சமஸ்கிருதம்!
தலைநகர் டில்லியில் சங்கராந்தி விழா பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் ஒன்றிய வேளாண் துறை அமைச்சருமான சிவ்ராஜ்சிங் சவுகான் கலந்துகொண்டார்,
அதில் காளை மாடுகளைக் கொண்டுவந்து நிறுத்தி பார்ப்பனர் அர்ச்சகர் ஒருவர் சமஸ்கிருத மந்திரம் படிக்க, பாஜகவினர் திரும்பச்சொல்லி இனிதாக சமஸ்கிருத சங்கராந்தியைக் கொண்டாடினார்கள் (7.1.2026).
இந்தியாவில் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ்.கோல்வால்கர் தனது ‘ஞானகங்கை’ (Bunch of Thoughts) என்ற நூலில் பச்சையாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். காலால் இட்ட கட்டளையை தலையால் நிறைவேற்ற வேண்டியதுதானே
பி.ஜே.பி.யின் பிறவிக் கடமை!
ஆர்.எஸ்.எஸ். அகில பாரதீய காரிய காரி மண்டல் (செயற்குழுக் கூட்டத்தில்) ஒன்றிய பி.ஜே.பி. அரசின் காபினெட் அமைச்சர்கள் தோன்றி, விளக்கம் அளிக்கவில்லையா?
அமைச்சர்களின் செயல்பாடுகள்பற்றி எல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைமை மதிப்பாய்வு (Review) செய்யவில்லையா?
இராணுவ தளபதி உள்பட, இராணுவ அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் தோன்றி விளக்கங்கள் அளித்ததுண்டே!
அரசு ஊழியர்கள்
ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்க 56 ஆண்டுகளாக தடையிருந்தது. ஆனால், 2024, ஜூலையில், ஒன்றிய பி.ஜே.பி. அரசு இந்தத் தடையை நீக்கியது (9.7.2024).
அரசுப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சேரலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பி.ஜே.பி.யைப் பொறுத்தவரையில், இந்தியாவில் மாநிலங்களே கூடாது – ஏக இந்தியா – ஹிந்துராஷ்டிரம் என்பதே!
அதற்கான அடிப்படைப் பணிகளை – ஆணைகளை, கட்டமைப்பகளை ஒன்றிய பி.ஜே.பி. அரசு ஆரம்பித்துவிட்டது. மனிதர்கள்தான் சமஸ்கிருதம் பேசுவோர் 0000.2 என்ற நிலையில், மாட்டுக்காவது சொல்லிக் கொடுப்போம் எ்னற முடிவுக்கு வந்துவிட்டார்களோ!
‘‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்!’’ என்று பி.ஜே.பி. முழக்கத்தின் பின்னணி புரிகிறதா?
மனிதனைவிட மாட்டை மதிக்கும் இந்த ‘மகா மேதைகளின்’ புத்தித் தீட்சண்யத்தைப் புரிந்துகொள்வீர்!
– மயிலாடன்
