தேர்தலில் ஜனநாயக முறைப்படி வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி!
குறுக்கு வழியில் அய்.டி., சி.பி.அய்., ஈ.டி.யைப் பயன்படுத்தி
வெற்றி பெறலாம் என்ற திட்டம் பெரியார் மண்ணில் பலிக்காது!
மக்களின் பேராதரவுடன் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நெஞ்சுரத்தோடு குறுக்கு வழிக்காரர்களை விரட்டியடிப்போம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
மக்கள் ஆதரவுடன் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறும் நல்லாட்சியை – சட்டப்பேரவைத் தேர்தலில் குறுக்கு வழிகளால் அகற்றிவிடலாம் என்ற திட்டம் பெரியார் மண்ணில் பலிக்காது! முதலமைச்சரின் தலைமையில், நெஞ்சுரத்துடன், சதித் திட்டங்களை விரட்டி அடித்து, மீண்டும் தி.மு.க. ஆட்சியை மலரச் செய்வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
எத்தகைய குறுக்கு வழிகள், நியாய விரோத முறை களில் அச்சுறுத்தல்கள், அவதூறுகள், அழி(பொய்) வழக்குகள், போலிக் குற்றச்சாற்றுகளை முக்கிய எதிர்க்கட்சி அமைச்சர்கள் போன்றவர்கள்மீது சுமத்தி வருகிறது ஒன்றிய பி.ஜே.பி. அரசு! மோடி பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சி என்ற ஒன்றிய ஆட்சியின் அதிகாரத்தில் உள்ள திரிசூலங்களான வருமான வரித் துறை, சி.பி.அய்., அமலாக்கத் துறை ஆகியவற்றை நெறி பிறழ்ந்து ஏவி வருகிறது. தங்களது அரசியல், கொள்கை எதிரிகளான, தி.மு.க. கூட்டணித் தலைவர்– முதலமைச்சர் தலைமையில் உள்ள ஆட்சியை ஒழிக்க சாம, பேத, தான, தண்டம் உள்ளிட்ட அத்துணை முயற்சி களையும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பிரயோகப்படுத்திட பெரும் ஆயத்தங்களைச் செய்து பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ். பின்பலத்தோடு களத்தில் நிற்கும் பா.ஜ.க. மோடி அரசு.
திரிசூலங்களைப் பயன்படுத்தி
வெற்றி பெறத் திட்டம்!
தெரு வாசல், புறவாசல், சாளரம் எல்லாவற்றையும் திறந்து வைத்து, கூவிக் கூவி, ‘‘எங்கள் கூட்டணிக்கு வாருங்கள்’’ என்று காலமெல்லாம் காத்திருந்தும், மிஞ்சி யது ஏமாற்றமே என்பதே, தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில்!
திரிசூலங்களில் சிக்கி, இத்தனை ஆண்டுகள் ஓடியும் வழக்கு என்ற கொடுவாளைத் தலைக்கு மேல் தொங்க விட்டு அச்சுறுத்தப்பட்ட ‘குற்றச் சரித்திர’ கட்சித் தலைவர்களுக்கு மோடி கட்சி, கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறது! மொக்கையான சிலரே தேறுவர் போன்ற பரிதாப நிலைதான் இன்று.
அதனால், அமைச்சரவையில் வலுவுடன் செயல்படும் மூத்த அமைச்சர்களைக் குறி வைத்து, அவர்களைத் தேர்தல் பணிகளிலிருந்து திசை திருப்ப, அவர்கள்மீது அவதூறு – ஆதாரமற்ற புகார்களைக் கட்டவிழ்த்துவிடுகிறது. ‘கட்டாயத் திருமணம்’ என்ற கதைபோல, தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க.வும் இடம்பெறும் கூட்டணி ஆட்சிதான்; எங்கள் பா.ஜ.க. ஆட்சியே தமிழ்நாட்டில் என்பதை அமித்ஷாக்கள் அறுதியிட்டுக் கூறும் நிலையில், அவர்களிடம் தங்கள் கட்சியை அடமானம் வைத்துவிட்ட அ.தி.மு.க.வின் நிலையோ, பரிதாபத்திற்குரியதாகி விட்டது!
முதலில் நிபந்தனை போட்ட
அ.தி.மு.க. அந்தர்பல்டி!
முதலில் நிபந்தனை போட்ட ‘வீர தீரத் தலைவர்கள்’, மீண்டும் தங்களது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு, இறுதியில், இதுதான் என்று இருப்பதையும் இழந்து, ‘அந்தர்பல்டி’ அடித்துள்ளனர். பீகாரில் எப்படி நிதிஷ்குமார் ஒரு ‘டம்மி’யாகக் காட்சியளிக்கும் நிலையோ, அதுபோல செய்ய தேர்தல் மூலவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது வித்தைகளைக் காட்ட முனைந்துள்ளார்!
