சென்னை, ஜன. 10 தமிழ்நாடு இன்று உலகளாவிய மருத்துவ மய்யமாகத் திகழ்வதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ அறிவியல் மாநாடு
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் (DME) 60-ஆவது ஆண்டு வைர விழா மற்றும் மருத்துவ அறிவியல் மாநாடு, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நேற்று(9.1.2026) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து அமைச்சர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
பிரமாண்ட கட்டமைப்பு: 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்ட ‘டிஎம்இ’ (DME), தற்போது ‘மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம்’ எனத் தரம் உயர்த்தப்பட் டுள்ளது. இதன் கீழ் 36 அரசு மருத் துவக் கல்லூரிகள், 3 பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 67 மருத்துவ மனைகள் செயல்பட்டு வருகின்றன.
மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி: மறைந்த முதலமைச்சர் கலைஞரின் கனவை நனவாக்கும் வகையில், எஞ்சியுள்ள 6 மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியா வரும் பன்னாட்டு மருத்துவப் பயனாளிகளில் 25 சதவீதம் பேர் தமிழ்நாட்டைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என ஒன்றிய அரசு பாராட்டியுள்ளது.
சுமார் 70 நாடுகளிலிருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் உயர்தர சிகிச்சைக்காகத் தமிழகம் வருகிறார்கள். இது நமது மருத்துவக் கட்டமைப்புக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நவீன சிகிச்சை மற்றும் சாதனைகள்
நவீன கருவிகள்: இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் ரோபோட்டிக் புற்றுநோய் சிகிச்சை கருவி ஓமந்தூரார் மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 21 சிடி ஸ்கேன் மற்றும் 9 எம்.ஆர்.அய் கருவிகள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன.
உடல் உறுப்புக் கொடை: உடல் உறுப்பு தானம் மற்றும் அறுவை சிகிச்சைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
அரிய அறுவை சிகிச்சை: உலக அளவில் இதுவரை 4 இடங்களில் மட்டுமே நடந்துள்ள அபூர்வமான ‘கிராஸ் ஹேண்ட் சர்ஜரி’ (Cross Hand Surgery) இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே நடந்துள்ளது. அந்த இரண்டுமே தமிழ்நாட்டில் (சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கோவையின் ஒரு தனியார் மருத்துவமனை) நடைபெற்றது நமது மருத்துவத் துறையின் உச்சக்கட்ட சாதனை என்று அவர் புகழாரம் சூட்டினார்.
