சென்னை, ஜன.9 தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் நடத்தப்படும் 49ஆவது சென்னை புத்தகக்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று (8.1.2026) தொடங்கியது.
இந்தப் புத்தகக்காட்சியைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறந்த படைப்பாளிகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர்மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளை வழங்கினார். கவிதைக்காக சுகுமாரன்,சிறுகதைக்காக ஆதவன் தீட்சண்யா,நாவலுக்காக இரா.முருகன், உரைநடைக்காக பேராசிரியர் பாரதிபுத்திரன், நாடகத்துக்காக கே.எஸ்.கருணா பிரசாத் மற்றும் மொழி பெயர்ப்புக்காக வ.கீதா ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் 49ஆவது ஆண்டாக நடைபெறும் அறிவுத் திரு விழாவான இந்த புத்தகக் காட்சியைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வீட்டுக்கு ஒரு நூலகம்
1977இல் வெறும் 13 அரங்குகளுடன் தொடங்கப்பட்ட இந்தப் புத்தகக் காட்சி, இன்று 900 அரங்குகளாக வளர்ந்திருப்பதே வெற்றிக்கான சாட்சி. அதிகளவிலான மக்கள் புத்தகக் காட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கில் நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன்.தமிழ்ச் சமூகம், அறிவில் சிறந்த சமூகமாக உலகத்தால் மதிக்கப்பட வேண்டும் என்பதே நமது எண்ணம். அதற்கான அறிவுப் புரட்சியை ஏற்படுத்த நம்முடைய மண்ணில் தோன்றியதுதான், திராவிட இயக்கம்.இந்த அறிவுப் புரட்சிக்கு நாம் பயன்படுத்திய முக்கியமான கருவிதான் புத்தகங்கள்.
அதனால்தான் தந்தை பெரியார், “என்வாரிசுகள் என்பது, எனது புத்தகங்கள்தான்” என்று கூறினார். அண்ணா, “வீட்டுக்கு ஒரு நூலகம் அமையுங்கள்” என்றார். கலைஞர், “புத்தகங்கள் மூலம்உலகைப் படி யுங்கள்” என்று கட்டளையிட்டார். “அறிவுக்கான தீ பரவட்டும்” என்று அந்த தலைவர்கள் சொன்ன பாதையில் தான், எங்கள் அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
என்னைச் சந்திக்க வருகிறவர்கள் பொன்னாடைகளும் பூங்கொத்துகளும் வழங்குவதற்குப் பதிலாகப் புத்த கங்களை வழங்கவேண்டும் என்று நான் சொன்னேன். அப்படிப் பெறப்பட்ட புத்தகங்களை, மாணவர்கள், இளை ஞர்கள், படிப்பு வட்டங்கள், நூலகங் களுக்கு தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு இதுவரைசுமார் 4 லட்சம் புத்தகங்களை வழங்கியிருக்கிறோம்.
அறிவுத் தேடலையும், வாசிப் புப் பழக்கத்தையும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் திருச்சியில் காமராசர் அறிவுலகம், கோவையில் பெரியார் அறிவு லகம், திருநெல்வேலியில் காயிதே மில்லத் அறிவுலகம், சேலத்தில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் அஞ்சலை அம்மாள் அறிவுலகம் அமைப்பதற் கான பணிகளை செய்துகொண்டு இருக்கிறோம்.
தினமும் ஒரு மணி நேரம்
நூலக வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசுஎடுக்கும் முயற்சிகளை தமிழ்நாடு மக்கள்,குறிப்பாக இளை ஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு இளைஞர்கள் சந்தித்துக்கொண்டால், “இப்போது நீங்கள் படித்துகொண்டு இருக்கும் புத்தகம் என்ன?” என்று புத்தகங்களை மய்யமாக வைத்துப் பேசும் அளவுக்கு இருக்கவேண்டும். மக்கள் அனைவரும் தினமும் ஒரு மணி நேரமாவது படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
படிக்க படிக்க நம் எண்ணங்கள் வளரும்.எண்ணங்களை எழுத்துகளாகப் படைக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.சென்னையிலும், சுற்றுப்புற மாவட்டங்களிலும் இருப் பவர்கள், இந்தப் புத்தகக்காட்சிக்கு வர வேண்டும். விடுமுறை நாட் களில், குழந்தைகளை இங்கு அழைத்து வந்து புத்தகங்களை அறிமுகப் படுத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பபாசி தலைவர்ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்றார். நிறைவாக, செயலாளர் எஸ்.வயிரவன் நன்றி கூறினார்.
