திருவாங்கூர் சமஸ்தானம் (17) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’

8 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

சிறப்புக் கட்டுரை, ஞாயிறு மலர்

 

ஆரங்கோட்டுக் கரையில் இருந்தது கல்பகச்சேரி இல்லம் (மனா) தேச மங்கலத்திற்குச் செல்லும் முக்கிய சாலையிலிருந்து வளைந்து கோயிலுக்குச் செல்லும் வழியில், கொஞ்ச தூரம் நடந்து சென்றால் பழைய கார்த்தியாயினி கோயிலுக்கு எதிர்ப்புறம் இருக்கும் அந்த மனா (இல்லம்). கல்பகச்சேரி அஷ்டமூர்த்தி நம்பூதிரிப் பார்ப்பனரின் ‘மனா’ அது. கல்பகச்சேரி வீட்டில் ஒரே கொண்டாட்டம்.

அஷ்டமூர்த்தி நம்பூதிரிக்கு அன்று பெண் குழந்தை பிறந்ததால்தான் அந்த மகிழ்ச்சி! கல்பகச்சேரி அஷ்டமூர்த்தி நம்பூதிரி அந்த அழகியப் பெண் குழந்தைக்கு “தாத்ரிக் குட்டி” என்று பெயர் சூட்டினார். குழந்தை வளர, வளர அழகு வளர்ந்தது. பேரழகோடு வளர்ந்த அந்தச் சிறுமி அறிவிலும் சிறந்து வளர்ந்தாள். சிறு வயதிலேயே இயல்பாகவே கேள்வி கேட்டு, ஆய்வு செய்வதும், தர்க்கம் செய்வதும் அமைந்த பெண்ணாக வளர்ந்ததால், தாத்ரிக்குட்டி என்ற அந்தப் பெண் இயல்பிலேயே பிடிவாதம் பிடிக்கும் பழக்கமும் பெற்றிருந்தாள்.

தன் தந்தை அச்சன் நம்பூதிரி கல்பகச்சேரி அஷ்டமூர்த்தி நம்பூதிரியிடம் படிக்க வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள். நம்பூதிரிப் பார்ப்பனர்கள் இல்லங்களில் பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கும் பழக்கம் இல்லை. அதனால், அச்சன் நம்பூதிரி மகளைப் படிக்க வைக்கத் தயங்கினார். ஆனால், முடிவில் தாத்ரிக்குட்டியின் பிடிவாதமே வெற்றி பெற்றது. கல்பகச்சேரி அஷ்டமூர்த்தி நம்பூதிரி அருகில் இருந்த வேதக்கல்வி சொல்லிக் கொடுக்கும் நம்பூதிரிப் பார்ப்பனரின் இல்லத்திற்கு (ஓய்க்கில்லத்துக்கு), குருகுலத்திற்கு மகளைப் படிக்க அனுப்பினார்.

குருகுலத்தில் படிப்போடு, வாழ்வியலையும், தர்க்கப் புத்தியும் சேர்ந்தே வளர்த்துக் கொண்டு, வளர்ந்தாள் தாத்ரிக்குட்டி. அவளது அண்ணன் கதக்களி நடனம் ஆடுவதில் வல்லவன். அவன் வீட்டில் அந்த நடனப் பயிற்சி பெறுவதைக் கவனித்த தாத்ரிக்குட்டி, அதை அவளே பயின்று நாளடைவில் அண்ணனைவிடத் திறமையான கதக்களி நாட்டியக்காரியாக உருவானாள்.

பாட்டு கற்பது அவள் கனவாக இருந்தது. பாலத்தோல் நம்பூதிரிப் பார்ப்பனர் தாத்ரிக்குட்டியின் இல்லத்திற்கே வந்து, பாட்டு சொல்லிக் கொடுத்தார். கட்டுப் பெட்டிகளாக தரவாடுகளில், அந்தர்ஜனங்கள் அடிமைகளாக, ஊமைகளாக இருந்த நிலையில் ஓர் அறிவோடு, தர்க்க புத்தியோடு கூடிய பேரழகியாக தாத்ரிக்குட்டி வளர்ந்தாள். அவளின் தந்தை மகளுக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தார். குறியேடத்து ராமன் நம்பூதிரி என்ற வரனை முடிவு செய்து திருமணமும் நடந்தது.

திருமணம் ஆன அன்றிரவு முதலிரவு. தாத்ரிக்குட்டிக்கு எதிர்பாராத அதிர்ச்சி. குறியேடத்து ராமன் நம்பூதிரியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மணப் பெண்ணைப் பார்க்க உள்ளே வந்ததோ குறியேடத்து ராமன் நம்புதிரிக்குப் பதில் அவளது அண்ணன் நம்ப்யாத்தன் நம்பூதிரி பார்ப்பான். ஒட்டு மொத்தமான ஆண்கள் மேலே பகையுணர்ச்சி தாத்ரிக் குட்டிக்கு ஏற்பட்டது அப்பொழுதுதான்.

சிறு வயதிலிருந்தே அவள் அழகில் மயங்கி தவறாக நடந்தவர்கள் பலர். அதிர்ச்சிக்குரிய நிகழ்வாக அவளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் அவள் தந்தையும், தனயனும்கூட உண்டு. சிறு வயதில் பாட்டுச் சொல்லிக் கொடுக்க வந்தவனும் தாத்ரிக்குட்டியுடன் தவறாக நடந்தான். ஆனால், பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்தப் பேரழிகிக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?

தாத்ரிக்குட்டி சிறுவயது முதலே ‘கதகளி’ ஆட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாள். அந்நாளில் கேரளாவில் ‘காஷங்ஙல் சங்கர பணிக்கர்’ மிகவும் புகழ்பெற்ற, தலைசிறந்த கதகளிக் கலைஞராகத் திகழ்ந்தார். கீசகன் வேடத்தில் மிகவும் புகழ்வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் அவர். செம்மந்தட்ட சிவன் கோயிலுக்கு காகவுங்ஙல் சங்கர பணிக்கர் வந்து கீசகன் வேடத்தில் ஆடிய கதகளி ஆட்டத்தைப் பார்த்து மனம் பறிகொடுத்தாளாம் தாத்ரிக்குட்டி. ஆனால், தாத்ரிக்குட்டியின் இந்தக் காதலும், காமத்தில்தான் முடிந்தது. காவுங்ஙல் சங்கர பணிக்கரிடம் திருமணம் செய்து கொள்ள தாத்ரிக்குட்டி கேட்டபோது சமூக சட்டங்களைக் காட்டி அவர் நழுவி விட்டார்.

இதே சங்கர பணிக்கர் பின் ஒரு கட்டத்தில் தாத்ரிக்குட்டியை மணக்க முன்வந்தபோது, தாத்ரிக்குட்டி “கோழையான நீ வேடம் தரித்த கீசகன்தான். ஆனால், நான் விரும்புவது உண்மையான வீரனான கீசகனையோ, இராவணனையோதான்” என்று மறுத்துவிட்டாள். இதுபோன்ற பல பாலியல் வன்முறைகள் தாத்ரிக்குட்டிக்கு ஆண்களைப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு வளர்ந்தது.

பெண்களுக்கு, முக்கியமாக அந்தர் ஜனங்களுக்கு எதிராக நிலைபெற்றிருந்த ஆணாதிக்க பாலியல் அராஜகத்திற்கெதிராக அதே பாலியல் ஆயுதத்தை வைத்துப் போராடுவதென்று முடிவெடுத்தாள். பாலியல் இச்சைக்களுக்காகவோ, பணத்திற்காகவோ இன்றி பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமே அவளின் செயல்பாடுகளில் முன்னிலை வகித்தது. தாத்ரிக்குட்டியின் அறிவும், ஆற்றலும், ஆண்களைப் பழிதீர்க்கும் திட்டமிடலுக்கு உதவியது.

