சென்னை, ஜன. 9– ‘ஆர்டர்லி’ முறையை ஒழிக்க மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் குழுவை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவல் துறையில் ‘ஆர்டர்லி’ முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு குற்றம்சாட்டியிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாட்டில் ஒருவர்கூட ஆர்டர்லியாக இல்லை என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், உண்மை நிலையை அறிய தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் 7.1.2026 அன்று விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், ஆர்டர்லி முறையைப் பின்பற்றக்கூடாது என மாநில அளவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க மாநில அளவில் குழு ஒன்றை அமைக்கலாம் என யோசனை தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும், அதுதொடர்பான புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் இரு காவல் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், இந்தக் குழு அமைப்பது தொடர்பாக இரண்டு வாரங்களில் உள்துறைச் செயலர் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங் களுக்கு ஒத்திவைத்தனர்.