ஜாதி வாரியாக வாக்குகளைத் திரட்டிடவும், வட மாநில வியூகங்களைச் செய்யவும் ஆயத்தமாகிறார்கள். (‘சோஷியல் எஞ்ஜினியரிங்’ – Social Engineering) – சில ஜாதி முத்திரைத் தலைவர்களை அழைத்து வந்தால் வெற்றி பெறலாம் என்ற வித்தை, தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது!
வாக்குகளைப் பறிக்க – தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறாமல் செய்ய – எஸ்.அய்.ஆர். வேலைகளை எவ்வளவு அவர்கள் சுழற்றினாலும், பெரியார், பகுத்த றிவு, சமூகநீதி, சுயமரியாதை சார்ந்த மண்ணான இந்தத் ‘திராவிட மண்’ – தமிழ்நாடு அவற்றைத் தாண்டி, தி.மு.க. கூட்டணியை மீண்டும் பெருவெற்றி பெறச் செய்வது உறுதி என்ற ரகசியத் தகவல்கள் டில்லி காவித் தலைவர்களைக் கலகலத்து, கவலையடையச் செய்கின்றன!
இங்கே வந்து ‘டேரா’ போட்டு, தங்கி, தேர்தல் பணிபுரிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்குத் தனி வீட்டினை சென்னையில் ஏற்பாடு செய்கிறார்கள்.
நல்லது, நிறைய பேசட்டும்– நடக்கட்டும்! அவரது ஒவ்வொரு பேச்சும், தி.மு.க. கூட்டணிக்கான ஆதரவாக, பேராதரவாகவே மாற்றிவிடும் என்பது பிறகு தெரியும்.
இரகசியத்தை வெளிப்படுத்திய
‘தி(இ)னமலர்’!
தாங்கள் நினைத்தது நடைபெறாததால், இனி கடைசியாக அவர்கள் என்ன முயற்சியில் ஈடுபட விருக்கிறார்கள் என்பதை ‘இனமலர்’ ஏடு (9.1.2026) தெளிவாக்கி வெளிப்படுத்தியுள்ளது!
‘‘அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, சில கோரிக்கைகளை அமித்ஷாவிடம் கூறியிருக்கிறார். அந்த விஷயங்களைக் கட்டாயம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் வாயிலாக அமைச்சர்கள் பலரையும் முடக்கவில்லை என்றால், தேர்தலை அவர்கள் சுதந்திரமாக எதிர்கொண்டு, நம்மை வீழ்த்த முயற்சிப்பர்; ஆதலால், ஒன்றிய விசாரணை அமைப்புகளை, தி.மு.க.வை நோக்கி முடுக்கிவிடவேண்டும்’’ என்றும் கெஞ்சியிருக்கிறார்!
சூட்சமம் புரிகிறதா?
மரத்திற்குப் பின் நின்று ‘பேடி’த்தனமாக இராமன் வாலியை நோக்கி அம்பு எய்து கொன்ற உத்தியை இது நினைவூட்டுவதாக இல்லையா?
அதோடு, இன்னொன்றையும் அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடியார் சொல்லியிருக்கிறாராம், ‘இனமலர்’ கூறுகிறது.
‘‘கூட்டணி ஆட்சி குறித்து, தேர்தலுக்கு முன் அறிவித்தால், மக்கள் அதனை ஏற்காமல் போகலாம். அதனால், அதுகுறித்துப் பின் முடிவு எடுக்கலாம்’’ என்று கூறியுள்ளாராம்.
இப்படி ‘‘கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்து கொக்கைப் பிடிக்க முயற்சிப்பது’’ யாரை ஏமாற்ற – இப்படி ஒரு நிலை?
இதன்படி ஆழ்ந்து பார்த்தால், ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது!
தந்தை பெரியார் மண்ணில் பலிக்காது!
தி.மு.க. கூட்டணியின் வெற்றியை மறைமுகமாக இவர்கள் ஒப்புக்கொண்டு, பந்தை அடிக்க முடியா விட்டால், பந்தாடுபவரின் காலை அடித்துக் கீழே தள்ளினால், பிறகு நாம் ஜெயித்து விடலாம், ‘வெற்றியை’ குறுக்கு வழியில் பெறலாம் என்ற ஈனத்தனம் – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பலிக்காது! காரணம், இது பெரியாரின் திராவிட மண்! இது பீகார் அல்ல; அரியானா அல்ல; உ.பி.யும் அல்ல!
மக்களின் பேராதரவு பெற்ற ஒப்பற்ற முதலமைச்சரின் அஞ்சாநெஞ்சத்துடன், ஆளுமைத் திறத்துடன் அவர்களை விரட்டி அடித்து ஓடச் செய்வோம் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
10.1.2026
