இதுதான் திராவிடர் கழகம்! இவர் தான் தமிழர் தலைவர்!!-தகடூர் தமிழ்ச்செல்வி கழக மகளிரணி செயலாளர்

8 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘தாயுமானவர்’ என்ற புதிய ‘ஆல்-இன்-ஒன்’ திட்டம், மாநிலத்தின் ஏழ்மையான குடும்பங்களுக்கு வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வியை எவ்வாறு ஒருங்கிணைக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’வில் சிறப்புக் கட்டுரையாக, அரசாங்கம் ஒவ்வொரு திட்டத்தையும் முறையாக செயல்படுத்துகிறது; ‘வறுமைக்கு எதிரான தாக்குதலை தொடங்குகிறது’என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

1980 ஆண்டு வாக்கில்  கோபிசெட்டி பாளையத்தில் நடந்த ஒரு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் தான், தமிழர் தலைவர் அவர்களை முதன்முதலாக  சந்தித்தேன்.

அன்று அவருடைய பேச்சைக் கேட்டுத் தான்  நான் திராவிடர் கழகத்தில் சேர்ந்தேன்..

அதற்கு முன்னர் ஓர் ஆண்டாகவே இணையர் தோழர்  ஊமை ஜெயராமன் அவர்கள் என்னிடம் பலமுறை சொல்லிப் பார்த்தும்,படாத பாடுபட்டும் நான் கேட்க வில்லை ..

தமிழர் தலைவரின் அந்த பேச்சு தான் என்னை முழுதாக மாற்றி இயக்கத்தில் சேர வைத்தது.

திராவிடர் கழகம்

அன்று தொடங்கி தமிழர் தலைவர் அவர்களின் பேச்சை தொடர்ந்து கேட்கின்ற வாய்ப்பை பெற்றது என் வாழ்வில் மிக மிக நல்ல நேரங்கள் ..

அண்மையிலே 28.12.2025 அன்று ஓசூர் பொதுக்கூட்டத்தில் அவருடைய பேச்சு மிக மிக சிறப்பாகவும் காலப் பொருத்தத்தோடும் இருந்தது.

அவர் தன்னுடைய உரையில், தமிழ்நாடு  அரசியலில் அண்மைக் காலங்களில் நிறைய பைத்தியங்கள்  உலா வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறிவிட்டு, அதற்கு பொருத்தமாக ஒரு நிகழ்ச்சியை சொன்னார்கள்.

நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் ஒரு மன நல காப்பகத்திற்கு சென்றிருந்தாராம்.

திராவிடர் கழகம்

அப்பொழுது அங்கே இருந்த மனநலம் பாதித்த, மருத்துவப் பயனாளர்கள் (தமிழர் தலைவர் அவர்கள் சமீப காலத்தில்  அறிமுகப்படுத்திய வார்த்தை) பத்துக்கும் மேற்பட்டோர்,பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களிடம் ” நான் தான் இந்த நாட்டின் பிரதமர்” ” நான் தான் இந்த நாட்டின் பிரதமர்” என்று  கூறினார்களாம். ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு அதிர்ச்சியாகி விட்டதாம்.

வந்ததும் வராததுமாய், ‘‘நான்தான் முதல்வர்! நான் தான் முதல்வர்! ’’ என்று பிதற்றிக்  கொண்டு  நீர்க்குமிழி கனவுகளை காணும் சினிமா நடிகர் உட்பட்டவர்களுக்கு இது கன கச்சிதமாக  பொருந்துகிறது.

பைத்தியங்களுக்கு தேவை! பதில் அல்ல, வைத்தியம்!  என்று ரத்தினச் சுருக்கமாக கூறி, காவிக்குள் நுழைந்து கதகதப்பாக இருக்கும், தமிழ் தேசிய வியாதிகளை அடையாளம் காட்டினார்.

