21–ம், 73–ம்!
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திர ஜனக், தனது 73 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இவரது பிறந்த நாளில் இவர் நடத்தும் கல்வி நிறுவனத்திற்கு வந்த காங்கிரசை உடைத்து, பா.ஜ.க.வில் இணைந்து தற்போது ஒன்றிய அமைச்சராக இருக்கும் ஜோதிராதித்திய சிந்தியாவின் 21 வயது மகன் காலில் விழுந்து தேவேந்திர ஜனக் ஆசிர்வாதம் பெறுகிறார்.
அமைச்சரின் மகனோ அவரைத் தடுக்காமல் அப்படியே நின்று ஆசிர்வாதம் செய்கிறார்.
காரணம், இவர் சிந்தியா மன்னர்களின் வாரிசாம்.
நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், மன்னர் வம்சத்தின் சிறிய பையன் காலில் கூட விழும் கலாச்சாரம் இன்றும் வட இந்தியாவில் உள்ளது.
‘மானமும், அறிவும் மனிதர்க்கழகு’ என்றார், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
மனிதனுக்கு அடையாளம் அவனின் சுயமரியாதை!
ஆனால், வடமாநிலங்களில் என்ன நடக்கிறது?
யார் காலிலும், யாரும் விழக்கூடாது என்பதுதான் சுயமரியாதைக்கான இலக்கணம்!
அந்த உணர்வு, வட மாநிலங்களில் இல்லாதது ஏன்? தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், நிலைமை வேறு. காரணம், ஒரு நூற்றாண்டுக்குமுன் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் தாக்கமாகும்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்றால், வட மாநிலங்களில் அவ்வளவு இளக்காரம்! அதுவும் நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள 73 வயது முதியவர் – அவனோ 21 வயதுள்ள பொடியன்! என்ன கொடுமை இது!
உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருக்கக்கூடிய சாமியார் ஆதித்யநாத், தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், முதல் நாளே அரசு அதிகாரிகள் அந்தப் பகுதிக்குச் சென்று, சோப், வாசனைத் திரவியம் முதலியவற்றைக் கொடுக்கும் நிலை!
வடக்குக்கும், தெற்குக்கும் இடையே உள்ள சித்தாந்தப் போர் என்னவென்று புரிகிறதா?
– மயிலாடன்