தாத்ரிக்குட்டியின் காவலுக்கு கூடவே இருக்கும் தாசிக்கு (வேலையாளுக்கு) தாத்ரிக்குட்டி மேல் அளவிறந்த அன்பும், பற்றும் உண்டு. அதைத் தாத்ரிக்குட்டி பயன்படுத்தத் திட்டமிட்டாள். அவள் உதவியுடன் ஊரின் புறத்தில் ஒரு வீட்டை எடுத்து தங்கள் பழிதீர்க்கப் பயன்படுத்திக் கொண்டாள். கோயில்களுக்குச் செல்வது, சொந்தமில்லையென்றாலும் அருகில் உள்ள ‘இல்லங்களுக்குச் செல்வது, குளத்திலோ, புழா(ஆறு)விலோ குளிக்கப் போவது என்ற சாக்கில் குறியேடத்து மனவிலிருந்து தன் தாசியோடு அந்த வீட்டிற்குச் செல்லத் தொடங்கினாள் தாத்ரிக்குட்டி.

வெளியே அவள் செல்லும்பொழுது, தாசி அந்தர்ஜனம் வருவதை கட்டியங்கூறி முன் செல்வதும், மறைகுடையும் அவளின் அடையாளத்தை வெளியே தெரியாமல் மறைத்தது. சமூகத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து, தன் தாசி மூலம் தாத்ரிக்குட்டி தொடர்பு கொள்ளத் தொடங்கினாள்.

இப்படி அவள் தொடர்பு கொண்ட சமூகத்தில் பெரிய மனிதர்கள் என்ற பெயர் பெற்ற ஆண்களின் எண்ணிக்கை 65. ஆனால், இந்தச் செய்தி வெளியில் பரவலாயிற்று. தாத்ரிக்குட்டியின் சொந்தக்காரர் கண்டஞ்சாத வாசுதேவன் நம்பூதிரி என்ற பார்ப்பனர்தான் தாத்ரிக்குட்டியின் மீது சந்தேகம் கொண்டார். (தான் நெறிபிறழ்ந்தவள், தன்னை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவளே கண்டஞ்சாத வாசுதேவன் நம்பூதிரியிடம் ரகசியமாகத் தெரிவித்ததாகத் தகவல்.) தாத்ரிக்குட்டி மீது விசாரணை நடத்த வேண்டுமென்று வாசுதேவன் நம்பூதிரிதான் கொச்சி மகாராசாவிடம் அனுமதி பெற்றார்.

தாத்ரிகுட்டியின் மீது ஸ்மார்த்த விசாரத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. இந்த விசாரணை 40 நாட்கள் நடந்தது. தாத்ரிக்குட்டியின் தொடர்பாளர்கள் சமூகத்தின் உயர் மட்டத்தில் இருந்தவர்கள் என்பதால் விசாரணை செய்தி கசியத் துவங்கியதும் அவள் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் முயற்சிகள் நடந்தன. அதனால் அரசர் குற்றஞ்சாட்டிற்கு ஆளான தாத்ரிக்குட்டி வைக்கப்பட்ட அஞ்சாம்புராவிற்கு பலத்த காவல் போட்டார். ‘பட்டச்சன்மார்’ என்றழைக்கப்பட்ட ஸ்மார்த்தர்கள்தான் வழக்கமாக இந்த விசாரணைகளை நடத்துவர். பரம்பரையாக இந்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள் நடத்தும் இந்த விசாரணை அறிவியல்பூர்வமானதாகவும், அனுபவத்தோடும் இருக்கும்.

தாத்ரிக்குட்டியின் உயிருக்கு ஆபத்து இருந்ததால் செம்மந்தட்டில் மட்டும் விசாரணை நடத்தாமல் பள்ளிமனை, இரிஞாலக்குட ஆகிய ஊர்களிலும் நடந்தது. தாத்ரிக்குட்டி இந்தப் பாலியல் நிகழ்வில் ஆண்களும் பங்காளிகள் என்பதால் அவர்களையும் தீர விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தினாள். பெருமக்கள் சபை கூடி அவள் கேட்பதில் உள்ள நியாயத்தை ஏற்றுக் கொண்டது. ஸ்மார்த்த விசாரணையில், விசாரணை செய்யும் ஸ்மார்த்தர்களக்குக் கையூட்டு (லஞ்சம்) கொடுத்து ஆண்கள் (ஜாரன்கள்) பெரும்பாலும் தண்டனையிலிருந்து தப்பிக் கொள்வதுதான் வழக்கம். இதையெல்லாம் நன்கு உணர்ந்திருந்த தாத்ரிக்குட்டி மிக முன்யோசனையுடன் சில செயல்களைச் செய்து வைத்திருந்தாள்.

தன்னோடு இருந்தவர்கள் அனைவரின் பெயர், ஊர், பொறுப்பு, அங்க அடையாளங்களை திறமையாக  சேகரித்து வைத்திருந்தாள். ஸ்மார்த்தர்கள் விசாரணையின்பொழுது கேட்ட கேள்விகளுக்கு சற்றும் சலனமோ, வெட்கமோ இல்லாமல் தாத்ரிக்குட்டி நின்று பதிலளித்தாள். ஒவ்வொரு பதிலும் ஆண்களைப் பழி தீர்க்கும் எண்ணத்தை வெளிப்படுத்துவதாகவே இருந்தது. அஞ்சாம்புராவில் இருந்த “சாதனத்திடம்” (தாத்ரிக்குட்டி)யிடம், குறியேடத்து இல்லத்தில் ‘தாசி விசாரம் தொடங்கியது.

சிறப்புக் கட்டுரை, ஞாயிறு மலர்

அதே நேரம் கொச்சி மகராசாவின் சிப்பாய்கள் சாதனம் சொன்ன ஜாரன்களைப் பற்றிய ரகசிய விசாரணை மேற்கொண்டனர். சில நம்பூதிப் பார்ப்பனர்கள் மாற்றுப் பெயரை சாதனத்திடம் கூறியிருந்தனர். அரசரின் சிப்பாய்கள், நம்பூதிரிகள் சபையில், அவர்கள் உண்மைப் பெயர்களைச் சொல்லி அழைத்ததும்,அவர்கள் பதில் கொடுக்க அவர்களும் மாட்டிக் கொண்டனர். அஞ்சாம்புராவில் இருந்த ‘சாதனம்’ (தாத்ரிக்குட்டி) ஸ்மார்த்தர்கள் கேள்விக்கான பதில்கள் எதையும் மறைக்கவில்லை.

அதனால், கொடுந் தண்டனைகள் எதற்கும் பெரிய அளவில் சந்திக்க நேரவில்லை. அவள் கூறிய அறுபத்தி நான்கு ஆண்களுக்கும் அரசு அதிகாரி (புறக்கொய்யா) அழைப்பாணை அனுப்பி விசாரத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவளுடன் தொடர்பு கொண்ட 64 ஆண்களில் இருவர் இறந்து விட்டனர். மீதி 62 பேரிடம் விசாரணை நடந்தது. 65ஆவது ஆள் யார் என்று கேட்டதற்கு அந்த ‘சாதனம்’ அந்தப் பெயரைச் சொல்ல மறுத்து விட்டாள். 65ஆவது ஆளின் பெயரை ஸ்மார்த்தர்கள், பணிப்பெண் மூலம் கேட்டதற்கு ஒரு சிகப்புக் கல் மோதிரத்தைக் காட்டி இந்த மோதிரத்தின் சொந்தக்காரர் பெயரையும் கூற வேண்டுமா? என்று சாதனம் கேட்டாள்.

அந்த மோதிரத்தில் அரச குடும்ப அடையாளம் இருந்ததால், ஸ்மார்த்தர்கள் அவசர, அவசரமாக, ‘வேண்டாம், வேண்டாம்” என்று தடுத்து விட்டனர். தாத்ரிக்குட்டி கூறியது அனைத்தும் உண்மை என்று ஜாரன்களிடம், ஸ்மார்த்தர்கள் தனித்தனியே நடத்திய விசாரணைகள் மூலம் தெளிவானது. அதில், நம்பூதிரிப் பார்ப்பனர்கள் ஜாதிப்பிரஷ்டம் (விலக்கம்) தண்டனைக்கு ஆளானார்கள். கீழ்ஜாதி நாயர்கள் ஜாதி விலக்கத்தோடு, நாடு கடத்தலுக்கும் ஆளானார்கள். ‘சாதனம்’ குறியேடத்து இல்லத்தின் ஏடுகளிலிந்து பெயர் நீக்கப்பட்டாள். அவளுக்கு அந்த இல்லத்தில் ‘பிண்டம்’ வைத்தனர்.