திராவிடர் கழகம்

நீட் நுழைவுத் தேர்வு பற்றிய ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரையின் பகுதி என்பது மிக மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

நீட் தேர்வை ஒழிப்பதில் தி.மு.க. சாதித்தது என்ன?  என்ற  எடப்பாடி அய்யா அவர்களின் கேள்வி அறிவு நாணயம் அற்றது என்று கூறி தெளிவாக விளக்கினார்.

நீட் நுழைவுத் தேர்வு என்பது இன்றைக்கு இவர்கள் கூட்டணி வைத் திருக்கின்ற ஒன்றியத்தில் ஆளுகின்ற  பாஜக அரசின் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்டது.

.ஒரு சட்டத்தை கொண்டு வருகிற வர்களால் தான் அந்த சட்டத்தை நீக்க முடியும் என்ற ஒரு சிறு குழந்தைக்கும் புரியக்கூடிய உண்மையை ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஒருவருக்குத் தெரியாமல் போவது கெட்ட வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

அடுத்ததாக தமிழர் தலைவர் அவர்கள் அந்த இறுதியில் கேட்ட ஒரு கேள்வி மிக முக்கியமான கேள்வி..

இவ்வளவு தூரம் பேசுகின்ற எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, கூட்டணி வைக்கின்ற பாஜக கட்சியின், பிரபலங்களான பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடமோ அல்லது அமித்ஷா அவர்களிடமோ,  கூட்டணி நிபந்தனைகளில் ஒன்றாக நீட் தேர்வை விலக்க வேண்டும் என்கின்ற கேட்கின்ற துணிச்சலோ தைரியமோ இருக்கிறதா என்று கேட்டார்.

திராவிடர் கழகம்

இன்னும் தெளிவாக, காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்ற முத்தமிழறிஞரை போல, தமிழ்நாட்டுக்கு மட்டுமாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று பாஜக தலைமையிடம் கேட்க துணிச்சல் உண்டா? என்ற கேள்வியையும் முன் வைத்தார்.

மேலும் அவர், ‘‘பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள், அரைவேக்காடு அண்ணாமலைகள் ஏன் நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்று தமிழ்நாட்டுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை’’ என்ற கேள்வியையும் முன் வைத்தார்கள்.

அரியலூர் அனிதா தொடங்கி 30–க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங் களை தமிழ்நாடு பறி கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில்  களப்பலி ஆகியிருக்கிறார்கள், அவர்களுக்கான குரல் தான் ஆசிரியர் அவர்களின் குரல்.

ஒரு ஊரில் ஒருவருக்கு ஒரு கொலைகாரர் நண்பராக இருந்தாராம்; அந்தக் கொலைகார நண்பரிடம் நன்றாக உறவாடிக் கொண்டே, அய்யோ இந்த நாட்டில் இவ்வளவு கொலைகள் நடக்கிறதே என்று பதறினாராம்.

அதுபோலத்தான் இருக்கிறது எடப்பாடி அவர்களின் கதையும்!.

நீட் தேர்வை கொண்டு வந்த பிஜேபி யுடன் கூட்டணி வைத்துக் கொண்டு கொஞ்சம் கூட அறிவு நாணயம் இல்லாமல்  திமுக மீது பழி போடுவது அயோக்கியத்தனத்தின் உச்ச கட்டம்.

தமிழர் தலைவர் பேசுகிற பொதுக் கூட்டங்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக வந்தாலே அவர் ஆற்றுகின்ற உரையே மிகச் சிறப்பாக இருக்கும்.

சமீபத்தில் ராசிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் ஆசிரியர் அவர்கள் மிக உற்சாகமாக மகளிர் பற்றி மகளிரின் உண்மைகள் பற்றியும், திராவிட மாடல் அரசு மகளிருக்காக என்னென்ன சட்டங்களை திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்பதை பற்றியும் விரிவாக பேசினார்கள்.

அதேபோல ஓசூர் பொதுக்கூட்டத்திலும்,  மகளிர் தோழர்களை மிக உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசினார்.

அவர் தன்னுடைய பேச்சின் போது, ‘‘மகளிர் தோழர்கள் முன்வரிசையில், நாற்காலிகளில் கம்பீரமாக அமர்ந் திருக்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் பெரியாழ்வாரை பற்றி பேசுகிறார்கள்;. பெரியாழ்வார் காலகட்டத்தில் பெண்கள் இதுபோல நாற்காலிகளில் உட்கார முடியுமா?

தந்தை பெரியார் அவர்கள் வரலாற்றுக் காலத்துக்குப் பிறகு தானே பெண்கள் இப்பொழுது ஆண்களுக்கு சமமாக அதுவும் முன் வரிசையில் துணிச்சலோடு அமர்கிறார்கள்’’ என்றும் குறிப்பிட்டார்.

அவர் அப்போது பேசும்போது எங்களுக்கு தந்தை  பெரியார் அவர்களின் ஒரு உரையில், ‘‘தாய்மார்கள் எல்லாம் சுதந்திரமாக இருக்கணும்! ஆகாயத்தில் பறக்கணும்! என்று குறிப்பிட்டது தான் நினைவுக்கு வந்தது

தந்தை பெரியாரின் குரல் மீண்டும் மீண்டும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மேனாள்  அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அவர்களுடைய  கெட்டிஸ் பர்க் உரை என்ற புகழ்மிக்க உரையில், ஒன்றைக் குறிப்பிடுவார்.

‘‘இந்த மண்ணின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த அத்தனைப் போராளிகளின் உடல்கள் இந்த மண்ணில் புதைக்கப்பட்டிருக்கலாம். நாளை இதே போல என்னுடைய உடலும் தோழர் டக்ளஸ் அவர்களின் உடலும் கூட புதைக்கப்படலாம்..

ஆனால் மண்ணிற்காக நாங்கள் எழுப்பிய  போர்க்குரல் புதைக்கப்படாமல்  என்றென்றும் இந்த மண்ணில் ஒலித்துக் கொண்டே இருக்கும்’’ என்று பேசியிருப்பார்.

அதைப்போலவே தந்தை பெரியாரின் குரல் இங்கே மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு  மிகப்பெரிய வரலாற்று காரணமாக விளங்குகிறார் தமிழர் தலைவர்.

தொடர்ந்து பேசிய தமிழர் தலைவர் அவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பற்றி மிகுந்த புள்ளி விவரத்தோடு சிறப்பாக பேசினார்கள்..

வேளாண் சட்டங்கள் எவ்வாறு விவசாயிகளின் ஒரு கடுமையான போராட்டத்தால் திரும்ப பெறப்பட்டதோ, அதேபோல மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குளறுபடிகளும் சரி செய்யப்படும்.

அட்ரஸ் தெரியாத அரைவேக்காடு அண்ணாமலைகள் கூட அன்றைக்கு சொன்னார்கள் வேளாண் சட்டத்தை ஒன்றிய அரசு நிச்சயமாக திரும்பப் பெறாது என்று.

ஆனால், தொடர்ந்து வீதியில் கடும் குளிரிலும் பணியிலும் வெயிலிலும் மழையிலும் விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது என்பதையும் கோடிட்டு காட்டினார்..

தொடர்ந்து வீதிகளில் மக்கள் இறங்கி நடத்தும் போராட்டம் அதனை சாதித்துக் காட்டும்!

நீங்கள் சட்டத்தை மாற்றவில்லை என்றால் மக்கள் உங்கள் ஆட்சியை மாற்றுவார்கள் என்ற எச்சரிக்கை மணியையும் ஒலித்தார்!

இந்த தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயர் மகாத்மா காந்தி என்பதை மாற்றியதற்கு அடிப்படை காரணமே தமிழ்நாடு தான்.

இந்தியாவிலேயே ஜெய் சிறீராம் என்று சொல்லாத ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அதனை வி.பி.ராம்ஜி என்றாவது சொல்ல வைக்கலாம் என்றுதான் இந்த பெயர் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்..

