ஆசிரியர் விடையளிக்கிறார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கேள்வி 1: மராட்டிய மண்ணில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் (03 & 04.01.2026) தாங்கள் தமிழிலும்  -ஆங்கிலத்திலும் ஆற்றிய எழுச்சிவாய்ந்த உரையை ஏராளமான இளைஞர்களும், மாணவர்களும் செவிமடுத்து, ஒவ்வொருவரும் கவனமாகக் குறிப்பெடுத்தப் பாங்கு அவர்கள் பெரியார் காட்டிய பகுத்தறிவுப்பாதையில் பீடுநடைபோட ஆயத்தமாகி விட்டனர் என்பதற்குரிய அடையாளம்தானே?

– இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.

பதில் 1: அதோடு அவர்கள் நமது புத்தகங்களை வாங்கி என்னிடம் கையொப்பம் பெற வந்தது அவர்கள் பெரியாரை வாசிக்கவும், இனி சுவாசிக்கவும் ஆயத்தமாகிவிட்டதும் எனக்குப் புரிந்ததோடு, அறிவுச்சுடர் – அய்யாவின் அறிவுரைகள் அவர்களுக்குச் சென்றடைந்ததில் பெருமகிழ்ச்சியும் எனக்குக் கிடைத்தது!

  • • •

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 2: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதால் உரிய பலன் கிடைக்குமா?

– ஜெ.ஜனார்த்தனன், பொத்தேரி.

பதில் 2: நம்பிக்கையுடன் போராடி நீதிமன்றத்திலும் வாதாடுவோம். பெரிதும் நியாயம் கிடைக்கக் கூடும். இறுதித் தீர்ப்பு மக்கள் மன்றம்தான்!

  • • •

கேள்வி 3: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்குத் தொடர்பான விசாரணைக்கு டில்லி சி.பி.அய். அலுவலகத்தில் ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய்க்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்குமா?

– சா. சத்தியமூர்த்தி, கரூர்.

பதில் 3: பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வகையில் அது பயன்படப் போகிறது என்பது இறுதியில்தான் தெரியவரும். முன்கூட்டியே அனுமானிக்க முடியாது!

  • • •

கேள்வி 4: “பழைய சோறு சாப்பிடுவதால் பல நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன” என்று ஆராய்ச்சியாளர்களால்  அறிவிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகளின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அதனை பள்ளிகளில் வழங்கப்படுகின்ற  காலை உணவில் வாரம் ஒருநாள் சேர்க்க ‘திராவிட மாடல்’ அரசு ஆவன செய்யுமா?

– சீதாலட்சுமி, திண்டிவனம்.

பதில் 4: தேர்தலில் அதை எதிர்க்கட்சிகள் திசைதிருப்பிவிடக் கூடும். குழந்தைகளும் பெரிதும் விரும்பமாட்டார்கள். எனவே, விபரீதப் பரிசோதனை தற்போது தேவையில்லை என்பதே நமது பதில்.

  • • •

கேள்வி 5:  தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 22 ஆண்டுகால கோரிக்கையை ஒரு துளி பேனா மையால் நிறைவேற்றி இருப்பதை  அரசு ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எப்படிக் கருதுவார்கள்?

– க.செந்தமிழ்ச்செல்வி, செய்யாறு

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 5: பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். “நன்றி என்பது பயன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய ஒன்று!” என்ற தந்தை பெரியார் அறிவுரையை நினைவில் வைப்போம்!

  • • •

கேள்வி 6: ‘திராவிட மாடல்’ அரசு, கல்லூரிகளில் படிக்கும் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியதின் மூலம் – தமிழ்நாடு, இந்தியாவில் தனித்துவமிக்கதாக விளங்குகிறது என்பதை நிருபித்திருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதத்துடன் கூறியிருப்பது இன எதிரிகளின் செவிகளுக்கு எட்டுமா?

– ச.சாந்தி, நாமக்கல்.

பதில் 6: கேளாக் காதுள்ளவர்களுக்கும் – மாளா அரசியல் பொறாமையாளர்களுக்கும் – அவதூறு ஷாக்களின் அடிமைகளுக்கும் ஒருபோதும் எட்டாது; இன எதிரிகள் மீண்டும் ஏதாவது ஒன்றைக் கிளப்பக் கூடும்.

  • • •

கேள்வி 7: “புதுக்கோட்டையில் ஊழலைப் பற்றி பேசும் அமித்ஷா, புதுச்சேரி ஊழலைப் பற்றி பேச மறுப்பது ஏன்?” என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கேள்விக்கு உரியவர்கள் பதில் அளிப்பார்களா?

– இ. குப்புசாமி, விருகம்பாக்கம்.

பதில் 7: தோழர் பாலகிருஷ்ணனின் கேள்வி நெற்றியடிக் கேள்வி. பதில் அவர்களிடமிருந்து வராது!

  • • •

கேள்வி 8: தேர்தல் பிரச்சாரத்திற்குக் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முறையாக பின்பற்ற வேண்டியது முக்கிய கடமை அல்லவா?

– சு.பெருமாள், விழுப்புரம்.

பதில் 8: அதில் என்ன சந்தேகம்? ஆனால், பிரதமர் மோடிக்கு மட்டும் முந்தைய பல தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் விதிவிலக்குபோல் இருந்ததை வாக்காளர்கள் எப்படி மறக்க முடியும்?

  • • •

கேள்வி 9: ‘அரசு அதிகாரிகள் மூடநம்பிக்கைகளுக்கு அடிபணியக்கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடுத்து அதிகாரிகள் முறையாக அதனை பின்பற்றுவார்களா?

– ஏட்டு ஏகாம்பரம், ஏனாத்தூர்.

பதில் 9: நல்ல அறிவுரை கூறியுள்ள உயர்நீதிமன்றம் தங்களது செயல்பாட்டில் நிஜமாக்கினால் வரவேற்கலாம். நடைமுறையில் மாற்றம் வந்தால் நாட்டுக்கு நல்லதே!

  • • •

கேள்வி 10:  திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பினைப் படிக்கும் போது அரசுத் தரப்பு, கோவில் மற்றும் தர்கா நிர்வாகங்கள், வஃக்பு வாரியம், பொது அமைப்புகளின் வாதங்களை எள் முனை அளவு கூட பரிசீலினை செய்யாமல் சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற முடிவோடு இருந்து கொண்டு வழங்கிய தீர்ப்பு போல் உள்ளதே?

– மன்னை சித்து, மன்னார்குடி – 1.

பதில் 10: நாம் விளக்கி எழுதிய அறிக்கையே (8.1.2026 ‘விடுதலை’) இதற்குத் தெளிவான பதில் ஆகும். படித்துப் பயன் பெறுக!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *