, ஒன்றிய அரசின் மேன்மைகளை எடுத்துரைக்கின்றனர். மாறாக, மாற்றுக் கட்சி மாநிலங்களின் சிறப்புகளைச் சிறிதும் கண்டுகொள்வதில்லை.
ஏன் இந்தப் பாகுபாடு? என்றுதான் தெரியவில்லை. இவையெல்லாம் பிரித்துப் பார்ப்பதாக அவர்கள் கண்க ளுக்குக் காட்சி தரவில்லை.
டில்லியிலிருந்து வருவோர் இருக்கட்டும், மாநில ஆளுநர் என்பவர் தனது அனைத்துச் செயல்பாடு களிலும் மாநில அமைச்சரவையின் கட்டளைக்கு – இதனை அறிவுரை என்று அரசமைப்புச் சட்டம் பெருந்தன்மையோடு குறிப்பிடுகிறது – அடிபணிந்து நடக்கவேண்டியவர்.
மாநில மக்களின் நலன்களைக் காப்பதாகப் பொறுப்பேற்கும்போது உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஆளுநர், மாநிலத்தின் வளர்ச்சிகளை எடுத்துப் பேசு வதில்லை; முன்னேற்றங்களை மறந்தும் குறிப்பிடுவ தில்லை.
ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் சார்பில் மாநிலத்தில் இருப்பவர் என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. ஆனால், ஆளுநர் ஒன்றிய அரசின் சார்பாளர் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. ஒன்றிய அரசும் அதையே எதிர்பார்க்கிறது.
தமிழரை வாழ்த்தாத
தமிழ்நாடு ஆளுநர்
தமிழின் பெருமை பேசும் பா.ஜ.க., தமிழர்களின் எதிர்பார்ப்புகளை எப்போதும் நிறைவேற்றித் தந்ததாக வரலாறில்லை.
தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி, தான் செல்லும் இடங்களிலெல்லாம் ஒன்றிய மோடி அரசின் பெருமை களை விவரித்துக் கூறுவதையே வழக்கமாகக் கொண்டி ருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சி, சிறப்பு, மேன்மை, முன்னேற்றம், பெருமை போன்ற எதையும் வாய்விட்டு வாழ்த்தியதில்லை.
ஒன்றிய அளவில் சிறந்த மாநிலமாகப் பல்வேறு துறைகளில் – நிலைகளில் தமிழ்நாடு தலை நிமிர்ந்து விளங்குவதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே தெளிவுபடுத்துகின்றன. இவற்றுக்காக ஒன்றிய அரசு பல பாராட்டுச் சான்றுகளையும் வழங்கியுள்ளது.
கல்வி, தொழில், மகளிர் முன்னேற்றம், சமூக நீதி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஒன்றிய அரசின் புள்ளிகளும், ஒன்றிய அரசும் வேறு வழியில்லாமல் பாராட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.
இவற்றில் ஏதாவதொன்றைத் தமிழ்நாட்டு ஆளுநர் எடுத்துக் கூறி மகிழ்ந்திருக்கிறாரா என்றால் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது.
மாறாக, கல்வியின் தரம் குறைந்துள்ளது, மகளி ருக்குக் காப்பில்லை, கொலை நகரமாகத் தமிழ்நாடு மாறிவிட்டது என்றெல்லாம் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை உளறிவருகிறார். ஒன்றிய அரசின் உறுதியான சான்றுகளை மறந்தும், மறுத்தும் உரை யாற்றி வருகிறார்.
ஒன்றிய அரசின் செயல்பாடுகளைக் குடியரசுத் தலைவர் குறை கூறுவதில்லை என்ற மரபினை, மாற்றுக் கட்சி மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மறந்து விடுகின்றனர்.
தமிழர்களின் எதிர்பார்ப்புகளுக்கு
எதிரான பா.ஜ.க.
இவற்றுக்கெல்லாம் தமிழ்நாடு பா.ஜ.க.வினர் விலக்காக இருக்கவில்லை. பா.ஜ.க. ஒன்றிய அரசின் மறுக்க முடியாத பாராட்டுகளையே புறக்கணித்துப் புன்மை மொழிகளைப் பரப்பிவருகிறது.
தொன்மைத் தமிழை மேம்படுத்த மோடி எடுத்து வருவதாகக் கூறப்படும் முயற்சிகளை முன்னி லைப்படுத்தும் பா.ஜ.க.வினர், தமிழரின் பழைமையைக் காட்டும் கீழடி அகழ்வறிக்கையினை வெளியிட முன்வரவில்லை.
சமஸ்கிருதப் பண்பாட்டுக்கு ஊறு நேரும் என்று அவர்களது உள் மனம் உறுத்துகிறது.
இரும்பின் தொன்மை, நெல் உற்பத்தியின் தொடக்கம், தமிழ் எழுத்துக்களின் பழமை போன்ற பலவற்றையும் வெளிக்கொண்டுவந்த அண்மைக் கால அகழ்வுகள் எதையும் பா.ஜ.க.வினர் சிறப்பிப்பதில்லை.
சிந்துவெளிப் பண்பாடு என்பதை மறைத்து, சிந்து சரசுவதிப் பண்பாடு என மாற்றி, தரவுகளுக்கு வேறான கருத்துகளை முன்னெடுத்துக் கருத்தரங்குகள் நடத்திவரும் ஸநாதனிகள் எவரும், கீழடி உள்ளிட்ட அகழ்வுகளில் கண்டெடுத்த தமிழரின் தொன்மையைத் தங்களது நாவால் உரைப்பதுகூட இல்லை.
பிற மொழியினரை ஏற்கும் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் நேரடியாகப் பிரிவினை பேசவில்லை.
தமிழரின் தன்னாட்சி, தனியாட்சி, மாநிலங்களின் உரிமை, மாநிலங்களுக்கு மிகு வாய்ப்புகள் என வெவ்வேறான சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும், பிரிவினை வேண்டுவோர் எவருமில்லை.
விடுதலைக்குப் பின்னரான பல போக்குகள், தன்னாட்சி – தனியாட்சி என்பதை வலியுறுத்தவேண்டிய நிலைமைகளை உருவாக்கியுள்ளன என்பதை மறுக்க முடியாது.
தேர்தல்களில் போட்டியிடாத சில இயக்கங்கள் தனித் தமிழ்நாடு என்ற முழக்கத்தினைக் கொண்டிருப்பதும் உண்மைதான்.
ஆயினும், மக்கள் ஏற்பு முறைத் தேர்தலில் கொண்ட நம்பிக்கையால், மக்களைத் திரட்டுவதற்கு அரசியல் கட்சிகள் இப்போது முதலிடம் கொடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தோர் துன்புறுத்தப்படு கின்றனர் என்று பீகார் தேர்தல் பரப்புரையில் மோடி பேசியது போன்று இங்கு எவரும் பிரிவினையை விதைக்கவில்லை.
தமிழ்நாட்டில் உ.பி., ம.பி., ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற வேறு பல மொழி மாநிலத்தோர் பணி யாற்றினாலும், பீகார் மக்கள் மட்டுமே துன்புறுத்தப்படு கின்றனர் என்று மோடி குறிப்பிட்டுள்ளதன் நச்சுப் பேச்சைப் புறந்தள்ளிவிட முடியாது.
ஒரிசா தேர்தலிலும் தமிழருக்கு எதிரான பகையினைப் பா.ஜ.க. உருவாக்கியது போன்று எதுவும் தமிழ்நாட்டில் எப்போதும் நடக்கவில்லை.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வாய்ப்பாகப் பொருளியச் செயல்பாடுகளிலும் உற்பத்தியிலும் உழைப்பைத் தருவோர் என்பதால் வெளிமாநிலத்தோரைத் தமிழ்நாடு ஏற்றுக்கொண்டுள்ளது.
அவர்களுக்குச் சட்டத்துக்கும், விதிகளுக்கும் புறம்பாக வாக்குரிமை தருவதை மட்டுமே தமிழ்நாடு ஏற்கவில்லை.
ஆனால், தனது பாகுபடுத்தல்களால், பிரிவினை எண்ணங்களை ஏதோவொரு வகையில் பா.ஜ.க. இப்போது தூண்டிவருகிறது.
மொழி, இனம், சமயம், நம்பிக்கைகள், வழிபாடு, பண்பாடு, வரலாறு போன்ற பல வகையான பிரிவினை களைத் தூண்டிப் பயன்பெற நினைப்பதுதான் பா.ஜ.க. வின் கொள்கை என்பதை மாநிலங்களில் உள்ள இன மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
நன்றி: ‘ஜனசக்தி’, 4.1.2026