தமிழ்நாடு என்றைக்கும் சிறீ ராமசாமி பெரியார் ஜி தான் ..அதனை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது என்றும் ஆசிரியர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

காங்கிரஸ்  பேரியக்கத்தின் ஒரு மிகப்பெரிய பலவீனமே , காங்கிரஸ் ஆட்சிக்கால திட்டங்களைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் அதிக அளவு  விளம்பரப்படுத்தி பேசுவதில்லை.

ஆசிரியர் அவர்களின் உரைகளைக் கேட்டாவது அவர்கள் பேசுவதற்கு முன் வர வேண்டும்.

பேசுகின்ற பொழுது மேற்கோள்கள்  காட்டுவதில் தமிழர் தலைவரின் பேச்சு மிகுந்த தனிச்சிறப்போடு இருக்கும்.

இன்றைக்கு நிறைய பொய் முகங்களை பார்த்து இளைஞர்கள், மயங்கி கிடப்பதை சுட்டிக்காட்டும் விதமாக, ‘‘இன்றைக்கு நிறைய இளைஞர்கள் வானவில்லின் அழகைப் பார்த்து மயங்கி, இந்த வானவில் வானத்திலேயே தொடர்ந்து நிலைத்திருக்கும் என்ற ஒரு மாயையான கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள்’’ என்றும் சுட்டிக்காட்டினார்..

இன்றைக்குத் தன்னுடைய சினிமாக் கவர்ச்சியை மட்டும் பயன்படுத்தி அரசியல் களத்தில் இறங்கிப் போதையில் இருக்கின்ற தலைவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் இளைஞர்களே! என்ற எச்சரிக்கை மணி தான் இது.

இந்த இடத்தில் ஒரு கருத்தாழமிக்க அதே நேரத்தில் கருத்து பொருத்தமாகவும் உள்ள ஒரு மேற்கோளை நினைவுபடுத்துகிறோம்.

தமிழர் தலைவர் அவர்களிடம், ‘‘இன்றைக்கும் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றனவே!

அப்படி என்றால் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு தோற்றுவிட்டது என்று தானே அர்த்தம்!  இதற்கு தங்களின் பதில் என்ன? என்ற கேள்வியை முன்வைக்கின்ற பொழுது,

ஆசிரியர் அவர்கள், ‘‘இன்றைக்கு சாலைப்போக்குவரத்து ஆக இருந்தாலும் சரி, ரயில் போக்குவரத்துகளாக இருந்தாலும் சரி! அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியோடு மிகுந்த முன்னேற்றம் அடைந்திருக்கின்றன.

எல்லா பயணங்களும் ஆபத்தின்றியே முடிந்து கொண்டிருக்கின்றன.சில நேரங்களில் விதிவிலக்காக விபத்துக்கள் நேரிடலாம்.

அதற்காக அந்த போக்குவரத்து தொழில்நுட்பத்தையே அழித்து விடலாமா? அல்லது அந்த தொழில் நுட்பம் தோல்வி அடைந்து விட்டது என்று சொல்லலாமா?’’ என்ற எதிர் கேள்வியை முன் வைத்தார்கள்.

இன்னும் ஒரு படி மேலாக தந்தை பெரியாரின் தத்துவம் இன்றைக்கும் தேவைப்படுகின்ற தத்துவமாக இருக்கின்றது..

அதனை தொடர்ந்து நாம் முன்னெடுக்க வேண்டும் என்ற செய்தியை தான் இது போன்ற ஆணவப் படுகொலைகள் நமக்கு  படிப்பினையை உணர்த்துகின்றன என்றும் பதிலளித்தார்.

கழகத்தில் பேச்சாளர்கள் அனை வருக்குமே இது ஒரு மிகப்பெரிய பாடமாக இருந்தது.

இங்கே நான் சுட்டிக்காட்டி இருக்கின்ற உரை என்பது ஒரு உதாரணத்திற்குத் தான்.

இதுபோல ஆயிரக்கணக்கான கூட்டங்களில் ஆசிரியர் உரை நிகழ்த்தியிருக்கிறார்.

93 வயதிலும் சிறிதும் துவளாமல் தொடரும் அவரது தொண்டறத்தைப் போற்றுவோம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *