வாசிங்டன், ஜன. 9– ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கடும் எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஏற்கெனவே இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனை 500 சதவீதமாக உயர்த்தும் அதிரடி மசோதாவிற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
டிரம்ப்பின் கடும் நிலைப்பாடு
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “இந்தியா தன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம்” என்று குறிப்பிட்டிருந்தார். ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்தால் அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தற்போது பொருளாதார ரீதியிலான அழுத்தத்தை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக புதிய மசோதா ஒன்றை அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் மற்றொரு உறுப்பினர் புளுமெந்தருடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார். இந்த மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இது விரைவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தகவல்
இது குறித்து குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மசோதாவிற்கு ஒப்புதல்
அதிபர் டிரம்ப்புடன் நடைபெற்ற ஆலோசனையில், நானும் செனட்டர் ப்ளூமென்டாலும் இணைந்து தயாரித்த புதிய மசோதாவிற்கு அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
இந்தியா – சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்புக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
ரஷ்யாவிற்கு முற்றுப்புள்ளி
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் வேளையில், புதின் தொடர்ந்து அப்பாவி மக்களைக் கொன்று வருகிறார். புதினின் போர் இயந்திரத்திற்குத் தேவையான நிதியை மலிவான ரஷ்ய எண்ணெய் மூலம் வழங்கும் நாடுகளைத் தண்டிக்க இந்த மசோதா அதிகாரம் அளிக்கும்.
இந்தியாவுக்கு அழுத்தம்
சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்குத் தேவையான பெரும் செல்வாக்கை இந்த மசோதா அதிபர் டிரம்ப்பிற்கு வழங்கும்.
அடுத்த வாரமே அமல்?
அடுத்த வாரமே இரு கட்சிகளின் (குடியரசு மற்றும் ஜனநாயகம்) வலுவான ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சட்டமானால், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 சதவீதம் வரை வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
