ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் டில்லி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வழக்கமான பல்லவியைப் பாடினார்.
ஒன்றிய அரசு வசூலிக்கும் வரிகளில் தங்களுக்கு “நியாயமான பங்கு” வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் தென் மாநிலங்கள் குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அதிருப்தி தெரிவித்தார்.
கருநாடகா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள், தாங்கள் செலுத்தும் வரிப்பணத்திற்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து நிதிப் பகிர்வு கிடைக்கவில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
இது குறித்துப் பேசிய பியூஷ் கோயல், “நாங்கள் செலுத்தும் வரிக்கு இணையான பங்கைத் தர வேண்டும் என்று கருநாடகா, தமிழ்நாடு, தெலங்கானா போன்ற சில மாநிலங்கள் கூறுகின்றன. இதைவிட ஒரு குறுகிய மனப்பான்மை (Petty thinking) இருக்க முடியாது,” என்று விமர்சித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாகப் பார்க்காமல், மாநில வாரியாகப் பிரித்துப் பார்ப்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு உகந்தது அல்ல என்று கூறினார்.
உரிமையைக் கேட்டால் பா.ஜ.க.வினர் பார்வையில் குறுகிய மனப்பான்மை என்று பெயரா? இது ஏதோ தனிப்பட்ட இருவருடைய கொடுக்கல் வாங்கல் பிரச்சினையா? மாநில மக்களின் பிரச்சினை அல்லவா!
ஜி.எஸ்.டி.யில் ஒன்றிய அரசு மாநில வாரியாக அளிக்கும் தொகை எவ்வளவு?
ஒரு ரூபாய்க்கு ஒன்றிய அரசு எவ்வளவு திருப்பித் தருகிறது?
பீகாருக்கு – ரூ.7.06
உ.பி.க்கு – ரூ.2.73
மத்திய பிரதேசத்துக்கு – ரூ.2.42
தமிழ்நாட்டுக்கு – ரூ.0.29
கருநாடகாவுக்கு – ரூ.0.15
இவற்றைப் பார்க்கும் போது ஏனிந்த வேறுபாடு என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உரிமைக்குரலை எழுப்பினால் அது குறுகிய மனப்பான்மையாம்!
உண்மையைச் சொல்ல ேவண்டும் என்றால் இப்படி மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டுவதுதான் குறுகிய மனப்பான்மை!
உண்மை இவ்வாறு இருக்க, 05.01.2026 அன்று புதுக்கோட்டையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘‘மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பதை விட அதிகம் தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளோம்’’ என்று கையில் சில காகிதங்களை வைத்துக்கொண்டு ஆட்டி ஆட்டி ஹிந்தியில் பேசினார். அதை அப்படியே தமிழில் மொழி பெயர்க்கும் நபரும் கையில் சில காகிதங்களை வைத்துகொண்டு அமித்ஷா பாணியில் தமிழில் பேசினார்.
இதில் எது உண்மை? கடந்த ஆண்டு ‘‘எல்லா மாநிலத்திற்கும் ஒரே மாதிரிதான் தருவோம்; கூடக் குறைய கேட்பது தேச விரோதம்’’ என்று கூறினார். ஆனால், தமிழ்நாட்டிற்கு வந்து ‘‘பிற மாநிலங்களை விட அதிகமாக தமிழ்நாட்டிற்கு நிதி தந்துள்ளோம்’’ என்று அமித்ஷா கூறுவது பச்சைப் பொய் அல்லவா?
இதே பியூஸ்கோயல் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சில தி.மு.க. தலைவர்களின் பேச்சுக்கள் எல்லாம் ஹிந்து விரோத நடவடிக்கை; ஸநாதனத்தின் மீது அவர்கள் வைக்கும் வெறுப்பு – ஓட்டு மொத்த ஹிந்துக்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.
06.01.2026 அன்று வெளியான திருப்பரங்குன்றம் தொடர்பான தீர்ப்பை ‘வெற்றிவேல், வீரவேல் முருக பக்தர்களுக்கு நீதி கிடைத்துள்ளது’ என்று சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார். மதச்சார்பற்ற கொள்கையை வலியுறுத்தும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒன்றிய அமைச்சர் ஓர் இந்து மத வெறியராகப் பேசலாமா என்ற கேள்விக்கு என்ன பதில்?