‘பிண்டம்’ வைக்கும் சடங்கு (இறந்த பிறகு செய்யும் சடங்கு) முடிந்த பின் விசாரணை நடத்திய ஸ்மார்த்தர்களுக்கும், விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும் குறியேடத்து இல்லத்தில், “சுத்த போஜனம்” நடத்தப்பட்டது.

1905இல் நடைபெற்ற இந்த ஸ்மார்த்த விசாரத்தில் அரசின் உயர்மட்டத்தில் இருந்தவர் இருந்ததால், அதற்குப் பின் ஸ்மார்த்த விசாரம் என்ற விசாரணைக் கொடுமையே தடை செய்யப்பட்டது.

தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்தான் திருவாங்கூர் நாட்டில் கடைசி விசாரணை என்று அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாத்ரிக்குட்டியின் விசாரணைப் பற்றிய குறிப்புகள் அரசின் ஆவணப் பாதுகாப்புத் துறையின் (எர்ணாகுளம்) ஸ்மார்த்த விசாரம் கோப்புகளில் ‘எக்ஸ்டென்ஷன் 86, எண் 8இல் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை நடத்திய ஸ்மார்த்தன் ‘வட்டசோமயாரத்து ஜாதவேதன் நம்பூதிரியின் அறிக்கை அந்த ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் தாத்ரிக்குட்டியின் கதை முழுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரலாறு நூல்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளது.

1905க்கு முன் பல நூற்றுக்கணக்கான ஸ்மார்த்த விசாரங்கள் நடந்துள்ளன. அந்தர்ஜனங்கள் தண்டிக்கப்பட்டு விட்டதால் அவர்களுக்குத் தரவாடுகளில் ‘பிண்டம்’ வைத்து விடுவதால் அந்தப் பெண்களின் எண்ணிக்கை தெரியவில்லை. ஆண்கள் அதேபோல் தண்டனைக்கு ஆளாகவில்லை. உடலியல் தேவைகளுக்காக தாத்ரிக்குட்டி இந்த வழியை மேற்கொள்ளவில்லை.

அவள் ஆசார நியமங்களிலும், வேத உபநிடதங்களிலும் புலமை பெற்றவள். கிழட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்களை மணந்த இளம் அந்தர்ஜனங்கள் பட்ட கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதே அவள் நோக்கமாக இருந்திருக்கும். எந்தப் பாலுணர்வால் ஆண்கள், அந்தர்ஜனங்களை பாலியல் கொடுமை செய்தார்களோ, அதே பாலியல் உணர்வை ஆயுதமாக்கி, தாத்ரிக்குட்டி, அந்தர்ஜனங்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தாள்.

எப்பொழுதும் தம் இளம் மனைவிகள் மீது சந்தேகப்பட்டு, தவறே செய்யாமல் இருந்தாலும், அவர்களை ‘சாதன’மாக்கி  அஞ்சாம்புராவில் அடைத்து, செய்யப்பட்ட கொடுமைகள், தாத்ரிக்குட்டியால் முடிவுக்கு வந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ‘மார்பு வரி’ விதித்து, அரை நிர்வாணமாக அலைய விட்டதற்கு முடிவு கட்டியது நாஞ்செலியின் மரணம். அதேபோல் அந்தர்ஜனங்கள் மேல் சூட்டப்பட்ட அவமானங்கள் தாத்ரிக்குட்டியால் நீங்கியது. கேரளப் பெண்களுக்கு இவர்கள் இருவரின் தியாகம் மானத்தையும், மரியாதையும் மீட்டுத் தந்தது.

(Ref: “தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்” by  ஆலங்கோடு லீலா கிருஷ்ணன்”)

(தொடரும்…)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *